தமிழக சிறைகளில் மரண தண்டனை கைதிகள் 11 பேர் உள்ளனர். இதில், 6 பேர் தண்டனை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எஞ்சியவர்களின் கருணை மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மும்பை தாக்குதல் சம்பவ வழக்கு குற்றவாளியான அஜ்மல் கசாப்புக்கு தூக்குத் தண்டனை புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இன்றைய சூழ்நிலையில் மரணத் தண்டனை தேவையா, தேவையில்லையா என்ற பேச்சு அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் புழல், திருச்சி, வேலூர், மதுரை, கோவை, பாளையங்கோட்டை, சேலம், கடலூர் உள்ளிட்ட 9 இடங்களில் மத்திய சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில் சுமார் 14 ஆயிரம் பேர் விசாரணைக் கைதிகளாகவும், தண்டனைக் கைதிகளாகவும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11 கைதிகள் மட்டும் மரண தண்டனை கைதிகள் ஆவார்கள்.
தமிழகத்தில் 1995ம் ஆண்டு கடைசியாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பல கொலைகளில் குற்றவாளியாக கருதப்பட்ட ஆட்டோ சங்கர் சேலம் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டதே தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட கடைசி மரண தண்டனை என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் பின்னர் 20-க்கும் மேற்பட்டவர்கள் மரண தண்டனை பெற்றாலும் மேல்முறையிடு செய்து அந்த தண்டனையில் இருந்து விடுபட்டுள்ளனர்.
இப்போது, தமிழக சிறைகளில் 11 மரணத் தண்டனை கைதிகள் உள்ளனர்.
இதில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை பெற்றிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன், தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் மரண தண்டனை பெற்றிருக்கும் நெடுஞ்செழியன், முனியப்பன், மது என்ற ரவீந்திரன் ஆகிய 6 பேர் அடங்குவார்கள்.
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சுந்தர்ராஜ், ஜெயக்குமார், குழந்தைகள் கொலை வழக்கில் முஸ்கின்-ரித்திக் கொலை வழக்கில் அண்மையில் மரண தண்டனை பெற்ற மனோகர், மற்றொரு கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற செல்வம், கொலை வழக்கில் மரண தண்டனை பெற்று மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செல்வம் ஆகிய 11 பேர் மரண தண்டனை கைதிகள் ஆவர்.
இதில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தண்டனை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதேபோல தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்ற 3 பேரின் மேல்முறையீட்டு வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எஞ்சிய சிலர் தங்களது தண்டனையைக் குறைக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளனர்.
அண்மையில் தூக்குத் தண்டனை பெற்ற மனோகர், தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாக கூறப்படுகிறது.
விழிப்புணர்வு: இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தமிழகத்தில் இப்போது மரண தண்டனை பற்றிய விழிப்புணர்வு அதிகமாக உள்ளது.
கீழ் நீதிமன்றங்களில் ஒருவர் மரண தண்டனை பெற்றாலும் மேல்முறையீடு செய்து, அந்த தண்டனையில் இருந்து பலர் விடுபட்டு வருகின்றனர்.
அதேவேளையில் மரண தண்டனைக்கு எதிராக கடந்த காலங்களைக் காட்டிலும் இப்போது மனித உரிமை ஆர்வலர்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரத்தில் தமிழக சிறைகளில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டு 17 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால், சிறைகளில் இப்போது அதை நிறைவேற்றுவதற்குரிய ஊழியர்கள் கூட இல்லை என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.