மதுரை, ஜன.24: சர்க்கரை நோய்-உயர் ரத்த அழுத்த நோய்-மார்பகப் புற்றுநோய் உள்ளிட்டவற்றைத் தடுக்கும் வகையில் "தொற்றா நோய்' பரிசோதனைத் திட்டம் எனும் புதிய சிறப்புத் திட்டத்தை பிப்ரவரி மாதம் முதல் தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாநகராட்சி சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் இதற்கென தனிப்பிரிவு தொடங்கப்பட்டு நோயாளிகளுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஆண்-பெண் மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள், உதவியாளர் என 5 பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்படும்.
இதற்காக மாவட்டந்தோறும் சுமார் 60 மருத்துவர்கள், 70 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் செவிலியர்களுக்கு நோய்ப் பரிசோதனை முறைகள், பரிசோதனை முடிவுகளை கணினியில் பதிவு செய்யும் முறை ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் இந்தத் திட்டம் படிப்படியாகச் செயல்படுத்தப்படும். மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இத்திட்டத்துக்கான ஆயத்த நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மதுரை மாவட்டத்தில் 51 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 6 அரசு வட்டார மருத்துவமனைகள், மாநகராட்சியில் உள்ள 10 சுகாதார நிலையங்கள், மற்றும் 4 தாலுகா அரசு மருத்துவமனைகளில் தொற்றா நோய் பரிசோதனைக்கான பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தப் பிரிவுகளுக்காக புதிதாக 70 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 110 அரசு மருத்துவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்தில் 35 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மார்பகப் புற்றுநோய், மகளிர் பிறப்பு உறுப்பு புற்றுநோய் ஆகியவற்றுக்கான நவீன பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். பிரச்னை கண்டறியப்பட்டு, தொடர் சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிறப்பு அடையாள அட்டையும், கணினியில் பதிவு செய்யப்பட்ட எண்ணும் வழங்கப்படும்.
இந்த அடையாள அட்டை உள்ளவர்கள் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் அரசு மருத்துவமனைகள் வரையில் சிகிச்சை பெறலாம். இவ்வாறு சிகிச்சை பெறுவோருக்கு தனி படுக்கை வசதிகளும், அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் தினந்தோறும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் நிலையில், அவ்வப்போது சிறப்பு முகாம்கள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் முதல் கட்டமாக சுமார் ரூ.25 லட்சம் செலவிடப்பட உள்ளது.
சிறப்பு நிதியின் மூலம் பரிசோதனை ஆய்வகம், கணினி, பரிசோதனைக்கான மருத்துவச் சாதனங்கள், வேதிப் பொருள்கள் வாங்கப்பட உள்ளன. இந்தத் திட்டம் அந்தந்த மாவட்ட சுகாதாரத் திட்ட அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்படும். வரும் 2013-ஆம் ஆண்டுவரை செயல்படுத்தப்படும் இந்தச் சிறப்புத் திட்டம், அதன் பின்னர் சுகாதாரத் துறையின் மூலம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அப்போது இந்தத் திட்டத்தில் ஒப்பந்த முறையில் பணிபுரியும் செவிலியர்கள், சுகாதாரத் திட்டத்தின் கீழ் பணிபுரிவர் என்றும் சுகாதாரத் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து மதுரை மாவட்ட சுகாதாரத் திட்ட அலுவலர் டாக்டர் நடராஜனிடம் கேட்டபோது, இத்திட்டத்தின்கீழ் பணிபுரியும் செவிலியர்களுக்கு மாதம் ரூ.4000 ஊதியம் வழங்கப்படும். அவர்களுக்கான பயிற்சியும் முடிந்துவிட்டது என்றார்.
ஆம்புலன்ஸ் இணைப்பு: புதிய திட்டத்துக்குப் பயன்படும் வகையில் 108 தொடர்பு எண் கொண்ட அவசர ஆம்புலன்ஸ் சேவையானது அரசு மருத்துவமனைகளுக்கு இடையே செயல்படுத்தப்பட உள்ளது.
இதுவரை 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை மூலம் சம்பவ இடத்திலிருந்து மருத்துவமனைக்கு நோயாளிகளைக் கொண்டுவரும் வகையில் மட்டும் இருந்தது. இனி புதிய திட்டப்படி நோயாளிகளை ஒரு அரசு மருத்துவமனையிலிருந்து மற்றொரு அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல முடியும் என்றும் சுகாதாரத் திட்ட அதிகாரிகள் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.