

மதுரை, ஜூலை 17: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பொற்றாமரைக் குளம் பக்கவாட்டு மண்டபங்கள் ரூ.4 கோடியில் சீரமைக்கப்படுகின்றன.
இதன் முதல்கட்டமாக ரூ. 50 லட்சத்தில் புதிதாக 10 கல்தூண்கள் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பொற்றாமரைக் குளம் புராதன பெருமைமிக்கது.
இந்திரன் பழி தீர்த்தது, வெள்ளை யானையின் சாபம் தீர்த்தது, நாரைக்கு முக்தி கொடுத்தது, தருமிக்கு பொற்கிழி அளித்தது, நக்கீரர் கரை ஏற்றி, இலக்கணம் உபதேசித்தது என பல திருவிளையாடல் புராண நிகழ்ச்சிகள் நடந்தேறியது இந்தப் பொற்றாமரைக் குளத்தில்தான்.
இக் குளத்தின் கிழக்குப்பக்க பிரா காரத்தையும், தூண்களையும் கி.பி. 1573-ல் வீரப்ப நாயக்கர் ஆட்சியிலும், தெற்குப் பக்கம் உள்ள பிராகாரம் கி.பி. 1578-ல் அப்பன்பிள்ளை என்பவராலும் கட்டப்பட்டது. இவற்றில் உள்ள தூண்கள் 10 அடி உயரமுடையவை.
தெற்குப் பிராகாரத்தில் உள்ள மண்டபத்தில் திருக்குறள் முழுமையாகவும், சிவஞானபோதம், அபிராமி அந்தாதி, கோயிலைப் பற்றிய விவரங்கள் ஆகியவை சலவைக் கற்களால் பதிக்கப்பட்டுள்ளன. இப் பிராகாரத்தின் மூலையில் விபூதி விநாயகர் சிலை உள்ளது. பிராகாரங்களில் கிழக்கில் தலா 16 தூண்களும், மேற்கில் தலா 16 தூண்களும் இரு வரிசைகளில் அமைந்துள்ளன.
தெற்கு, வடக்கு பிராகாரங்களில் தலா 20 தூண்கள் இரு வரிசைகளில் அமைந்துள்ளன.
பிராகாரங்கள் சுமார் 200 அடி நீளம் உடையவையாக உள்ளன. இதில் வடக்குப் பிரகாரத்தில் மூலிகை ஓவியங்கள் இருந்தன. அவை காலப்போக்கில் அழிந்த நிலையில், தற்போது குறிப்பிட்ட சில ஓவியங்கள் மட்டுமே புதுப்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பிராகாரங்களில் உள்ள கல் தூண்கள் பல நூற்றாண்டுகள் ஆனதால், புதுப்பிக்கப்படும் நிலையில் உள்ளன. முதல்கட்டமாக தெற்கு, கிழக்கு மண்டப கல் தூண்களைப் புதுப்பிக்க ரூ. 4 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ரூ. 50 லட்சம் செலவில் பெங்களூரிலிருந்து வரவழைக்கப்பட்ட கற்கள் மூலம் கலை வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள் கோவில் வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
முதலில் பொற்றாமரைக் குளத்தின் தெற்குப் பிராகாரத்தில் கிழக்குப் பகுதி சீரமைக்கப்படுகிறது. இப் பிராகாரத்தின் மேற்புற பாகு கற்களும் சீரமைக்கப்பட உள்ளதாக கோயிலின் பொறியியல் துறை அதிகாரிகள் கூறினர். தற்போது தயார் நிலையில் உள்ள கல் தூண்கள் தெற்குப் பிராகாரத்தில் பொருத்தப்படவுள்ளன. இவற்றை பொருத்தும் பணி ஓரிரு வாரங்களில் தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து திருக்கோயில் உதவிக் கோட்டப் பொறியாளர் பி. குமரன் கூறுகையில், திருக்கோயில் பொற்றாமரைக் குளத்தில் நீர் தேக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. களிமண் நிரப்பும் பணிகள் முடிவடைந்ததும் நீர் நிரப்பப்படும். அத்துடன், குளத்தின் பிராகாரங்களில் தெற்கு, வடக்குப் பிராகாரங்களில் புதிய தூண்களைச் சீரமைக்கும் பணியும் விரைவில் துவங்கும் என்றார்.
தெப்பக்குளம்: அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான தெப்பக் குளத்தின் மைய மண்டபத்தை சீரமைக்கும் பணியும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இங்குள்ள கோபுரங்கள் வர்ணம் பூசப்பட உள்ள நிலையில், மைய மண்டபத்தில் உள்ள மரங்களை அகற்றிவிட்டு பூங்கா அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கோயில் சார்பில் ரூ. 40 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.