மேல்நிலைக் கல்விக்காக 10 கி.மீ. தூரம் பயணிக்கும் மாணவர்கள்!

ராசிபுரம்: கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு செயல்பட்டு வரும் நிலையிலும், மேல்நிலைக் கல்விக்கு 10 கி.மீ. தொலைவு சென்று பயில வேண்டிய நிலையில் உள்ளனர் உடையார்பாளையம் பகுதி மாணவர்கள்.  நாமகிரிப்பேட்
மேல்நிலைக் கல்விக்காக 10 கி.மீ. தூரம் பயணிக்கும் மாணவர்கள்!
Updated on
1 min read

ராசிபுரம்: கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு செயல்பட்டு வரும் நிலையிலும், மேல்நிலைக் கல்விக்கு 10 கி.மீ. தொலைவு சென்று பயில வேண்டிய நிலையில் உள்ளனர் உடையார்பாளையம் பகுதி மாணவர்கள்.

 நாமகிரிப்பேட்டை அருகே உள்ள கார்கூடல்பட்டி ஊராட்சிக்கு உள்பட்டது உடையார்பாளையம். இந்தப் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 500 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கிராமப்புறங்களைச் சேர்ந்த தலித், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் மாணவர்கள் இங்கு அதிகம். 1955-ல் தொடக்கப் பள்ளியாக உருவான இந்தப் பள்ளி பின்னர், 1983-ல் நடுநிலைப் பள்ளியாக உயர்ந்தது. பிறகு, கடந்த 1996-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.

 இப் பள்ளியில் மெட்டாலா, கப்பலூத்து, கணவாய்ப்பட்டி, புளியம்பட்டி, பெத்தநாயக்கன்பட்டி, நாரைக்கிணறு, ராசாப்பாளையம், செல்லிப்பாளையம் போன்ற கிராமப்புறப் பகுதிகளின் மலைவாழ் மக்கள், விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர் போன்றோரின் குழந்தைகள் அதிகம் பயின்று பயன்பெற்று வருகின்றனர். கப்பலூத்து, கணவாய்ப்பட்டி போன்ற பல்வேறு கிராமப்புற பகுதிகளில் இருந்து போதிய பேருந்து வசதி இல்லாததால் நடந்து வந்து பயிலும் நிலையும் மாணவர்களுக்கு உண்டு. 2011-12-ம் கல்வியாண்டில் 119 மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதியதில் 94 பேர் தேர்ச்சி பெற்று மேல்நிலைக் கல்விக்குச் செல்கின்றனர்.

 ஆனால், மாணவர்கள் பிளஸ் 2 மேல்நிலைக் கல்விக்கு 10 கி.மீ. தொலைவிற்கு மேல் செல்ல வேண்டிய நிலை உள்ளதால், உடையார்பாளையம் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இதற்கென 2010-ம் ஆண்டே இதற்கான முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பப்பட்டும் இதுவரை இந்தக் கோரிக்கை இப்பள்ளிக்குக் கை கூடவில்லை. இதனால், 10 கி.மீ. தொலைவிற்கும் அதிகமாக உள்ள முள்ளுக்குறிச்சி, மங்களாபுரம், நாமகிரிப்பேட்டை போன்ற பகுதிகளுக்குச் சென்று மேல்நிலைக் கல்வி பயில வேண்டிய நிலையில் உள்ளனர் இப்பகுதி மாணவர்கள்.

 ஏற்கெனவே பல கீ.மீ. தொலைவில் இருந்து இங்கு வந்து பயிலும் மலைவாழ் மாணவர்களுக்கு இது பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மலைவாழ் கிராமப்புற மாணவர்கள் கல்வி பயில்வதைக் கைவிடும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். எனவே, மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், உடையார்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com