ஈரோட்டில் லுங்கி உற்பத்தி 40% பாதிப்பு

ஈரோடு : மூலப்பொருள்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், ஈரோட்டில் லுங்கி உற்பத்தி 40 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது. 90 சதவீத லுங்கி உற்பத்தி: தமிழகத்தில் ஈரோடு, குமாரபாளையம், பள்ளிப்பாளையம், திருச்செங
ஈரோட்டில் லுங்கி உற்பத்தி 40% பாதிப்பு
Updated on
1 min read

ஈரோடு : மூலப்பொருள்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், ஈரோட்டில் லுங்கி உற்பத்தி 40 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது.

90 சதவீத லுங்கி உற்பத்தி: தமிழகத்தில் ஈரோடு, குமாரபாளையம், பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு, பல்லடம், சோமனூர், குடியாத்தம், காஞ்சிபுரம், பனப்பாக்கம் உள்ளிட்ட நகரங்களில் லுங்கிகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. சாதாரண லுங்கி (செக்ட் லுங்கி), பிரிண்டட் லுங்கி என இரு வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

சாதாரண லுங்கிகள், தமிழகம் முழுவதும் பரவலாக உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், பிரிண்டட் லுங்கியில் 90 சதவீதம் ஈரோடு நகரில்தான் உற்பத்தியாகிறது. ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உற்பத்தியாகும் சாதாரண லுங்கிகளில் 60 சதவீதம், ஈரோடு சந்தை மூலமாக விற்பனை செய்யப்படுகிறது.

ஈரோட்டில் இருந்து கர்நாடகம், கேரளம், ஒடிசா, பிகார், மகாராஷ்டிரம், புது தில்லி, புதுவை, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு லுங்கி விற்பனை செய்யப்படுகிறது. இங்கிருக்கும் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யும் சென்னை மொத்த வியாபாரிகள், மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் லுங்கியை ஏற்றுமதி செய்கின்றனர்.

ரூ.500 கோடி வரை வர்த்தகம்: ஓராண்டுக்கு சுமார் ரூ.500 கோடி வரை இத்தொழிலில் வர்த்தகம் நடைபெறுகிறது. இந் நிலையில், சாதாரண லுங்கி தயாரிக்கத் தேவையான காடா துணி விலையேற்றம், சுற்றுச்சூழல் பிரச்னையால் சாய ஆலைகள் இடிக்கப்படுவது, தொடர் மின்வெட்டு, மடிப்பதற்கான கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் லுங்கி உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பிரிண்டட் லுங்கி உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான பசை மாவு விலை 7 மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், பிரிண்டட் லுங்கி உற்பத்தி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

லுங்கி விலையும் 30% அதிகரிக்கும்

பிரிண்டட் லுங்கி ஒரு மீட்டர் பிரிண்ட் செய்வதற்கான கூலி, கடந்த 2 மாதத்துக்கு முன் ரூ.12 ஆக இருந்தது; இப்போது ரூ.16 ஆக உயர்ந்துவிட்டது. அதேபோல, 3 மாதங்களுக்கு முன் கிலோவுக்கு ரூ.150 ஆக இருந்த பசை மாவு, ரூ.800 வரை உயர்ந்துள்ளது. இதுபோன்ற பல்வேறு நெருக்கடியால் லுங்கி உற்பத்தி 40 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், லுங்கி விலை கடந்த மாதம் முதல், 30 சதவீதம் அதிகரித்துள்ளது. விலை உயர்வால் வர்த்தகம் 60 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

பொது சுத்திகரிப்பு நிலையம் அவசியம்

ஈரோட்டில் உற்பத்தியாகும் லுங்கிகள் ரூ.65 முதல் ரூ.200 (மொத்த விலை) வரை விற்பனை செய்யப்படுகிறது. லுங்கித் தொழிலுக்கு அடிப்படைத் தேவை சாயமேற்றுதல். ஆனால், சுற்றுச்சூழல் பிரச்னை காரணமாக 200-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் அகற்றப்பட்டு விட்டதால், சாயமேற்றுவதற்கான கட்டணம் அதிகரித்துவிட்டது.

இப் பிரச்னைக்குத் தீர்வுகாண ஈரோட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com