38 ஆண்டுகளாக சீரமைப்புக்கு காத்திருக்கும் சாலை!

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர்-டி.சுப்புலாபுரம் இணைப்புச் சாலை கடந்த 38 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் மண்சாலையாக போக்குவரத்துக்குத் தகுதியற்ற நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள்
38 ஆண்டுகளாக சீரமைப்புக்கு காத்திருக்கும் சாலை!
Updated on
1 min read

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர்-டி.சுப்புலாபுரம் இணைப்புச் சாலை கடந்த 38 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் மண்சாலையாக போக்குவரத்துக்குத் தகுதியற்ற நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்தப் பிரச்னையைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்ட நூழைவு வாயிலில் அமைந்துள்ள திம்மரசநாயக்கனூர் ஊராட்சியில் சுமார் 5000-க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள்.

இவர்கள் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள டி.சுப்புலாபுரத்துக்கு வங்கிகள், தபால் நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், விவசாயக் கூலி வேலைகளுக்கும், நெசவுக் கூடங்களுக்கும், மாணவர்கள் கல்லூரிகளுக்கும் சென்று வருகின்றனர். ஆனால் முறையான சாலை வசதி கிடையாது.

1974-ம் ஆண்டு திம்மரசநாயக்கனூரில் இருந்து டி.சுப்புலாபுரம் செல்வதற்காக டி. பொம்மிநாயக்கன்பட்டி வழியாக சுமார் 3 கிலோ மீட்டர் இணைப்பு தார்ச் சாலை ஏற்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயனடைந்தனர்.

சாலை போடப்பட்டு சில மாதங்களில் மழை மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் பாலம் உடைந்தது. அதன் பின் சாலையைச் சீரமைக்காததால் தார் பெயர்ந்து சாலை மோசமடைந்தது. அதன்பின், கடந்த 38 வருடங்களாக இன்றுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் இப் பகுதி மக்கள் டி.சுப்புலாபுரம் பகுதிக்கும் அப் பகுதி மக்கள் இங்கு வருவதற்கும் பல கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டியுள்ளது. எனவே, இச் சாலையைச் சீரமைத்து மினி பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து திம்மரசநாயக்கனூர் ஊராட்சித் தலைவர் எம்.ரெங்கராஜ் கூறியதாவது: டி.சுப்புலாபுரத்துக்கு தேனி-மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்று வருவதால், பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது. இச் சாலையில் போக்குவரத்து அதிகமாக இருப்பதால், விபத்துகளும் ஏற்படுகின்றன.

ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்டல் சாலை அமைத்துள்ளோம். மீதி தூரத்திற்கு சாலை அமைக்க வேண்டும். நான் பல முறை மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தியும், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கையும் வைத்தோம். இது குறித்து பரிசீலனை செய்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com