காரைக்கால் அலையாத்திக் காடுகளுக்கு வெளிநாட்டுப் பறவைகள் வருகை

காரைக்கால் கடற்கரை அலையாத்திக் காடுகளில் செங்கால் நாரை உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காரைக்கால் அலையாத்திக் காடுகளுக்கு வெளிநாட்டுப் பறவைகள் வருகை
Updated on
1 min read

காரைக்கால் கடற்கரை அலையாத்திக் காடுகளில் செங்கால் நாரை உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காரைக்கால் கடற்கரைப் பகுதி, ஆறு கடலில் சங்கமிக்கும் பகுதியாகவும், காடு வளத்துடனும் அமையப்பெற்றது. திருநள்ளாறு, காரைக்கால் அம்மையார் கோவில், நாகூர், வேளாங்கண்ணிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், காரைக்கால் கடற்கரைக்குச் சென்று சுற்றிப் பார்ப்பது வழக்கம்.

இங்குள்ள அலையாத்திக் காடுகளில் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கிச் செல்கின்றன. நிகழாண்டு சனிக்கிழமை முதல் செங்கால் நாரை, நீர்க்கோழி, கொக்கு உள்ளிட்ட நூற்றுக்கும் மேலான வெளிநாட்டுப் பறவைகள் இங்கு வரத்தொடங்கியுள்ளன.

பொதுவாக செங்கால் நாரைகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சைபீரியா போன்ற நாடுகளில் இருந்து இடம்பெயர்ந்து தமிழகப் பகுதியில் உள்ள கோடியக்கரை, வேடந்தாங்கலுக்கு வருவது வழக்கம். இவை தற்போது காரைக்கால் கடற்கரை அலையாத்தி காடுகளிலும் வந்து தங்கியுள்ளன. கோடியக்கரைக்கு செல்லும் வழியில் காரைக்கால் அலையாத்தி காடுகளில் இவை தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோவிலுக்கு சனிக்கிழமை வந்த பக்தர்கள் பெரும்பாலானோர் கடற்கரைக்குச் சென்று, வெளிநாட்டுப் பறவைகளை புகைப்படமெடுத்து மகிழ்ந்தனர்.

இதுகுறித்து சுற்றுலாத் துறை உதவி இயக்குநர் தட்சிணாமூர்த்தி கூறியது: காரைக்கால் கடற்கரையில் 20 ஏக்கரில் அலையாத்திக் காடு வளர்க்கப்படுகிறது. 1996-ம் ஆண்டு ரூ. 6 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட இந்தக் காடு, தற்போது நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. இதனால், வெளிநாட்டுப் பறவைகள் ஈர்க்கப்படுகின்றன. இனி இந்தப் பறவைகள் காரைக்காலிலேயே தங்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகிவருகிறது.

அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை இதுபோன்ற வெளிநாட்டுப் பறவைகள் தமிழகத்திற்கு வந்து தங்குகின்றன. இங்கேயே முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றன. இதைப் பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க, காரைக்கால் பகுதியில் சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களைத் தயாரித்து, மத்திய சுற்றுலாத் துறையின் நிதியுதவிக்கு அனுப்பியுள்ளோம்.

இந்தத் திட்டத்தில் படகு சவாரி, சிறிய ரயில், தியானக்கூடம், மினி தியேட்டர், குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா, நீரில் மிதக்கும் உணவகம் உள்ளிட்டவை அடங்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com