

விருத்தாசலம், ஜூன் 12: அரசுப் பள்ளிகள் பலவற்றில் விளையாட்டுத் திடல் இல்லாததால் மாணவர்களிடம் மனச்சோர்வும், புத்துணர்ச்சியும் இல்லாத நிலை உள்ளது.
உடலும், மனமும் திடமாக இருந்தால்தான் எந்த செயலையும் தெளிவாக செய்ய முடியும். இதேபோல்தான் படிப்புக்கும் உடல் ஆரோக்கியம் மிக முக்கியமானது. விளையாட்டு வீரர்களிடையே பொதுவாக தன்னம்பிக்கை உணர்வும், விடாமுயற்சியும் இயல்பாகக் காணப்படும்.
இதற்குக் காரணம், ஒரு முறை விளையாட்டில் தோற்றுப்போகும் நிலை ஏற்பட்டாலும், அடுத்த முறை எப்படியாவது அந்த போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் உண்டாகும்.
விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களிடம் காழ்ப்புணர்வு இல்லாமல், ஒழுக்கம் உள்ளிட்ட நற்பண்புகள் காணப்படும். விளையாட்டின் மூலம் மாணவர்களின் மனச்சோர்வை நீக்கி, புத்துணர்வை ஏற்படுத்த முடியும் என்பதைக் கருத்தில்கொண்டு, பள்ளிப் பாடத்திட்டத்தில் உடற்கல்விக்கும் வகுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் விளையாட அரசு பல்வேறு விளையாட்டு உபகரணங்களை பள்ளிகளுக்கு வழங்குகிறது. ஆனால், ஒரு பயனும் இல்லை. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும் என்பதுபோல, விளையாட்டு மைதானம் இருந்தால்தானே விளையாட முடியும். தமிழகத்தில் பெரும்பாலான கிராமப்புற பள்ளிகளில் விளையாட்டுத் திடலும் இல்லை, உடற்கல்வி ஆசிரியர்களும் இல்லை என்பதுதான் உண்மை.
இதுகுறித்து கோட்டேரி கிராமத்தைச் சேர்ந்த ச.தமிழ்அரிமா என்பவர் தெரிவித்தது:
எங்கள் கிராமத்தில் 1942-ம் ஆண்டு தொடக்கப் பள்ளி உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1989-90-ம் கல்வி ஆண்டில் நடுநிலைப் பள்ளியாக மாற்றப்பட்டு, 2010-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் தொடக்கப்பள்ளி முதல் 10-ம் வகுப்பு வரை சுமார் 350 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால் இவர்கள் விளையாடுவதற்கு போதுமான விளையாட்டு மைதானம் இல்லை.
இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி விளையாட்டுத் திடல் அமைப்பதற்காக, பள்ளிக்கு அருகில் உள்ள இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கைலாசநாதர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு, தமிழக முதல்வர் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து துறையினருக்கும் கடிதம் அனுப்பியும் எந்த பயனும் இல்லை. புதிதாகத் தனியார் பள்ளி தொடங்க வேண்டுமானால் விளையாட்டுத் திடல் கட்டாயம் இருக்க வேண்டும் என அரசு தெரிவிக்கிறது. ஆனால் அரசு பள்ளியிலேயே விளையாட்டுத் திடல் இல்லை என்பதுதான் வேதனை.
ஓட்டிமேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்த 9-ம் வகுப்பு மாணவர் சதீஷ், வட்டு எறிதல் போட்டியில் கடந்த ஆண்டு மாநில அளவில் நடந்த போட்டியில் கலந்துகொண்டார். ஆனால் பயிற்சி பெறுவதற்கு போதுமான இடவசதி இல்லாததால் அந்த மாணவரால் வெற்றிபெற முடியவில்லை. காரணம், ஓட்டிமேடு உயர்நிலைப் பள்ளியில் மைதானம் இல்லை. சுற்றுப்பகுதியிலும் மைதானம் இல்லை.
நகர் பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளும், தொடர்புகளும் அதிகம். கிராமத்து மாணவர்களுக்கு பள்ளிக்கூட மைதானங்களைத் தவிர வேறு வழியில்லை. மாணவர்களின் படிப்பில் அக்கறை செலுத்தும் தமிழக அரசு, கிராமப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு மைதானங்களை அமைத்துத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கிராமப்புற மாணவர்கள் பல இடர்பாடுகளுக்கிடையே விளையாட்டில் ஈடுபடும் நிலையில், தகுந்த பயிற்சி இல்லாததால் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் தோல்வியைத் தழுவுகின்றனர்.
மாணவர்களின் மனநலத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு விளையாட்டுத் திடல் இல்லாத பள்ளிகளில் உடனடியாக விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை வேண்டும். பள்ளிகளுக்கு அரசு நிலம் அல்லது கோயில் நிலம் இருந்தால் அதை உரிய துறை அதிகாரிகளிடம் பேசி விளையாட்டுத் திடலாக மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.