தாமதமாகும் உதகை 3-வது குடிநீர்த் திட்டம்

உதகை: கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், உதகை பார்சன்ஸ் வேலி 3-வது குடிநீர்த் திட்டம் நடப்பாண்டாவது நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உருவாகியுள்ளது.  உதகை நகர்ப் பகுதி, வெலிங்டன் ராணுவ மை
தாமதமாகும் உதகை 3-வது குடிநீர்த் திட்டம்
Updated on
2 min read

உதகை: கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், உதகை பார்சன்ஸ் வேலி 3-வது குடிநீர்த் திட்டம் நடப்பாண்டாவது நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உருவாகியுள்ளது.

 உதகை நகர்ப் பகுதி, வெலிங்டன் ராணுவ மையத்துக்கு பார்சன்ஸ்வேலி முதல் மற்றும் 2-வது குடிநீர்த் திட்டங்கள் மூலமாக குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. முதலாவது குடிநீர்த் திட்டத்தின்கீழ் ஒரு நாளுக்கு 45 லட்சம் எம்ஜிடி (மில்லியன் காலன் வாட்டர் பெர் டே) நீரும், 2-வது திட்டத்தின்கீழ் 95 லட்சம் எம்ஜிடி நீரும் விநியோகிக்கப்படுகின்றன.

 ஆனால், நகரின் மேடான பல்வேறு பகுதிகளை இரு திட்டங்களாலும் இணைக்க முடியவில்லை. எனவே, அப் பகுதி மக்களின் நலன் கருதி, கூடுதலாக 65 லட்சம் எம்ஜிடி நீர் வழங்கும் 3-வது குடிநீர்த் திட்டம் கடந்த ஆண்டு மார்ச்சில் தொடங்கப்பட்டது.

 வரும் 2040-ம் ஆண்டு நகரில் வாழும் மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத் திட்டத்தை, நடப்பாண்டு ஜூன் மாதத்துக்குள் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால், வனத்துறையின் ஒப்புதல் கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திட்டப் பணிகள் முடங்கியுள்ளன.

 முதல் இரண்டு குடிநீர்த் திட்டங்களுக்காக வனப் பகுதியில் சுமார் 2.3 ஹெக்டேர் பரப்புக்கு குழாய்கள் பதிக்கப்பட்டன. அரசு விதிகளின்படி, மற்ற துறையினரால் வனப் பகுதி நிலம் பயன்படுத்தப்பட்டால், அதற்கு ஈடான நிலத்தை வனத்துறைக்கு சம்பந்தப்பட்ட துறையினர் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

 இதன்படி, முதலிரண்டு திட்டங்களுக்காக மார்லிமந்து பகுதியில் மாற்று நிலம் தருவதாக உதகை நகராட்சி சார்பில் உறுதியளிக்கப்பட்டது. நகராட்சி மற்றும் வனத்துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு இதற்கான பரிந்துரையை அரசுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இதற்கு அரசு இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை.

 3-வது குடிநீர்த் திட்டத்துக்கு வனப் பகுதிகளில் குழாய்கள் பதிக்க வேண்டியுள்ளது. டைகர் ஹில், கோடப்பமந்து, டியூடர் ஹால் ஆகிய பகுதிகளில் மேல்நிலைத் தொட்டிகளும், டன்மீர், எல்க்ஹில், சவுத்வீக், கோடப்பமந்து, ஹாவ்லாக் ஆகிய இடங்களில் நீருந்து நிலையங்களும் அமைக்க வேண்டியுள்ளது. இதற்கு சுமார் 0.75 ஹெக்டேர் வனப்பகுதி நிலம் தேவைப்படுகிறது.

 ஆனால், முந்தைய திட்டங்களுக்கான நிலமே இன்னும் ஒப்படைக்கப்படாத நிலையில், இந்த நிலத்துக்கு அனுமதி வழங்க வனத்துறை மறுக்கிறது. இதனால் திட்டம் தாமதமாகி வருகிறது.

 இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் நடராஜன் கூறியது: இத் திட்டத்துக்காக 92 கி.மீ. தொலைவுக்கு குடிநீர்க் குழாய்களைப் பதிக்க வேண்டியுள்ளது. இதுவரை 60 கி.மீ. தொலைவுக்கு பணிகள் முடிந்துள்ளன. மார்லிமந்து நிலம் தொடர்பான பிரச்னை முடிவுக்கு வந்தால்தான், 3-வது குடிநீர்த் திட்டப் பணிகளுக்கு வனத்துறையிடம் அனுமதி பெற முடியும். இப்போது அனுமதி கிடைத்தால்தான் டிசம்பருக்குள் பணிகளை நிறைவேற்ற முடியும், என்றார்.

 கோடை காலத்தில் நகரில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் சூழலில், இத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்குத் தீர்வு காண தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உதகை மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com