

உதகை: உதகை அருகேயுள்ள இத்தலார் பகுதியில் உள்ள டி.காந்தி நகரில் குடிநீர் வசதியின்றி 35 ஆண்டுகளாக கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சுமார் 75 குடும்பத்தினர் இந்தப் பகுதியில் வசித்து வருகின்றனர். அனைவருமே கூலித் தொழிலாளர்கள்.
நீண்ட காலமாக அங்கு வசித்து வரும் இம்மக்களுக்கு 1976ம் ஆண்டிலிருந்து மேற்கொண்ட முயற்சிகளால் 1988ம் ஆண்டில் தாட்கோ மூலம் தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டன.
அப்போது, இரண்டு தண்ணீர் தொட்டிகள் மற்றும் 5 பொதுக்குழாய்கள் அமைத்து தரப்பட்டன. ஆனால், போதிய மழை இல்லாததாலும், அருகில் நீராதாரங்கள் இல்லாததாலும் இந்த தண்ணீர் தொட்டிகள் மற்றும் குழாய்கள் பயனற்றவையாகவே மாறிவிட்டன. பின்னர் அந்தக் குழாய்கள் அகற்றப்பட்டு விட்டன.
மேட்டுப்பாங்கான இடத்தில் அமைந்துள்ள இப்பகுதிக்குத் தண்ணீர் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
சற்று தொலைவில் ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வருவதற்காக மோட்டார் மற்றும் இதர சாதனங்கள் பொருத்தப்பட்டன. ஆனால், வெள்ளப் பெருக்கால் மோட்டார் உள்ளிட்ட பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டு
விட்டன.
அதையடுத்து இந்த ஆற்றின் அருகே கிணறு தோண்டப்பட்டது. அதுவும் நிலைக்கவில்லை. தனக்குச் சொந்தமான நிலத்தில் அந்தக் கிணறு தோண்டப்பட்டதாகக் கூறி ஒருவர் தொடர்ந்த வழக்கால் அந்தக் கிணற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
அதனால், தங்கள் குடியிருக்கும் பகுதியிலிருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ள வனப்பகுதிக்குச் சென்று அங்குள்ள ஊற்றிலிருந்தே தண்ணீர் எடுத்து வருகின்றனர் இந்த மக்கள்.
அந்தப் பகுதியில் சிறுத்தை மற்றும் பல வன விலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் தனியாக தண்ணீர் எடுக்கச் செல்வதைத் தவிர்த்து, கூட்டமாகவே செல்கின்றனர். தண்ணீர் எடுத்து வருவதற்கே அதிக நேரமாவதால் பல நாள்களில் அவர்களால் வேலைக்கும் செல்ல முடிவதில்லை.
இப்பகுதி சோலைக்காடாக இருப்பதால் இங்குள்ள யூகலிப்டஸ் மரங்களும் அதிகளவில் தண்ணீரை உறிஞ்சி விடுகின்றன. பல நேரங்களில், ஊற்றுப் பகுதியில் வனவிலங்குகளும் வந்து தண்ணீர் அருந்துகின்றன. அதனால், அந்தத் தண்ணீரும் சேறு கலந்ததாக மாறி விடுகிறது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
குடியிருக்கும் பகுதியை விட்டு வெளியேற முடியாமலும், தண்ணீருக்காக தொடர்ந்து அவதிப்பட்டு வருவதாலும் விரக்தியான மனநிலையிலேயே இருக்கின்றனர் இம்மக்கள்.
தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளதால் குடிநீர் பிரச்னையும் அதிகரித்துள்ளது.
மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதே இம்மக்களின் பிரதான கோரிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.