வி.பி. கலைராஜன் வீடு தாக்கப்பட்ட வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்

வி.பி. கலைராஜன் வீடு தாக்கப்பட்ட வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்

சென்னை, ஜூலை 11: அ.தி.மு.க.வைச் சேர்ந்த வி.பி. கலைராஜன் எம்.எல்.ஏ. (படம்) வீடு தாக்கப்பட்டது தொடர்பான கிரிமினல் வழக்கின் விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வி.பி.கலை
Published on

சென்னை, ஜூலை 11: அ.தி.மு.க.வைச் சேர்ந்த வி.பி. கலைராஜன் எம்.எல்.ஏ. (படம்) வீடு தாக்கப்பட்டது தொடர்பான கிரிமினல் வழக்கின் விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வி.பி.கலைராஜனின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஆகும். அங்குள்ள அவரது வீட்டில் கலைராஜனின் தந்தை, சகோதரர் உள்ளிட்டோர் வசித்து வந்தனர்.

இந்நிலையில் 2007 ஏப்ரல் 6-ம் தேதி சிலர் அவரது வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் கலைராஜனின் தந்தை, சகோதரர் உள்ளிட்டோர் காயமடைந்தனர். வீட்டிலுள்ள ரூ.75,000 மதிப்புள்ள சொத்துகள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் வி.பி.கலைராஜன் புகார் அளித்தார். அதில் தி.மு.க.வினர் சிலர்தான் தன் வீடு மீது தாக்குதல் நடத்தியதாக தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அப்போது தமிழக சட்டப்பேரவையிலும் கலைராஜன் பிரச்னை எழுப்பினார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது முதல்வராக இருந்த மு.கருணாநிதி உறுதியளித்திருந்தார்.

எனினும் சம்பவம் நடந்து ஐந்து ஆண்டுகள் முடிந்த பிறகும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கலைராஜன் ரிட் மனு தாக்கல் செய்தார். ஏற்கெனவே எனக்கு கைபேசி மூலம் சிலர் கொலை மிரட்டல் விடுத்தனர். இது தவிர ஒரத்தநாட்டில் உள்ள எனது வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இது தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை. இதில் அரசியல் பின்னணி இருப்பதாகக் கருதி போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

எனவே இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று அவர் தனது ரிட் மனுவில் கோரியிருந்தார்.

இந்த ரிட் மனு நீதிபதி கே. சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுவதில் எந்தவித ஆட்சேபமும் இல்லை என மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி அண்மையில் உத்தரவிட்டார். இவ்வளவு காலம் இந்த வழக்கில் விசாரணை முடிக்கப்படாதது வருத்தத்துக்குரியது என்று குறிப்பிட்டுள்ள நீதிபதி, டி.எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமித்து விரைவில் குற்றப்பத்திரிகையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com