அடிப்படை வசதிக்கு ஏங்கும் ஆதிதிராவிடர் நலப் பள்ளி!

விருத்தாசலம் அருகே உள்ள சிறுநெசலூர் கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளாக
Updated on
1 min read

விருத்தாசலம் அருகே உள்ள சிறுநெசலூர் கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளாக அங்கன்வாடிக் கட்டடத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது.

÷அங்கன்வாடிக் கட்டடத்தில் போதுமான இடம் இல்லாததால் மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

÷வேப்பூர் அருகே நல்லூர் ஒன்றியத்துக்குள்பட்ட சிறுநெசலூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலை, இக்கிராமத்தின் வழியே செல்கிறது.÷தேசிய நெடுஞ்சாலைக்குக் கிழக்குப் பகுதியில் குடியிருப்பும், மேற்கு பகுதியில் பள்ளிக் கட்டடமும் உள்ளது.

÷மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு தேசிய நெடுஞ்சாலையைக் கடந்துசெல்ல  வேண்டியிருந்தது. இவ்வாறு தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்லும்போது 2 மாணவர்கள் விபத்துக்குள்ளாகினர். இதைத் தொடர்ந்து, கிராம மக்கள் சாலைக்கு மேற்கு பகுதியில் உள்ள பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுத்தனர்.

÷குடியிருப்புப் பகுதியில் பள்ளிக் கட்டடம் அமைத்துத் தரவேண்டும் என அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும், போராட்டம் நடத்தியும் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

÷இந்நிலையில் குடியிருப்புப் பகுதியில் உள்ள அங்கன்வாடிக் கட்டடத்தில் ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தக் கட்டடத்தில் வெயில் காலத்தில் வெயிலின் தாக்கத்தாலும், மழைக்காலத்தில் மழையின் கொடுமையாலும் பள்ளியில் படிக்கும் 96 மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி அவதிப்படுகின்றனர்.

÷இது குறித்து சிறுநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆ.காமராஜ், பெ.முருகன், சு.மாரிமுத்து ஆகியோர் தெரிவித்தது:

÷"அங்கன்வாடியில் தாற்காலிகமாக பள்ளிக்கூடம் செயல்பட்டுவரும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கும், அங்கன்வாடி பிள்ளைகளுக்கும் போதுமான இடம் இல்லை. ÷கட்டடத்தில் உள்ள ஓடுகள் உடைந்திருப்பதால் வெயிலும், மழையும் அவர்களை வாட்டி வருகிறது. இதனால், படிப்பதற்கு ஏற்ற சூழல் இருப்பதில்லை. மேலும், மாணவர்களுக்கு சத்துணவு சமைப்பதற்குப் போதுமான இடம் இல்லாததால் வெளியில் சமைத்து வருகின்றனர். அந்த இடமும் பன்றிகள் திரியும் கூடாரமாக உள்ளது.

÷இதனால் மாணவர்களுக்கு நோய் பாதிப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் எங்கள் கிராமத்தில் இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான மஞ்சையப்பர் கோயில் இடம் அதிகமாக உள்ளது.÷இந்து அறநிலையத் துறையிடம் இடத்தைப் பெற்று, எங்கள் கிராமத்து மாணவர்களின் கல்விக்கு தமிழக அரசு ஒளியேற்ற வேண்டும்' எனத் தெரிவித்தனர்.

÷கல்விக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழக அரசு, சிறுநெசலூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக் கட்டடம் அமைத்துத் தர வேண்டும் என்பதே அக்கிராம மக்களின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com