முடங்கிய முதல் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் புத்துயிர் பெறுமா?

தூத்துக்குடி: தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் 21 காற்றாலைகளுடன் முதன்முதலாக தொடங்கப்பட்ட காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் முடங்கிக் கிடக்கிறது.  காற்றாலை மூலம் மின்உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்
முடங்கிய முதல் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் புத்துயிர் பெறுமா?
Updated on
1 min read

தூத்துக்குடி: தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் 21 காற்றாலைகளுடன் முதன்முதலாக தொடங்கப்பட்ட காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் முடங்கிக் கிடக்கிறது.

 காற்றாலை மூலம் மின்உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் 1986-ம் ஆண்டு தூத்துக்குடி முள்ளக்காடு உப்பளப் பகுதியில் 21 காற்றாலைகள் அமைக்கப்பட்டன.

 அதிகக் காற்று வீசும் அப் பகுதியில் காற்றாலைகள் அமைக்க தனியார் யாரும் முன்வராத நிலையில், தமிழ்நாடு மின்வாரியம் மூலம் 21 காற்றாலைகள் அமைக்கப்பட்டன. தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

 அப்போதைய தமிழக அரசின் தலைமைச் செயலர் டி.வி. அந்தோனி, தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் விஜயராகவன் ஆகியோர் இத் திட்டத்தைத் தொடங்கிவைத்தனர்.

 தலா 55 கிலோ வாட்ஸ் கொண்ட 21 காற்றாலைகளிலும் இருந்து உற்பத்தியாகும் மின்சாரம் முள்ளக்காடு பகுதியில் உள்ள உப்பளங்களுக்கு யூனிட்டுக்கு ரூ. 1 வீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மின் உற்பத்தி தொடங்கிய சில ஆண்டுகளிலேயே காற்றாலைகள் பழுதடையத் தொடங்கின. இப்போது 21 காற்றாலைகளும் பராமரிப்பின்றி உள்ளன. சில காற்றாலைகளில் இறக்கைகள் இல்லை.

 சிலவற்றில் இருந்த கருவிகளைக் காணவில்லை. சில கருவிகள் துருப்பிடித்த நிலையில் பயன்பாட்டுக்கு உதவாத நிலையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 இதனிடையே, அனைத்துக் காற்றாலைகளையும் பராமரித்து மின் உற்பத்தி தொடங்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முள்ளக்காடு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இதுதொடர்பாக, மதச்சார்பற்ற ஐனதாதள கட்சியின் மாநிலப் பொதுச்செயலர் வழக்குரைஞர் எம். சொக்கலிங்கம் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுவில், மின் தட்டுப்பட்டால் மக்கள் அவதிப்படும் சூழலில் இந்தக் காற்றாலைகளை மீண்டும் இயங்கச் செய்வதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தால் தமிழகத்தின் மின் பற்றாக்குறையை ஓரளவு போக்கலாம் என்றார்.

 இப் பிரச்னை குறித்து மின்வாரிய காற்றாலைப் பிரிவு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: 21 காற்றாலைகளும் அமைத்து 26 ஆண்டுகளை எட்டிவிட்டன. அந்தக் காற்றாலைகளின் ஆயுள்காலம் முடிந்துவிட்டது என்றே கூறலாம். இப்போது நவீன காற்றாலைகள் வந்துவிட்டதால் "ரீ பவரிங்' முறையில் புதிய காற்றாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

 இந்தக் காற்றாலைகளில் இருந்து மின்சார உற்பத்தி செய்யும் வகையில் தனியாரிடம் ஒப்படைக்கவும் திட்டம் உள்ளது. தமிழக மின்வாரியம், தமிழக எரிசக்தி வளர்ச்சி முகமை, தனியார் ஆகிய மூவரும் மின்சாரத்தைப் பகிர்ந்து கொள்வது என்ற அடிப்படையில் விரைவில் இங்கு மின் உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com