

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள வாகன ஸ்டாண்டில் விடப்படும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்கள் திருடு போவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த மருத்துவமனை வளாகம் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ளது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள் மற்றும் மருத்துவமனை அலுவலர்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள இரு சக்கர வாகன ஸ்டாண்டில் தங்கள் இருசக்கர வாகனங்களை விட்டுச் செல்வது வழக்கம்.
7 ஆண்டுகளுக்கு முன் மருத்துவமனையில் இந்த ஸ்டாண்ட் நடத்த முறையாக ஏலம் விடப்பட்டு அதற்கென அனுமதி பெற்ற ஒப்பந்தக்காரர்கள் ஸ்டாண்டை பராமரித்து வந்தனர்.
இடையில் ஒப்பந்தக்காலம் முடிவடைந்தும் மறுமுறை முறையாக ஒப்பந்தக் காலம் நீட்டிக்கப் படவில்லை எனத் தெரிகிறது. நாளொன்றுக்கு வாகன ஸ்டாண்டில் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி எடுத்துச் செல்லப்படுகிறது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் உதவியுடன் தனியார் சிலர் இந்த ஸ்டாண்டை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அஙகு நிறுத்தப்படும் வாகனங்கள் அடிக்கடி திருட்டு போகின்றன. மேலும் இருசக்கர வாகனங்களில் உதிரி பாகங்களும் கழற்றி எடுத்துச் செல்லப்படுகின்றன.
இது குறித்து அங்குள்ளவர்களிடம் கேட்டால், காணாமல் போகும் இருசக்கர வாகனங்களுக்கும், இரு சக்கரவாகனங்களில் உதிரி பாகங்கள் திருட்டுப் போவதற்கும் தங்களுக்குத் தொடர்பு இல்லை எனக் கூறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நீதிமன்ற ஊழியர் ஒருவர் மருத்துவமனை வளாகத்தில் தனது இரு சக்கர வாகனத்தை சைக்கிள் ஸ்டாண்டில் விடப்பட்டிருந்த நிலையில் அது திருடு போனது. அது குறித்து அவர் அங்குள்ளவர்களிடம் கேட்ட போது யாரும் பொறுப்பாகப் பதில் சொல்லவில்லை. இதைத் தொடர்ந்து அவர் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இரு சக்கர வாகன ஸ்டாண்ட் நிர்வகிப்பவர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாகன திருட்டு குறித்தும், இருசக்கர வாகன ஸ்டாண்ட் பாதுகாப்பு குறித்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிலரிடம் போலீஸார் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை தொடர்ந்து விசாரித்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்படும் தனியார் வாகனங்களுக்கு யாரும் வசூல் செய்யக் கூடாது. யாருக்கும் அந்த உரிமை இல்லை. வாகனங்கள் காணாமல் போனால் மருத்துவமனையோ, பொதுப்பணித்துறையோ பொறுப்பல்ல என அறிவிப்பு பேனர் பொதுபணித்துறை சார்பில் வெள்ளிக்கிழமை திடீரென வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுபணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, கடந்த 7 அண்டுகளாக ஏலம் விடப்படவில்லை. ஏலம் தொடர்பாக சுமார் 3 மாதங்களுக்கு மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது ஸ்டாண்ட் ஏலம் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. எனவே வாகனங்கள் நிறுத்துவதற்கும், அவை காணாமல் போனாலும் தாங்கள் பொறுப்பல்ல எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது இதுவரை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்ட மொபெட் உள்பட 57 வாகனங்கள் திருடு போயிருப்பதாகத் தெரிவித்தனர்.
வாகன பாதுகாப்புக் கட்டணம் வசூலித்தாலும், அங்கு நிறுத்தப்படும் வாகனங்கள் திருட்டு போனாலும், உதிரி பாகங்கள் திருடப்பட்டாலும் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல என்று எழுதப்பட்ட அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர்.
இதனால் வாகனத்தை பறிகொடுத்தவர்களும் வாகனங்களில் உதிரிப்பாகங்களை பறி கொடுத்தவர்களும் ஏதும் செய்யமுடியாமல் தவிப்பில் உள்ளனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி, வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்கள் உரிய முறையில் பாதுகாப்பாக இருக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு விரைவாக எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.