
பண்ருட்டி,ஜன.17: தமிழக மக்களின் தன்மானம், இனமானம், மொழி உணர்வு, வாழ்வுரிமை ஆகியவை விழிப்புடன் பேணிக் காக்கப்படும் என தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் கூறினார்.
÷பண்ருட்டியில் அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது: தை முதல் நாள் பொங்கல் அன்று தமிழக வாழ்வுரிமை கட்சியை சென்னை போரூரில் தொடங்கினோம். இதில் முஸ்லீம், தலித், கிறிஸ்தவர்கள் மற்றும் தமிழ் ஜாதி பிரதிநிதிகள் உள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
÷நோக்கம்: ஜாதி, சமயம், பொருளாதாரம் அடிப்படையில் பிரிந்து கிடக்கும், தன்மானத்தை இழந்து தவிக்கின்ற அனைத்துத் தமிழக மக்களை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு ஊட்டி, போர் குணமூட்டி வளர்ப்பது.
÷மொழி, அரசியல், பொருளாதாரம், பண்பாடு, கனிமவள உரிமைகளை பிற இனத்தவர் ஆட்சி அதிகாரத்தினாலும், மாற்றுக் கொள்கை பற்றிய மயக்கத்தாலும் தமிழினம் பறிகொடுத்து தனித்தன்மை இழந்து நிற்கிறது. தமிழக வாழ்வுரிமை கட்சி மூலம் தமிழக மக்களை ஒருங்கிணைத்து இதனை வென்றெடுப்போம். இழந்த பெருமையை ஈட்டெடுப்போம்.
÷கருத்து, குறிக்கோள் அடிப்படையில் தமிழர்கள் உரிமை மேம்படவும், கச்சத்தீவு, மீனவர், முல்லைப்பெரியாறு, காவரி, பாலாறு, கூடங்குளம், நெய்வேலி நிலக்கரி நிறுவனம், கடலூர் தொழிற்பேட்டை, ஈழத்தமிழர், புலம்பெயர்ந்த தமிழர்கள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்து போராடுவோம்.
÷தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனராக நான்(வேல்முருகன்) உள்ளேன். தலைவராக பேராசியர் தீரன், பொது செயலராக இடப்பாடி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் காவேரி, இணை பொது செயலராக பூந்தமல்லி போரூர் எம்.எஸ்.சண்முகம், அமைப்புச் செயலராக தாரமங்கலம் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் மே.ப.காமராஜ் ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர்.
கொடி: தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொடி மஞ்சள், பச்சை, சிகப்பு என மூன்று வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மஞ்சள் நிறம், தமிழ்மக்களின் மொழி, இனம், பண்பாடு, சாதி, சமயம் அமைப்புகளை கடந்து ஒரு தாய் மக்கள் நாம் என்ற உணர்வை குறிக்கும்.
பச்சை நிறம், நஞ்சில்லா உணவு, நோயற்ற வாழ்க்கை, இயற்கை வழி வேளாண்மை, மரம் வளர்ப்பு மூலம் நிலம், நீர், காற்று மாசு அடையாமல் எங்கும் பசுமை பூத்து குலுங்க வேண்டும் என்பதைக் குறிக்கும். சிகப்பு நிறம், மேற்கண்ட கொள்கைகளை வென்றெடுக்க இனம் காக்க ஈகை செய் என்ற தியாகத்தை, தொண்டு ஈகத்தை குறிக்கும் என்றார் வேல்முருகன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.