கோடியக்கரைக்கு வெளிநாட்டுப் பறவைகள் வருகை

கோடியக்கரை சரணாலயப் பகுதிக்கு வெளிநாடுகளிலிருந்து வழக்கமாக வந்து செல்லும் பறவைகள்
Updated on
1 min read

கோடியக்கரை சரணாலயப் பகுதிக்கு வெளிநாடுகளிலிருந்து வழக்கமாக வந்து செல்லும் பறவைகள் இந்த ஆண்டும் வரத் தொடங்கியுள்ளன.

நாகை மாவட்டம்,வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரை வன உயிரின பறவைகள் சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் கூட்டம், கூட்டமாக வந்து செல்லும்.

இங்கு வரும் பறவைகளில் பெரும்பாலானவை ஐரோப்பா, சைபீரியா, ஆஸ்திரேலியா,இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்து செல்பவை.

பறவைகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் இப்பகுதிக்கு ஆண்டுதோறும் 247இனங்களைச் சேர்ந்த பறவைகள் வந்து செல்வதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவைகளில் சிறப்பானவையாகக் கருதப்படும் பூ நாரை இன பறவைகளைக் காண கடந்த காலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், ஆர்வலர்கள் வந்து சென்றுள்ளனர்.

சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் சுற்றுச் சூழல் பாதிப்பு, விவசாயம், உப்பளங்களிலிருந்து வெளியாகும் ரசாயனக் கழிவுகள், மழை குறைவு, இரை தட்டுப்பாடு உள்ளிட்ட பல காரணிகளால் பறவைகளின் வருகையும் படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான வடகிழக்குப்பருவ மழை கடந்த மாதத்தில் தொடங்கியதையடுத்து பறவை இனங்கள் வரத் தொடங்கியுள்ளன.

இது குறித்து மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்தின் பறவையியல் விஞ்ஞானி டாக்டர் எஸ். பாலச்சந்திரன், ஆராய்ச்சி நிறுவன தொழில் நுட்ப அலுவலர் பி.தட்சிணாமூர்த்தி ஆகியோர் கூறியது:

மழைப் பொழிவுக்குப் பின்னர் வெளிநாடுகளிலிருந்து வரும் பறவைகள் கூட்டம் இப்போது காணப்படுகிறது. பூநாரை, கூழக்கிடா, செங்கால் நாரை இனம், கடல் காகம், மெலிந்த மூக்கு காடல் காகம், கடல் ஆலாக்கள் உள்ளான் வகைகள், சிறவி இனப் பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்துள்ளன.

அண்மையில் ஏற்பட்ட "நிலம்' புயலையொட்டி பெய்த கனமழை காரணமாக ஏரிகள் உள்ளிட்ட பறவைகளின் வசிப்பிடங்களில் தண்ணீரின் அளவு சற்று அதிகமாக உள்ளதால் பறவைகள் வழக்கமாக காணப்படும் இடங்களை விட்டு சற்று தொலைவில்தான் உள்ளன.

தற்போது, கோடியக்கரை கடலோரத்தில் உள்ள கோவைத்தீவு பகுதியில் பூ நாரைகள் சுமார் இரண்டாயிரம் அளவில் காண முடிகிறது. இதே இடத்தில் கூழக்கிடா, செங்கால் நாரை இனப் பறவைகள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

இங்கு மழையின் அளவு அதிகரித்தால் பறவைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

வேட்டை கண்காணிப்பு: சரணாலயப் பகுதிக்குள் வந்துள்ள பறவைகள் கிராமப்புறங்களில் உள்ள வயல்வெளிகள், நீர்நிலைகளில் இரைதேடச் செல்லும்போது அவை வேட்டையாடப்படுகின்றன.

இதனை தடுக்க வனத்துறையினர் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும் என்றார் கோடியக்கரை வனச்சரக அலுவலர் எஸ். வேதரெத்தினம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com