

உதகை, மார்ச் 17: கூடங்குளம் அணு உலை மிக அதிகளவிலான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளதால் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று இந்திய அணுசக்திக் கழகத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் எம்.ஆர். சீனிவாசன் தெரிவித்தார்.
கூடங்குளம் அணு உலை தொடர்பாக தமிழக அரசு நியமித்த நிபுணர் குழுவில் இடம் பெற்றிருந்தவரும், இந்திய அணு சக்திக் கழகத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் எம்.ஆர். சீனிவாசன் உதகையில் தினமணி செய்தியாளரிடம் கூறியது:
கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலைகள் மிகவும் பாதுகாப்பானவை. எப்போதுமே குளிர்ச்சியாக இருக்கும் வகையில் இந்த அணு உலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மின் தடை ஏற்படும் நேரத்திற்காக பொதுவாக ஒவ்வொரு அணு உலைக்கும் ஒரு ஜெனரேட்டர்தான் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால், கூடங்குளத்தில் ஒவ்வொரு அணு உலைக்கும் தலா 4 ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை "ரூம் வாட்டர் டைட் பங்கர்' என்ற சீலிடப்பட்ட அறைகளுக்குள் பொருத்தப்பட்டுள்ளதால் இந்தப் பகுதி எப்போதுமே தண்ணீரில் மூழ்காது.
ஜப்பானில் அணு உலைக்குள் தண்ணீர் புகுந்தது என்றால் அவை தண்ணீரின் ஆழத்திலிருந்தே அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் கூடங்குளத்தில் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தரைக்கும், தண்ணீருக்கும் இடையில் இவை மிகவும் பாதுகாப்பான சூழலிலேயே அமைக்கப்பட்டுள்ளன.
ஜப்பானில் விபத்து ஏற்பட்டதும் அங்கிருந்த ஹைட்ரஜன் காற்றில் நேரடியாக கலந்ததால் வெடி விபத்து ஏற்பட்டது. ஆனால், கூடங்குளத்தில் பாசிவ் ஹைட்ரஜன் ரீ கண்டிசனிங் என்ற தொழில்நுட்பத்தின்கீழ் ஹைட்ரஜன் வெளியேறினாலும் அது ஆக்சிஜனுடன் கலந்து தண்ணீராக மாறிவிடும்.
இந்த அணு உலைகளிலிருந்து மிக வெப்பமான தண்ணீர் வெளியேற்றப்படுவதாக கூறப்படுவது தவறு. இதற்காகவே பாசிட்டிவ் ஹீட் சிஸ்டம் என்ற நவீன
முறை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 80 முதல் 90 டிகிரி வரையில் தண்ணீர் சூடேற்றப்பட்டாலும் மீண்டும் அவை குளிர வைக்கப்பட்டு அதிகபட்சமாக 7 டிகிரி கூடுதல் வெப்பத்துடன் மட்டுமே கடலில் கலக்கும். இதன்மூலம் மீன் வளம் உள்ளிட்ட எத்தகைய வளங்களுக்கும் பாதிப்பு ஏற்படாது.
6,000 மெகாவாட் மின்சாரம்: நில அதிர்வு, சுனாமி போன்றவை ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரிந்தால் இந்த அணு உலைகள் தானாகவே உற்பத்தியை நிறுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் 20 அணு உலைகள் இயங்கி வருகின்றன. கூடங்குளத்தில் 21 மற்றும் 22-வது அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றோடு இப்பகுதியில் மேலும் 2 அணு உலைகளை நிறுவுவதற்கான திட்டமும் தயாராக உள்ளது. அத்துடன் இப் பகுதியிலேயே மேலும் இரண்டு அணு உலைகளை எதிர்காலத்தில் நிறுவும் திட்டமும் உள்ளது. ஒவ்வொரு அணு உலையும் தலா 1,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. இத் திட்டம் முழுமையாக முடிவடையும்போது 6,000 மெகாவாட் மின்சாரத்தை கூடங்குளத்திலிருந்து உற்பத்தி செய்ய முடியும்.
புதிய அணுமின் திட்டங்கள்: கூடங்குளம் அணு உலைகளுக்குத் தேவையான யுரேனியத்தை ரஷியாவே தொடர்ந்து வழங்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஜார்க்கண்ட், ஆந்திரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கிடைக்கும் யுரேனியம் நமது தேவைக்குப் போதுமானதல்ல.
எதிர்கால மின் தேவைகளை சமாளிக்க அணு மின் திட்டங்கள் மட்டுமே தீர்வாக அமையும்.
கூடங்குளத்தில் அணு மின் உற்பத்தியைத் தொடங்குவதற்கான பணிகளை இப்போதே ஆரம்பித்தால்தான் அடுத்த 4 மாதங்களுக்குள்ளாவது அங்கு மின் உற்பத்தியைத் தொடங்க முடியும். இந்த அணு உலைகள் விரைவில் செயல்பட வேண்டுமென்பதை வலியுறுத்தியே தமிழக அரசிடம் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் டாக்டர் சீனிவாசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.