பொதுத் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் அவதி

செங்கல்பட்டு, மார்ச் 1: செங்கல்பட்டு நகரில் அறிவிக்கப்பட்ட மின்தடை மற்றும் அறிவிக்கப்படாத 12 மணி நேர மின்தடையால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மற்றும் 10-ம் வ
பொதுத் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் அவதி
Updated on
1 min read

செங்கல்பட்டு, மார்ச் 1: செங்கல்பட்டு நகரில் அறிவிக்கப்பட்ட மின்தடை மற்றும் அறிவிக்கப்படாத 12 மணி நேர மின்தடையால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் 12 மணிநேர மின்தடையால், தன்னம்பிக்கையை இழந்து சோர்ந்து படிக்கின்றனர்.

மின்சாரத்தைப் பயன்படுத்தி தொழில்புரியும் சிறுதொழிலாளர்கள் தங்கள் வருமானத்தை இழந்து தவிக்கின்றனர்.

செங்கல்பட்டு நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத மின்தடை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பல குடும்பங்களுக்கு ரேஷன் மண்ணெண்ணெய் வழங்கப்படாததால் மண்ணெண்ணெய் விளக்கேற்றவும் இயலாமல் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வீட்டில் உள்ள குழந்தைகள் ஒரே விளக்கில் சுற்றும் விட்டில் பூச்சியைப் போல், விளக்கைச் சுற்றி அமர்ந்து பாடங்களைப் படிக்கின்றனர்.

தற்போது செங்கல்பட்டு நகரில் பகுதி வாரியாக சுழற்சி முறையில் முற்பகலில் 9 முதல் 12 மணி வரையிலும், பிற்பகலில் 3 முதல் 6 மணி வரையிலும் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு அமலில் உள்ளது.

இதுமட்டும் இல்லாமல் அறிவிக்கப்படாத மின்வெட்டாக இரவில் 7.30 முதல் 8.30 மணி வரையிலும், 9.30 - 10.30 மணி வரையிலும், விடியற்காலையிலும் 2 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. மொத்தத்தில் 12 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.

அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டதால் அரசு அலுவலகங்களில் 3 மணிநேரம் மட்டுமே வேலை செய்ய முடிவதாகவும், அனைத்து வேலைகளும் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக செங்கல்பட்டு நகரில் பல கட்டடங்கள் காற்று வெளிச்சம் புக முடியாமல் கட்டப்பட்டிருப்பதால் அந்த கட்டடங்களில் வசிக்கும் மக்கள் 24 மணிநேரமும் மின்சாரத்தை நம்பியுள்ளனர்.

மின்வெட்டு காரணமாக, வீட்டில் உள்ள குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்பட்டவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.நாளுக்கு நாள் மின்தடை நேரம் கூடுதலாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

சென்னையில் 1 மணிநேரம் என்பதை 2 மணி நேர மின்வெட்டாகவும், செங்கல்பட்டில் 4 மணி நேர மின்வெட்டாகவும் மாற்றப்படும் என அறிவிப்பு வந்ததை அடுத்து செங்கல்பட்டுவாசிகள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர். ஆனால் அறிவிப்பு வெறும் அறிவிப்பாகவே உள்ளது.

இந்த ஆண்டு புதிய பாடத் திட்டங்கள், அதிலும் பள்ளிகள் திறக்கப்பட்டும் நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்ததால் 2 மாதங்கள் பாடப் புத்தகங்கள் வராமல் இருந்தன. காலதாமதமாக வந்த பாடத் திட்டத்தை ஆசிரியர்களும் அவசர அவசரமாக நடத்தி முடித்துவிட்டனர்.

பொதுத் தேர்வுக்கு இன்னும் சில நாள்களே இருப்பதால், தமிழக அரசு, மாணவர்களின் நலனில் அக்கறைக் கொண்டு செங்கல்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களுக்கு மின்தடையை சரி செய்து மாணவர்கள் படிக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே அனைவரின்

கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com