உப்பளங்களில் படியும் அனல் மின் நிலைய சாம்பல்: உப்பு உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியாகும் சாம்பல், உப்பளங்களில் பரவுவதால் அவை மாசுபடும் சூழல் நீடித்து வருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்ய
உப்பளங்களில் படியும் அனல் மின் நிலைய சாம்பல்: உப்பு உற்பத்தி பாதிப்பு
Updated on
2 min read

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியாகும் சாம்பல், உப்பளங்களில் பரவுவதால் அவை மாசுபடும் சூழல் நீடித்து வருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என உப்பள உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுóத்துள்ளனர்.

 தூத்துக்குடி மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தொழிற்சாலைப் பெருக்கத்தால் கடந்த சில ஆண்டுகளாகவே உப்பு உற்பத்தி குறைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கீழஅரசரடி பகுதியில் உள்ள உப்பளங்களில் உற்பத்தி மிகவும் குறைந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. கீழஅரசரடி பகுதியில் ஏறத்தாழ 500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளன. இங்குள்ள உப்பள உரிமையாளர்கள் பெரும்பாலானோர் சிறிய அளவில் மட்டுமே உப்பு உற்பத்தி செய்து வருகின்றனர். 2000 குடும்பத்தினர் இங்கு தொழிலாளர்களாக வேலைபார்த்து வருகின்றனர்.

 கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதியில் தொடங்கப்பட்ட தனியார் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியாகும் சாம்பல் உப்பளப் பகுதியில் பரவுவதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்படுவதாகவும், கழிவுகளை வெளியேற்றவே நேரம் போதுமானதாக இருப்பதாகவும் உப்பள உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட சிறிய உப்பு உற்பத்தியாளர் சங்கச் செயலர் ஏ.ஆர்.ஏ.எஸ். தனபாலன் கூறியது:

 தருவைகுளம், அய்யனார்புரம், கீழஅரசரடி பகுதியில் உள்ள உப்பளங்களில் 2000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உப்பளத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியாகும் சாம்பலானது வெட்டவெளியில் உள்ள உப்பளங்களில் பரவுகிறது.

 குறிப்பாக, தென்மேற்குப் பருவக்காற்று வீசும் காலங்களில் சாம்பல் அதிகளவில் பரவுவதால் உப்பு உற்பத்தி மிகவும் பாதிக்கப்படுகிறது. நல்ல உப்பை பிரித்தெடுப்பதிலேயே தொழிலாளர்களுக்கு நேரம் போதுமானதாக இருக்கிறது. கழிவுகள் அதிகமாவதால் உற்பத்தியாளர்களுக்கு எந்தவித லாபமும் கிடைப்பதில்லை. அனல் மின் நிலையத்தின் புகைபோக்கி ஏறத்தாழ 150 அடி உயரத்துக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. உப்பளத் தொழிலாளர்களின் நலனை கருத்தில்கொண்டு புகைபோக்கியின் உயரத்தை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 இல்லையெனில், இந்தப் பகுதியில் 500 ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளங்களில் உப்பு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்படும். உப்பளங்களில் ஏற்படும் பாதிப்புகளை சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டாலே இந்த விவரம் தெரியவரும்.

 இதுதொடர்பாக, பலமுறை மாவட்ட நிர்வாகத்துக்கும், சுற்றுச்சூழல் துறைக்கும் மனு அளித்துள்ளோம். இருப்பினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மின்சாரம் அவசியம் என்பதால் அனல் மின் நிலையத்தின் புகைபோக்கி உயரத்தை அதிகரிக்க மட்டுமே நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றார் அவர்.

 அனல் மின் நிலையங்கள் கருத்து: ஆனால், இந்தப் பிரச்னை தொடர்பாக தனியார் அனல் மின் நிலைய நிர்வாகத்தின் கருத்து வேறுவிதமாக உள்ளது. இதுகுறித்து அனல் மின் நிலைய உயர் அதிகாரி ஒருவர் கூறியது:

 எங்களது அனல் மின் நிலையத்தில் "எலக்ட்ரிக் ஸ்டாட்டிக் பிரபிட்டேட்டர்' என்ற நவீன இயந்திரம் பயன்படுத்தப்படுவதால் அதிக அளவிலான சாம்பல் வெளியாக வாய்ப்பு குறைவு. மேலும், மாவட்ட சுற்றுச்சூழல் துறையின் அறிவுரைப்படிதான் நாங்கள் புகைபோக்கியை அமைத்துள்ளோம். மற்றபடி இதுபற்றி கூற எதுவும் இல்லை என தெரிவித்தார்.

 உப்பளத் தொழிலாளர்களின் புகாரை புறந்தள்ளாமல் மாற்று ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வருமா என்பதே உப்பள உரிமையாளர்களின் தற்போதைய எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com