5 மாதங்களில் சிமென்ட், கம்பி விலை 20% உயர்வு

ஈரோடு: கட்டுமானப் பொருள்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் தமிழகத்தில் 40 சதவீதக் கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன. சிமென்ட், ஸ்டீல் கம்பிகள் விலை 5 மாதங்களில் 20 சதவீதம் உயர்ந்துள்ளது.  கட்டடங்கள் க
5 மாதங்களில் சிமென்ட், கம்பி விலை 20% உயர்வு
Updated on
2 min read

ஈரோடு: கட்டுமானப் பொருள்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் தமிழகத்தில் 40 சதவீதக் கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன. சிமென்ட், ஸ்டீல் கம்பிகள் விலை 5 மாதங்களில் 20 சதவீதம் உயர்ந்துள்ளது.

 கட்டடங்கள் கட்டுவதற்கு முக்கிய மூலப் பொருள்களாக சிமென்ட், ஸ்டீல் கம்பிகள் தேவைப்படுகின்றன. எந்தவகை கட்டடங்களாக இருந்தாலும் அதற்கான முழுச்செலவில் 40 முதல் 60 சதவீதம் வரை சிமென்ட், ஸ்டீல் கம்பிகளுக்கு ஒதுக்கியாக வேண்டும்.

 ஆனால் அவற்றின் விலை கடந்த 2 ஆண்டுகளாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதுவும், கடந்த 5 மாதங்களில் மிகவும் அபரிமிதமாக உயர்ந்து விட்டதால் கட்டுமானத் தொழில் முடங்கியுள்ளது.

 5 மாதங்களுக்கு முன்பு கம்பி விலை டன்னுக்கு ரூ.40 ஆயிரமாக இருந்தது. இப்போது ரூ.54 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் டன்னுக்கு 8 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது. மின்வெட்டு காரணமாக ஸ்டீல் கம்பிகள் உற்பத்தி 50 சதவீதம் குறைந்துவிட்டதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் விலை உயர்ந்துவிட்டது என்கின்றனர் விற்பனையாளர்கள்.

 அதேபோல 5 மாதங்களுக்கு முன்பு ரூ. 260 ஆக இருந்த சிமென்ட் மூட்டை, இப்போது ரூ.310 வரை விற்பனை செய்யப்படுகிறது. மின்வெட்டை காரணம் காட்டி சிமென்ட் உற்பத்தியாளர்கள் செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கி, விலையை உயர்த்திவிடுகின்றனர் எனக் குற்றஞ்சாட்டுகின்றனர் கட்டுமானப் பொறியாளர்கள்.

 செங்கல், ஜல்லி உள்ளிட்ட பிற பொருள்கள் விலையில் இப்போதைக்கு மாற்றம் இல்லை என்றாலும், பிற மூலப்பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரிக்கும்போது இவற்றின் விலையும் உயர வாய்ப்புள்ளது.

 இதனால், கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள் மற்றும் கட்டுனர்களின் முக்கியக் கோரிக்கை.

 இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து கட்டடப் பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் ஆர்.மோகன்ராஜ் கூறியது:

 தமிழகத்தில் ஓராண்டுக்கு தனியார் மூலமாக ரூ.10 ஆயிரம் கோடிக்கும், அரசுத்துறைகள் மூலமாக ரூ.15 ஆயிரம் கோடிக்கும் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. சிமென்ட், ஸ்டீல் கம்பிகள் விலை உயர்வால் தனியார் துறையில் 40 முதல் 50 சதவீதம் வரை பணிகள் முடங்கியுள்ளன. அரசுத்துறைகளில் 20 சதவீதம் வரை முடங்கியுள்ளன. இதேநிலை நீடித்தால் இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் பாதிப்பு மேலும் அதிகரிக்கும்.

 இதனால், கட்டுமானப் பொருள்கள் விலையைக் கட்டுப்படுத்த அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். விலையைக் கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். ஸ்டீல் கம்பி, சிமென்ட்டை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 முதல்கட்டமாக, இவற்றுக்கான விற்பனை வரியைக் குறைத்தால் விலை சற்று குறையும். 2001 முதல் 2006 வரை அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது சிமென்ட் மூட்டை விலை ரூ.135-ல் இருந்து ரூ.200-க்கும் அதிகமாக திடீரென உயர்த்தப்பட்டது. இதனால், முதல்வர் ஜெயலலிதா, சிமென்ட்டுக்கு இரட்டை வரி விதித்தார்.

 மூட்டை விலை ரூ.135-க்கும் அதிகமாக இருக்கும் சிமென்ட்டுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதனால், சிமென்ட் ஆலை அதிபர்கள், விலையை உடனடியாகக் குறைத்தனர்.

 அதுபோல இப்போதும் சிமென்ட்டுக்கு இரட்டை வரி விதிக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில், முதல்வரைச் சந்திக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com