

சென்னை, செப். 23: மாநகராட்சிகள், நகராட்சிகளில் எரிசக்தி பயனீட்டு அளவு மற்றும் பராமரிப்புச் செலவினைக் குறைக்கும் வகையில் குழல் விளக்குகளுக்குப் பதிலாக, எல்.இ.டி. விளக்குகளைப் பயன்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, 2012-13 ஆம் ஆண்டில் பரிசோதனை முறையில் 9 மாநகராட்சிகள், 35 நகராட்சிகள், 101 பேரூராட்சிகளில் குழல் விளக்குகளுக்குப் பதிலாக எல்.இ.டி. விளக்குகளைப் பொருத்துவதற்காக தொழில்நுட்பக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப அதிகரித்து வரும் எரிசக்தி தேவை மற்றும் பராமரிப்புக்கான செலவுகளை எதிர்கொள்வதில் நகராட்சிகள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றன.
எனவே, பராமரிப்புச் செலவைக் குறைப்பதற்காக, திறன் குறைந்த குழல் விளக்குகளுக்குப் பதிலாக, திறன் மிகுந்த எல்.இ.டி. மற்றும் சூரிய சக்தி மின் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தெரு விளக்குகள் ஒளிர்வதில் ஒளியின் அளவை மட்டுப்படுத்தும் முறையினைப் பின்பற்றி, மின் நுகர்வைக் குறைப்பது, தெரு விளக்குகளை பயன்படுத்துவதில் மேம்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு முறையைப் பயன்படுத்தி, திறமையான பராமரிப்பு மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இவற்றால் ஏற்படும் பயன்களை குறிப்பிட்ட கால அளவில் அளவிடவும், ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
2012-13 ஆம் ஆண்டில் பரிசோதனை முறையில் 9 மாநகராட்சிகள், 35 நகராட்சிகள், 101 பேரூராட்சிகளில் இப்போது பயன்பாட்டில் உள்ள குழல் விளக்குகளுக்குப் பதிலாக எல்.இ.டி. போன்ற ஆற்றல்மிக்க மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கும் வகையில் தொழில்நுட்ப குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நகராட்சி நிர்வாக ஆணையரகத்திற்காக நகராட்சி நிர்வாக ஆணையரக தலைமைப் பொறியாளர் தலைமையில் 9 பேர் கொண்ட தொழில்நுட்பக் குழுவும், நகராட்சி நிர்வாக ஆணையர் தலைமையில் 7 பேர் கொண்ட உயர்நிலை அதிகார குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.
பேரூராட்சிகளைப் பொருத்தவரை பேரூராட்சி இயக்குநர் அலுவலகத்தில் உள்ள நிர்வாகப் பொறியாளர் தலைமையில் 9 பேர் கொண்ட தொழில்நுட்பக் குழுவும், பேரூராட்சிகள் இயக்குநர் தலைமையில் 6 பேர் கொண்ட உயர்நிலை அதிகாரக் குழுவும் அமைக்கப்படும்.
இதற்காக பொது ஏல ஆவணம் அறிமுகப்படுத்தியும், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் இதனை நடைமுறைப்படுத்தவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ரூ.26 கோடி ஒதுக்கீடு: போதிய இடவசதி மற்றும் அடிப்படை வசதியின்றி இயங்கி வரும் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களுக்கு புதிய அலுவலகங்கள் கட்ட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதனடிப்படையில், சேலம் மாநகராட்சி மற்றும் ஓசூர், மறைமலைநகர், கொடைக்கானல், சங்கரன்கோவில், திருச்செங்கோடு, ராணிப்பேட்டை, தேனி-அல்லிநகரம், தருமபுரி, துறையூர், பரமக்குடி ஆகிய 10 நகராட்சிகளுக்கு ரூ.37 கோடி செலவில் புதிய அலுவலகங்கள் கட்டப்பட உள்ளன.
இதற்கான அரசு மானியமாக ரூ.26 கோடியை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அந்த
செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.