குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்: 30 வீடுகள், 100 கட்டுமரங்கள் சேதம்

நாகர்கோவில், செப். 3: கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவுமுதல் ஏற்பட்ட கடுமையான கடல் சீற்றத்தால் மீனவ கிராமங்களுக்குள்  கடல்நீர் புகுந்தது; இதில் 30-க்கும் மேற்பட
குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்: 30 வீடுகள், 100 கட்டுமரங்கள் சேதம்
Updated on
2 min read

நாகர்கோவில், செப். 3: கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவுமுதல் ஏற்பட்ட கடுமையான கடல் சீற்றத்தால் மீனவ கிராமங்களுக்குள்  கடல்நீர் புகுந்தது; இதில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள், 100-க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் சேதமடைந்தன.

குளச்சலில் ராட்சத அலையில் சிக்கி கிரேன், பொக்லைன் இயந்திரம் சேதமடைந்தன.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரைப் பகுதிகளான குளச்சல், குறும்பனை,  வாணியக்குடி, கொட்டில்பாடு, கோடிமுனை, சைமன் காலனி, மண்டைக்காடு,  புதூர், தூத்தூர், பூத்துறை, இரயுமன்துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கடற்கரைப் பகுதிகளில் பலத்த கடல் சீற்றம் காணப்பட்டது.

குளச்சல் கடலில் 45 அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழுந்ததாக மீனவர்கள்  தெரிவித்தனர். இங்கு துறைமுகத் திட்டத்துக்காக அமைக்கப்பட்ட கடல் அலைத்  தடுப்புச் சுவரைத் தாண்டி அலைகளின் சீற்றம் இருந்தது.

இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள், கட்டுமரங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன.

மேலும், பைபர் வள்ளங்கள், அதில் வைக்கப்பட்டிருந்த வலைகள், மீன்பிடி உபகரணங்கள் மண்ணில் புதைந்தன. மீன்பிடித் துறைமுக கட்டுமானப் பணிக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கிரேன்கள், பொக்லைன் இயந்திரங்களை ராட்சத அலை வாரிச் சுருட்டியது. இதில் அவை சேதமடைந்தன.

கடந்த 2 மாதங்களுக்கு முன் ஏற்பட்ட கடல் சீற்றத்தில், அலைத் தடுப்புச் சுவர் மூன்றாக உடைந்தது. இப்போது மேற்கு அலைத் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிக்காக  வைக்கப்பட்டிருந்த ராட்சத கற்களை அலை இழுத்துச் சென்றது.

குளச்சல் பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம்  பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கட்டுமரங்கள், வள்ளங்கள் சேதமடைந்தன.

குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தை மையமாகக் கொண்டு மீன்பிடித்து வரும் 20-க்கும் மேற்பட்ட கடலோர கிராம மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

சாலைகள்,  வீடுகள் சேதம்: தேங்காய்ப்பட்டினம் அருகே முள்ளூர்துறை கடற்கரை கிராமத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அருகில் உள்ள சாலைகள் சேதமடைந்தன. இதனால்  போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இங்கு அமைக்கப்பட்டிருந்த 50 மீட்டர்  தொலைவு கடலரிப்பு தடுப்புச் சுவர்கள் சேதமடைந்தன. இந்தப் பகுதியில் 10-க்கும்  மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. பல வீடுகளின் சுற்றுச்சுவர் சேதமடைந்தது.

இதுபோல் நித்திரவிளை, இரயுமன்துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை,  இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டம்துறை, நீரோடி ஆகிய பகுதிகளிலும்  கடல் சீற்றம் காணப்பட்டது.

இங்குள்ள வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்ததால், வீடுகளில் இருந்த பொருள்கள்  சேதமடைந்தன. இரயுமன்துறை மற்றும் பூத்துறையில் சுமார் 20 வீடுகள்  சேதமடைந்தன.

இந்தப் பகுதியை தூத்தூர் பங்குதந்தை எபரேன், தமிழ்நாடு மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை மாநிலத் தலைவர் ஜஸ்டின் ஆன்றனி ஆகியோர் பார்வையிட்டனர்.

பூத்துறை, இரயுமன்துறை பகுதிகளில் மீனவர்கள் வீட்டைவிட்டு வெளியேறி  பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். வள்ளவிளை கடற்கரைச் சாலையில் கடல் மண் குவிந்ததால் வாகனங்கள் செல்வதில் தடை ஏற்பட்டது.

படகுப் போக்குவரத்து ரத்து: கன்னியாகுமரி சுற்று வட்டாரப் பகுதிகளில் கடல் சீற்றம் நீடித்து வருகிறது.

விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு தொடர்ந்து படகுகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், திங்கள்கிழமை காலை 10 மணிக்குமேல் கடல் சீற்றம் அதிகரித்தது.  திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

இதையடுத்து, படகை இயக்க முடியாத நிலை ஏற்பட்டதால் படகுப் போக்குவரத்து  ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.



"மேலும் 2 தினங்கள் கடல் கொந்தளிக்கும்'

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரைப் பகுதியில் மேலும் இரு தினங்கள்  கடல் கொந்தளிப்பு இருக்கலாம் என மீன் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து மீன்துறை உதவி இயக்குநர்கள் ரூபர்ட் ஜோதி, ஐசக் ஜெயக்குமார் ஆகியோர் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படுகின்றன. கடந்த ஆண்டு இதுபோல் கடல் சீற்றம் இருந்தது. பல மீனவ கிராமங்களில் கடல் அரிப்புகள் ஏற்பட்டுள்ளன. பொதுவாக சூறைக்காற்று இருந்தால் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். அப்போது மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்படும். ஆனால் இந்த முறை கடல் சீற்றம் மட்டுமே அதிகமாக உள்ளது.

குளச்சல் முதல் மேற்கு கடற்கரைப் பகுதி முழுவதும் மீனவப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் இரு தினங்கள் கடல் அலையின் சீற்றம் இருக்கலாம் என்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.பழனிசாமி, பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் மலையரசன் மற்றும் மீன் துறை அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com