பக்ரீத் திருநாள்: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

இஸ்லாமியர்கள் சிறப்பாகக் கொண்டாடும் பக்ரீத் திருநாளை ஒட்டி, அவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பக்ரீத் திருநாள்: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து
Published on
Updated on
2 min read

இஸ்லாமியர்கள் சிறப்பாகக் கொண்டாடும் பக்ரீத் திருநாளை ஒட்டி, அவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: இறைவனுக்காக எதையும் தியாகம் செய்யும் எண்ணத்தை மேலோங்கச் செய்யும்

நன்நாளாகவும், ஏற்றத் தாழ்வுகளை அகற்றி அனைவரும் ஒன்று கூடி இறைவனின் புகழை நெஞ்சத்தில் நிலைக்கச் செய்து, விருந்தளித்து மகிழ்ச்சியில் திளைக்கும் திருநாளாகக் கொண்டாடப்படுவதே பக்ரீத் திருநாளாகும்.

இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில் எல்லோரிடமும் இறை உணர்வும், தியாகச் சிந்தனையும் சகோதரத்துவமும் மலரட்டும்; அது மனித குல நல்வாழ்வுக்கு மகோன்னதமாய் வழிகோலட்டும் என வாழ்த்தி மீண்டும் ஒருமுறை எனது பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக தலைவர் கருணாநிதி: கடமையைச் செய்வதாலேயே உண்மையான இன்பம் பிறக்கிறது என்பதை உணர்த்தும் பக்ரீத் பெருநாள் இஸ்லாமியர்களால் மிகுந்த எழுச்சியோடு கொண்டாடப்படுகிறது.

திருக்குரானை ஓதி மக்களுக்கு நன்மை பயக்கும் வாழ்வியல் நெறிகளை நபிகள் நாயகம் போதிக்கத் தொடங்கிய காலத்தில் அவர் மீது பகை கொண்டு அளவிட முடியாத கொடுமைகளைச் செய்தனர்.

நபிகளின் வளர்ப்புத் தந்தையான அபூதாலிப்பை அணுகிய பகைவர்கள், பொன் குவியலைக் கொடுத்து உங்கள் தம்பி மகனை கோடீஸ்வரர் ஆக்குகிறோம். இவ்வளவுக்கும் ஈடாக அவர் செய்து வரும் போதனைகளை விட்டுவிட வேண்டும். இல்லையெனில் அவரை பழிவாங்கியே தீருவோம் என்றனர்.

இதனைக் கேட்ட நபிகள் நாயகம், எனது சத்தியப் பிரசாரத்தை ஒருகாலமும் நிறுத்த மாட்டேன் என்றார்.

அத்தகைய நபிகள் நாயகத்தின் போதனைகளைப் பின்பற்றும் இஸ்லாமியர்களுக்கு இனிய பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன்: தியாகத் திருநாளாம் பக்ரீத் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நாளில் நபிகள் நாயகம் உலகுக்கு அருளிய அறநெறிகளுக்கு ஏற்ப ஏழைகளை ஏரெடுத்து பார்க்கும் தலைமை, மக்கள் அனைவரையும் உறவினர்களாகப் பார்க்கும் நிர்வாகம், குடும்பபாங்கோடு நட்பு கொள்ளும் அரசு ஆகிய பண்புகள் சிறக்கவும், சமாதானம், சகோதரத்துவம், சமதர்மம் செழிக்கவும் உழைக்க உறுதியேற்போம்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:ஒரே குலம், ஒரே கடவுள் என்ற உன்னதமான நோக்கம் கொண்டது இஸ்லாமிய மார்க்கம். அதில் தியாகத்தையும், ஈகையையும் போற்றும் வகையில் கொண்டாடப்படுவது பக்ரீத் பண்டிகை.

இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு தேமுதிக சார்பில் இனிய பக்ரீத் வாழ்த்துக்கள். வழக்கம்போல இந்த ஆண்டும் மதுரை கோரிப்பாளையம் தர்கா அருகில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தேமுதிக சார்பில் குர்பானி வழங்கப்படும்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:தியாகத் திருநாளாம் பக்ரீத் கொண்டாடி மகிழும் இஸ்லாமியர்களுக்கு இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சோதனைகளை சாதனைகளாக மாற்ற முடியும் என்பதை உணர்த்தும் இந்நாளில் அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்க சபதம் ஏற்போம் என கூறியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ஈதுல் அல்கா எனப்படும் ஹஜ் திருநாள் தன்னையும், தன் உடைமைகளையும் அர்ப்பணிக்கக் கூறும் தியாகத் திருநாள்.

ஏற்றுக்கொண்ட லட்சியத்துக்காக தங்களையே தியாகம் செய்து கொள்ள ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக் கொள்ளும் உன்னதத் திருநாள். இந்தத் திருநாளில் இஸ்லாமிய பெருமக்களுக்கு என் வாழ்த்துகள் என அவர் கூறியுள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார்:

எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் இறைநெறி மாறாமல், மன உறுதி குறையாமல் தியாகத்தை வெளிப்படுத்தும் திருநாள் பக்ரீத்.

அன்பு நிறைந்த நற்பண்புகள் மலர்ந்து கசப்புகளை களைந்து சொந்தங்களாக வாழ இந்நாளில் உறுதியேற்போம் எனக் கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் சு. திருநாவுக்கரசர், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com