ஈரோட்டில் ரூ.500 கோடி ஏற்றுமதி பாதிப்பு

ஈரோடு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதால், ஈரோட்டில் கடந்த 3 மாதங்களில் ரூ.500 கோடி மதிப்புள்ள ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.  ஈரோடு மாவட்டத்தில் இருந்து லுங்கிகள், போர்வைகள், துண்
ஈரோட்டில் ரூ.500 கோடி ஏற்றுமதி பாதிப்பு
Updated on
1 min read

ஈரோடு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதால், ஈரோட்டில் கடந்த 3 மாதங்களில் ரூ.500 கோடி மதிப்புள்ள ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

 ஈரோடு மாவட்டத்தில் இருந்து லுங்கிகள், போர்வைகள், துண்டுகள், கைக்குட்டைகள், திரைச்சீலைகள், சமையல் அறையில் பயன்படுத்தும் துணிகள், ஆயத்த ஆடைகள், பருத்தித் துணிகள், ஜமக்காளம் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து, கனடா, பிரான்ஸ், அரபு நாடுகள், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு இவை ஏற்றுமதியாகின்றன.

 ஈரோட்டில் உற்பத்தியாகும் ஜவுளிகளில் 60 சதவீதம் வரை ஏற்றுமதி செய்யப்படுவதாக விசைத்தறி வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவன (பெடக்சில்) தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரோட்டில் லுங்கி, துணி, ஆயத்த ஆடைகளும், சென்னிமலை, கவுந்தப்பாடி, அந்தியூர் பகுதிகளில் துண்டு, போர்வை, திரைச்சீலைகளும், பவானியில் ஜமக்காளமும் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

 ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரங்களில் இயங்கும் 90 ஏற்றுமதி நிறுவனங்கள் மூலமாக இவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 4 ஆண்டுகளுக்கு முன்பு 400-க்கும் மேல் இருந்த ஏற்றுமதி நிறுவனங்கள், பல்வேறு நெருக்கடி காரணமாக இப்போது 90 நிறுவனங்களாகக் குறைந்துவிட்டன. எஞ்சியிருக்கும் ஏற்றுமதி நிறுவனங்களும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட ஆர்டர்களை, இங்குள்ள பெரும்பாலான ஏற்றுமதி நிறுவனங்களால் குறிப்பிட்ட காலத்துக்குள் கொடுக்க முடியவில்லை.

 உள்நாட்டில் ஏற்பட்ட மின் பற்றாக்குறை, நூல் விலையேற்றம் காரணமாக இங்குள்ள நிறுவனங்களால் குறிப்பிட்ட காலத்துக்குள் ஆர்டர்களை முடிக்க முடியவில்லை. இந் நிலையில், ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடைந்துவிட்டதால் ஏற்றுமதியாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது.

 இதுகுறித்து, ஈரோடு துணி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கச் செயலாளர் எஸ்.சிவானந்தன் கூறியது:

 ஏப்ரலுக்கு முன்பு ஏற்றுமதியாளர்களுக்கான "டியூட்டி டிராபேக்' 12 சதவீதமாக இருந்தது. இப்போது 7 சதவீதமாக மத்திய அரசு குறைத்துவிட்டது. இதனால், ஏற்றுமதியாளர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது என்றார்.

 ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் என்.சிவநேசன் கூறியது:

 ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஈரோடு ஏற்றுமதியாளர்களுக்கு கடந்த 3 மாதங்களில் மட்டும் ரூ.500 கோடி ஏற்றுமதி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 இதனால், வங்கிகளில் வாங்கிய கடனைச் செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் தொழில் தொடங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு டாலர் மதிப்பைக் கணக்கிட்டு கடன் வழங்கப்படுகிறது. இதேபோல, உள்நாட்டு ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் டாலர் மதிப்பைக் கணக்கிட்டு கடன் வழங்கினால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தாலும், டாலர் மதிப்பு வீழ்ச்சி அடைந்தாலும் ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com