

சென்னை: தமிழக காவல்துறையின் கீழ் இயங்கும் விரல் ரேகைப் பிரிவுக்கு தேவையான ஊழியர்களை நியமிக்காததாலும், அதற்கு தேவைப்படும் வசதிகளைச் செய்து கொடுக்காததாலும் அப் பிரிவு மூடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவிலேயே தமிழக காவல்துறையில்தான் 1895- ல் விரல் ரேகைப் பிரிவு தொடங்கப்பட்டது. தமிழக விரல் ரேகைப் பிரிவு மற்ற மாநில காவல்துறையின் விரல் ரேகைப் பிரிவுகளைவிட முதன்மை இடத்தில் இருந்து வந்தது.
குற்றவாளிகளைக் கண்டறிய தமிழக விரல் ரேகைப் பிரிவில் சுமார் 3 லட்சம் பேரின் விரல் ரேகைப் பதிவுகள் உள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ஆயிரம் வழக்குகளில் குற்றவாளிகள் எளிதாக அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்படுகின்றனர்.
இந்தியாவிலேயே விரல் ரேகை மூலம் குற்றவாளிகளைக் கைது செய்யும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருந்தது. ஆனால் இப்போது 2 அல்லது 3-வது இடத்தையே தேசிய அளவில் பிடிக்கிறது. தமிழக காவல்துறையின் இந்த பின்னடைவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக விரல்ரேகைப் பிரிவை முடக்குவதற்கு நடவடிக்கையை சில அதிகாரிகள் எடுத்ததின் விளைவே, இப்போது அப் பிரிவு பின்னடைவை சந்தித்து வருவதாக அங்கு பணிபுரியும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
காலியான பணியிடங்கள்: விரல் ரேகைப் பிரிவில் கடந்த 20 ஆண்டுகளாக ஒரு பணியிடம்கூட நிரப்பப்படாமல் உள்ளது. 1980- ல் இப் பிரிவில் 285 பேர் பணிபுரிந்தனர். குறிப்பாக சென்னையில் தலைமை அலுவலகத்தில் மட்டும் 100 பேர் வேலை செய்தனர். ஆனால் இப்போது இந்தப் பிரிவில தமிழகம் முழுவதும் 75 பேர் மட்டும் பணிபுரிகின்றனர். தலைமை அலுவலகத்தில் 10 பேர் பணிபுரிகின்றனர்.
சென்னை பெருநகர காவல்துறையில் சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை 17 விரல்ரேகை நிபுணர்கள் வேலை செய்தனர். இப்போது 2 பேரே பணிபுரிகின்றனர். அதேபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் 7 விரல் ரேகை நிபுணர்கள் வேலை செய்தனர். இப்போது பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு நிபுணரோடு மூடப்படும் சூழ்நிலையில் அப் பிரிவு இயங்குகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக புதிதாக ஊழியர்கள் நியமிக்காமலும், அப் பிரிவுக்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்காமலும், புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தாததாலும் விரல் ரேகைப் பிரிவு புறக்கணிக்கப்படுகிறது. 2001-க்கு பின்னர் இப் பிரிவு முழுமையாக புறக்கணிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆள்பற்றாக்குறை, நவீன வசதியின்மை போன்ற காரணங்களால் ஒரு வழக்கின் விசாரணைக்கு வழிகாட்டியாக இருக்கும் விரல் ரேகைகளை காவல்துறையினர் பெறுவதில் இடர்ப்பாடு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்வதில் போலீஸôர் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.
முடக்கப்படும் விரல்ரேகை பிரிவு: காவல்துறையின் அனைத்து நிலைகளிலும் விரல் ரேகை பிரிவு புறக்கணிக்கப்பட்டு வருகிறது என கைரேகை நிபுணர் ஒருவர் கூறுகிறார். அதேநேரத்தில் அத்துறை திட்டமிட்டு முடக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவிக்கிறார். கடந்த ஆட்சிக்காலத்தில் விரல் ரேகை கண்டறியும் வகையில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தலா ரூ. 35 ஆயிரத்துக்கு கைரேகை பதிவு பெட்டி வழங்கப்பட்டது. ஆனால் எந்த காவலருக்கும் விரல்ரேகையை எப்படி பதிவு செய்வது என்று ஒரு நாள்கூட பயிற்சி அளிக்கப்படவில்லை.
ஒரு வழக்கில் விசாரணை அதிகாரியோ அல்லது விசாரணையின் கீழ் பணிபுரியும் ஊழியர்களோ விரல் ரேகைகளை பதிவு செய்யக் கூடாது என சட்டம் கூறுகிறது. ஆனால் காவல்துறை உயர் அதிகாரிகள் அதை கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
இக் காரணங்களால் நேரடியான பாதிப்பைவிட, மறைமுக பாதிப்பை காவல்துறையினர் சந்தித்து வருகின்றனர். முக்கியமாக ஒரு வழக்கின் உண்மையான குற்றவாளியை கண்டறிந்து கைது செய்வதிலும் போலீஸôர் பெரும் இடர்பாட்டை சந்திக்கின்றனர். வழக்கில் தொடர்பு இல்லாத அப்பாவிகள் சிக்கவைக்கப்பட்டு அவதிக்கு உள்ளாக்கப்படுவதாக தெரிகிறது.
எனவே காவல்துறை விரல்ரேகை பிரிவை முடக்குவதற்குரிய நடவடிக்கையை கைவிட்டு, அதை சீர்படுத்துவற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இல்லையெனில் குற்றவாளிகள் வழக்கில் தப்பிச் செல்வது தொடர்ந்து நடைபெறும் என அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.