கோடையில் அரசு மருத்துவமனைகளில் ரத்தம் தட்டுப்பாடு

திருநெல்வேலி: கோடையில் தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதுபோல ரத்தத்துக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், அரசு மருத்துவமனைகள் இப்போது கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளன. பாளையங்கோட்டையிலுள்ள அரசு மர
கோடையில் அரசு மருத்துவமனைகளில் ரத்தம் தட்டுப்பாடு
Published on
Updated on
2 min read

திருநெல்வேலி: கோடையில் தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதுபோல ரத்தத்துக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், அரசு மருத்துவமனைகள் இப்போது கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளன. பாளையங்கோட்டையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்தத்தின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் மருத்துவர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களின் தலைநகரங்களில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் செயல்படுகின்றன. இங்கு சிகிச்சைக்கு வருவோருக்குத் தேவையான ரத்தம், அந்தந்த மருத்துவமனைகளில் உள்ள ரத்த வங்கிகளிலிருந்து பெறப்படும்.

ரத்தத்தை சேகரித்து பாதுகாப்பாக வைக்க ரத்த வங்கிகளில் கட்டமைப்பு வசதி உள்ளது. ரத்த வங்கிக்கென தனியாக சிறப்பு மருத்துவர் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் செயல்படும் மருத்துவக் குழுவினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் உரிய வாகனம், ரத்த சேகரிப்பு, சேமிப்பு உபகரணங்களுடன் சென்று முகாம்களில் பங்கேற்று ரத்தம் சேகரிப்பர். அவ்வாறு சேகரித்து எடுத்துவரப்படும் ரத்தம் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு செலுத்தப்படுகிறது.

ஒவ்வொரு கல்வியாண்டிலும் பெரும்பாலும் கல்லூரிகளில் செயல்படும் செஞ்சுருள் சங்கங்கள் மூலம் ரத்ததான முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், விடுமுறைக் காலங்களில் முகாம்கள் நடத்தமுடியாததால் அரசு மருத்துவமனைகளில் இக் காலக்கட்டங்களில் ரத்தம் தட்டுப்பாடு நிலவுகிறது.

ஏப்ரல், மே மாதக் கோடை விடுமுறையிலும், டிசம்பர் மாத விடுமுறையிலும் இத்தகைய முகாம்கள் மூலம் ரத்தம் சேகரிக்க முடியவில்லை என்பதால் ரத்தம் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

அவ் வகையில் இப்போது பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ரத்தம் தட்டுப்பாடு நிலவுகிறது.

இது தொடர்பாக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் எஸ்.ஏ. மணிமாலா வியாழக்கிழமை கூறியதாவது:

இம் மருத்துவமனையில் நாளொன்றுக்கு 30 முதல் 40 யூனிட் வரை ரத்தம் தேவை. ஆனால், இப்போது அந்தளவுக்கு ரத்தம் இருப்பில் இல்லை. இதனால் நோயாளிகளுக்கு ரத்தம் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் கோடை

காலங்களில் இதுபோன்ற தட்டுப்பாடு நிலவும். இப்போது மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரத்தத்திலிருந்து ரத்தத் தட்டுகளை (பிளேட்லெட்) பிரித்துக் கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் ரத்தத்தின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ப ரத்தம் சேகரிக்க முடியவில்லை.

கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெறுவதாலும், மாணவர்கள் விடுமுறைக்குச் சென்றுவிட்டதாலும் ரத்ததான முகாம்கள் நடத்த வாய்ப்பில்லை. தேர்வு நேரத்தில் ரத்ததானம் வழங்க மாணவ, மாணவிகள் முன்வருவதில்லை. இதனால் இப்போதைய நிலைமையைச் சமாளிக்க தன்னார்வ அமைப்புகள் மூலம் முகாம் நடத்தி ரத்தம் சேகரிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மே 9-ல் ரத்ததான முகாம் நடத்தப்படவுள்ளது. அதன்மூலம் 250 முதல் 300 யூனிட் வரை ரத்தம் சேகரிக்க வாய்ப்புள்ளது. இப்போது ஒருசில தனியார் அமைப்புகள் மூலம் முகாம்கள் நடத்தி ரத்தம் பெறப்படுகிறது என்றார் அவர்.

பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியில் 1,200 யூனிட் வரை ரத்தத்தைப் பாதுகாப்பாக சேகரித்து வைக்கும் வசதி உள்ளது. ஆனால் அந்தளவுக்கு ரத்தம் பெறப்படுவதில்லை.

ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் அரசு மருத்துவமனைகளில் ரத்தத்துக்கு தட்டுப்பாடு நிலவுவதைக் கருத்தில் கொண்டு மாற்று ஏற்பாடு மூலம் ரத்த தானம் பெற அரசும், அந்தந்த மாவட்ட நிர்வாகங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், நோயாளிகளின் உயிரைக் காக்கும் பொருட்டு ரத்த தானம் வழங்க ஒவ்வொரு தனிமனிதரும் முன்வந்தால் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது மருத்துவர்கள் கருத்து.

கோடை விடுமுறையில் ரத்ததான முகாம் நடத்த தன்னார்வ அமைப்புகள் முன்வந்தால், ரத்தம் சேகரிக்க வரத் தயாராக இருப்பதாக ரத்த வங்கி மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.

நீங்களும் ரத்த தானம் செய்யலாம்!

உடல் நலத்துடன் உள்ள 18 முதல் 60 வயதுவரையிலான அனைவரும் ரத்த வங்கிகளுக்கு சென்று ரத்த தானம் செய்யலாம். அரசு மருத்துவமனைகளுக்கு சென்றும், அரசோ, தனியாரோ நடத்தும் ரத்ததான முகாம்களுக்கு சென்றும் ரத்த தானம் செய்யலாம்.

நோயாளிகளுக்கு தேவைப்படும்போது அந்தந்த மருத்துவமனைகளுக்கு சென்றும் ரத்தம் வழங்கலாம். 50 கிலோ எடைக்கு குறையாமல், உடல் ஆரோக்கியத்துடன் உள்ள ஆண்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறையும், பெண்கள் 4 மாதங்களுக்கு ஒருமுறையும் ரத்த தானம் செய்யலாம்.

தானம் செய்த ரத்தத்தை சிறிது நேரத்தில் உடல் ஈடு செய்துவிடும். ரத்த தானம் செய்வதால் உடலில் எவ்விதப் பிரச்னையும் வருவதில்லை. ரத்ததானம் செய்வதால் உடலில் எடை அதிகரிக்காமல் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com