ஈரோட்டில் தினமும் ரூ.15 கோடி உற்பத்தி இழப்பு

ஈரோடு: தினமும் 14 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருவதால் ஈரோடு மாவட்டத்தில் 40 சதவீத தொழில் நிறுவனங்கள் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மின்வெட்டு காரணமாக இம்மாவட்டத்தில் தினமும் ரூ.15 கோடி வரை
ஈரோட்டில் தினமும் ரூ.15 கோடி உற்பத்தி இழப்பு
Updated on
2 min read

ஈரோடு: தினமும் 14 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருவதால் ஈரோடு மாவட்டத்தில் 40 சதவீத தொழில் நிறுவனங்கள் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மின்வெட்டு காரணமாக இம்மாவட்டத்தில் தினமும் ரூ.15 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டு வருகிறது.

 கொங்கு மண்டலத்தில் தொழில் வளம் மிகுந்த மாவட்டங்களில் ஒன்றான ஈரோடு மாவட்டத்தில் விசைத்தறிகள், துணி பதனிடும் ஆலைகள், துணி சலவை ஆலைகள், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள், மஞ்சள் அரவை ஆலைகள், அரிசி ஆலைகள், உணவுப் பொருள்கள் தயாரிப்பு ஆலைகள் உள்ளிட்ட சுமார் 20 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

 கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வரும் அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத மின்வெட்டால் உற்பத்தி இழப்பு, ஆர்டர் இழப்பு, நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் ஈரோடு தொழில் நிறுவனங்கள் சிக்கித் தவித்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த ஒருவாரமாக ஈரோடு மாவட்டத்தில் தினமும் 14 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், தொழில் நிறுவனங்களின் நிலை மேலும் மோசமாகிவிட்டது. நூல் உற்பத்தி ஆலைகள், காடா உற்பத்திக்கூடங்கள், துணி பதனிடும் ஆலைகள், துணி சலவை ஆலைகள், துணி உலர்த்தும் ஆலைகள் உள்ளிட்ட 13 வகையான துணி உற்பத்தி ஆலைகள், அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

 இதேபோன்ற நிலை கடந்த பிப்ரவரி மாதம் முழுவதும் நீடித்தது. பின்னர் காற்றாலை உற்பத்தி ஓரளவு கைகொடுத்ததால் மின்வெட்டு நேரம் குறைந்து தொழில் நிறுவனங்களில் உற்பத்தி அதிகரித்தது. இந் நிலையில், இப்போது பிப்ரவரி மாதத்தைவிட மோசமான மின்வெட்டு அமல்படுத்தப்படுவதால் தொழில் நிறுவனங்கள் மீண்டும் முடங்கியுள்ளன.

 இதுகுறித்து, ஈரோடு மாவட்ட அனைத்து தொழில்வணிக சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் என்.சிவநேசன் கூறியது: 14 மணி நேர மின்வெட்டு காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் தினமும் ரூ.15 கோடி உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. ஜெனரேட்டரைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்தால் ஒரு யூனிட்டுக்கு ரூ.15 செலவாகும். இதன் மூலமாக ஜவுளி உற்பத்திச் செலவு பல மடங்கு அதிகரிக்கும்.

 கடந்த ஒருவாரமாக மின்வெட்டு அதிகரித்துள்ளதால் பிளாஸ்டிக், உணவுப்பொருள் உற்பத்தி ஆலைகள் உள்ளிட்ட 40 சதவீத தொழில் நிறுவனங்கள் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. 25 சதவீத தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

 இதனால், வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும். குஜராத் போன்ற மின் உற்பத்தி மிகுந்த மாநிலங்களுக்கு சிறப்புக் குழுவை அனுப்பி, அங்கு எந்தெந்த வகையில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை அறிய வேண்டும்.

 முதல்கட்டமாக, மத்திய அரசின் மின் சிக்கன திட்டத்தின்கீழ் ரூ.15 விலையில் சி.எஃப்.எல். பல்புகள் வழங்கும் திட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும். புழக்கத்தில் இருக்கும் 1.75 கோடி குண்டு பல்புகளுக்குப் பதிலாக சி.எஃப்.எல். பல்புகளைப் பயன்படுத்தினால் 600 மெகாவாட் மின்சாரத்தைச் சேமிக்க முடியும் என்றார்.

 ஈரோடு மாவட்ட துணி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கச் செயலர் எஸ்.சிவானந்தன் கூறியது: ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களில் கடந்த ஒருவாரமாக உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்தில் ஆர்டர்களை முடிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. பகலிலும், இரவிலும் அதிகநேரம் மின்வெட்டு ஏற்படுவதால் தொழிலாளர்களுக்கு ஊதிய இழப்பும் ஏற்படுகிறது. தொழில் நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஆலோசனை செய்ய வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com