விதை நேர்த்தி செய்வது எப்படி?

புதுச்சேரி: விதை நேர்த்தி செய்வதன் மூலம் விதையினால் பரவும் நோய்களையும், அதை உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சாணங்களையும் விவசாயிகள் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். விதை நேர்த்தி செய்வது குறித்து
விதை நேர்த்தி செய்வது எப்படி?
Published on
Updated on
2 min read

புதுச்சேரி: விதை நேர்த்தி செய்வதன் மூலம் விதையினால் பரவும் நோய்களையும், அதை உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சாணங்களையும் விவசாயிகள் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

விதை நேர்த்தி செய்வது குறித்து புதுச்சேரியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் துறை வல்லுநுர் நி.விஜயகுமாரிடம் கேட்டபோது, அவர் கூறியது: விதை நேர்த்தியை இரு விதமாக செய்யலாம். அவை உலர் விதை நேர்த்தி மற்றும் ஈர விதை நேர்த்தி. இந்த இரு முறைகளையும் நெல் விதைகளுக்குப் பயன்படுத்தலாம். காய்கறி விதைகளுக்கு உலர் விதை நேர்த்தி முறையும், கரும்பு மற்றும் மரவள்ளி கரணைகளுக்கும், வாழை கன்றுகளுக்கும் ஈர கரணை கன்று நேர்த்தி முறையும் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்யலாம்.

நெல் உலர் விதை நேர்த்தி முறை

ஒரு கிலோ நெல் விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் ஃபுளோரோஸன்ஸ் உயர்ரக பாக்டீரியம் மருந்தை விதைக்கலக்கும் கருவியில் போட்டு, கருவியின் மூடியை மூடி முன்பக்கம் 10 தடவைகளும் பின்பக்கம் 10 தடவைகளும் ஆக மொத்தம் 20 தடவைகள் விதைக் கலக்கும் கருவியின் கைப்பிடி கொண்டு சுற்றுவதால் விதைகள் விஞ்ஞானரீதியில் நேர்த்தியாகும்.

அதன்பின் விதைகளை முளைக்கச் செய்து விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். விதை கலக்கும் கருவிகள் வேளாண் துறையின் அலுவலகங்களிலும் உழவர் உதவியகங்களிலும் வாடகைக்கு கிடைக்கும்.

விதைகலக்கும் கருவி கிடைக்காத வேளையில் ஒரு ஏக்கருக்கு தேவையான நெல் விதைகளை கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பெரிய கோணிப் பையில் நிரப்பி ஒரு கிலோ நெல் விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் ஃபுளோரோஸன்ஸ் உயர்ரக பாக்டீரியம் மருந்தை கோணிப் பையில் போட்டு இரண்டு புறமும் இரண்டு ஆட்களை கொண்டு மேலும் கீழும் 20 தடவைகள் குலுக்குவதால் விதைகள் விஞ்ஞானரீதியில் நேர்த்தியாகும்.

அதன்பின் விதைகளை முளைக்கச்செய்து விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.

நெல் ஈர விதை நேர்த்தி முறை

ஒரு ஏக்கருக்கு தேவையான நெல் விதைகளை சிறிய சிறிய கோணிப் பைகளில் சிப்பங்களாக நிரப்பி ஒரு கிலோ நெல் விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் ஃபுளோரோஸன்ஸ் உயர்ரக பாக்டீரியம் மருந்தை கோணிப் பையில் போட்டு சிப்பங்களை வயல் நீர்த் தொட்டிகளில் போட்டு நீரில் நனைய வைக்கும்போது விதைகள் விஞ்ஞானரீதியில் நேர்த்தியாகிறது.

அதன்பின் விதைகளை முளைக்கச் செய்து விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.

காய்கறி விதைகள் உலர் விதை நேர்த்தி முறை

காய்கறி பயிர்களான கத்தரி, வெண்டை, மிளகாய், தக்காளி, முள்ளங்கி, கேரட் போன்றவற்றின் விதைகளை ஒரு கிலோ காய்கறி விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் ஃபுளோரோஸன்ஸ் உயர்ரக பாக்டீரியம் மருந்து அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா உயர்ரக பூஞ்சாண மருந்து கலக்கும்போது விதைகள் விஞ்ஞானரீதியில் நேர்த்தியாகிறது.

நேர்த்தியான விதைகளை விதைப்பதற்குப் பயன்படுத்த வேண்டும். மிளகாய் விதைகளை முளைப்புத்திறன் குறையும்போது ஒரு ஏக்கருக்குத் தேவையான மிளகாய் விதைகளை டை சோடியம் ஹைட்ரஜன் பாஸ்பேட் கரைசலில் (3.6 கிராம் ஃ 100 லிட்டர் தண்ணீர்) 2 மணி நேரம் ஊற வைத்து பின் விதைப்பதால் முளைப்புத் திறன் முழுமையடைகிறது.

பாகல் விதைகளை தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைத்து பின்பு ஈர மணலில் விதைகள் மறைந்த நிலையில் 2 அல்லது 3 நாள்கள் வைத்து ஈரம் காக்க வேண்டும்.

பின்பு, முளைப்பு வந்த விதைகளை நடவு செய்வதால் செடிகள் ஒரே சீராக வளரும். பரங்கி மற்றும் பூசணி விதைகளை விதைக்க ஒரு வாரத்துக்கு முன் 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து பின்பு நிழலில் உலர வைத்து எடுத்து விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.

காய்கறி விதைகளின் முளைப்புத் திறனை கூட்ட ஒரு கிலோ காய்கறி விதையுடன் 3 கிராம் ஹலோஜன் கலவையுடன் (ஐந்து பங்கு பிளீச்சிங் பவுடர், நான்கு பங்கு கால்சியம் கார்பனேட், ஒரு பங்கு அரப்புத் தூள்) நேர்த்தி செய்து விதைப்பதற்கு பயன்படுத்தலாம்.

மரவள்ளி கரணைகள்விதை நேர்த்தி

ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் பொட்டாசியம் குளோரைடு, 5 கிராம் துத்தநாக சல்பேட் மற்றும் 5 கிராம் இரும்பு சல்பேட் கலந்த கரைசலில் ஒரு ஏக்கருக்குத் தேவையான மரவள்ளி கரணைகளை 20 நிமிடங்கள் நனைத்து கரணை நேர்த்தி செய்வதால் கரணைகள் வறட்சியை தாங்கி வளர்வதோடு ஊட்டச்சத்து குறைபாடு இன்றி நன்கு வளரும்.

கரும்பு கரணைகள் விதை நேர்த்தி

கரும்பு விதை கரணைகளை 250 லிட்டர் தண்ணீரில் 125 கிராம் கார்பன்டசிம் மற்றும் 25 கிலோ யூரியா கலந்த கரைசலில் தோய்த்து நடவு செய்தால் கரணைகள் வறட்சியைத் தாங்கி வளர்வதோடு ஊட்டச்சத்து குறைபாடு இன்றி நன்கு வளரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com