

ஈரோடு: பவானிசாகர், மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் ஏற்பட்டுள்ள வறட்சியால் ஈரோடு மாவட்ட விவசாயிகள், குறுகிய கால பயிர்களைப் பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், மஞ்சள், கரும்பு, நெல் சாகுபடிப் பணிகள் 80 சதவீதம் வரை குறைந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி பாசனத்திலும், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய பழைய பாசனங்களிலும் சேர்த்து மொத்தமாக 2.5 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. பொதுவாக, கரும்பு மற்றும் மஞ்சள், வாழை, மரவள்ளி போன்ற ஆண்டுப் பயிர்களை அதிகமாகப் பயிரிடுவது வழக்கம்.
32.8 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட கீழ்பவானி அணையில் இப்போது 2.5 டி.எம்.சி. நீர் மட்டுமே உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி செய்யும் அணைகளின் மொத்தக் கொள்ளளவு 14 டி.எம்.சி. அவற்றில் இப்போதைய நீர் இருப்பு 2 டி.எம்.சி. மட்டும்தான்.
கோவை, திருப்பூர் குடிநீர்த் திட்டங்களுக்குக்கூட இது போதுமானது அல்ல. இதனால், கீழ்பவானி அணைக்கு அங்கிருந்தும் இனிமேல் நீர் கொண்டுவர இயலாது. தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு இதுவரை பொழியவில்லை. ஜூன் 1-ம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய பருவமழை, தூறலோடு நின்றுவிட்டது. 40 நாள்கள் ஆகியும்கூட பல இடங்களில் மழை தீவிரமடையவில்லை.
நடப்பு ஆண்டில் பருவமழை குறையக்கூடும் என்று வேளாண் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் பாசன நீருக்கு ஈரோடு மாவட்டத்தில் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் என்பதை இங்குள்ள விவசாயிகள் முன்கூட்டியே உணர்ந்துள்ளனர். இதன் காரணமாக ஆண்டுப் பயிரை பயிரிடாமல் குறுகிய காலப் பயிர்களை பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கொடுமுடி வட்டாரத்தில் பெரும்பாலான மஞ்சள் விவசாயிகள், இப்போது மக்காச்சோளம் பயிரிட்டு வருகின்றனர். கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இப்போது மஞ்சள் பயிர் முளைப் பருவத்தில் உள்ளது. காலிங்கராயன் பாசனத்துக்கு ஜூன் 15-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. மஞ்சள் நடவுப் பணி முழுமையாக முடியாத நிலையில் உள்ளது.
மஞ்சளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்து பயிரிட்டுள்ளனர். கிட்டத்தட்ட 3 பாசனங்களிலும் சேர்த்து இதுவரை 20,000 ஏக்கர் மஞ்சள் சாகுபடி நடைபெற்றுள்ளது. அணை தண்ணீர் இன்னும் ஒரு வாரத்துக்கு மட்டுமே திறக்கப்படும் நிலையில், பருவமழை பெய்தால் மட்டுமே இனி பயிரைக் காப்பாற்ற முடியும். இல்லையெனில் விவசாயிகளுக்குப் பெருத்த நஷ்டம் ஏற்படும். இப் பாசனங்களில் உள்ள நெல், மஞ்சள் பயிர்களை எப்படிக் காப்பாற்றுவது என்ற கேள்விக்குறி விவசாயிகள் மனதில் எழுந்துள்ளது.
இதுகுறித்து, தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சுபி.தளபதி கூறியது:
தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்தில் நெல், மஞ்சள் பயிர்களைக் காப்பாற்ற முடியாத நிலை உள்ளது. இதனால், 80 சதவீத விவசாயிகள் இந்த ஆண்டில் சாகுபடி செய்வதை நிறுத்திவிட்டனர். நெருக்கடியில் சிக்கியுள்ள விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் செ.நல்லசாமி கூறியது:
2002-03-ம் ஆண்டைப்போல 10 ஆண்டுகளுக்குப் பின் கடுமையான வறட்சி ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன. இருக்கும் தண்ணீரை வைத்து கால்நடை தீவனப்பயிர் பயிரிடுவதற்கே ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு ஏக்கர் நெல்லுக்குத் தேவைப்படும் தண்ணீரைக் கொண்டு 4 ஏக்கர் பரப்பில் ராகி, சோளம், கம்பு, வரகு, சாமை, திணை போன்ற சிறுதானிய பயிர்களைப் பயிரிட முடியும்.
இதற்கான விதை உள்ளிட்ட வகைகள் தாராளமாக கிடைக்க வேளாண் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மானியமும் வழங்க வேண்டும். போதிய அளவு நீர் இருந்திருந்தால் வழக்கமாக 40,000 ஏக்கர் பரப்பளவில் மாவட்ட அளவில் மஞ்சள் சாகுபடி நடந்திருக்கும்.
ஆனால், 20,000 ஏக்கர்தான் பயிரிட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 15,000 ஏக்கர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்தப் பயிரின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இதற்கு மேல் சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்கு விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.