
காஞ்சிபுரம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலர் ஞாயிற்றுக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை பதற்றம் ஏற்பட்டது. அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.
காஞ்சிபுரம் எல்லப்பன் தெருவைச் சேர்ந்தவர் அம்பேத்கர் வளவன் (எ) நாராயணன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட துணைச் செயலராக இருந்தார். ÷இவரது அலுவலகம் காஞ்சிபுரம் அன்னை இந்திரா காந்தி சாலையில் உள்ளது. அம்பேத்கர் வளவன், ஒன்றிய அமைப்பாளர் புத்தேரி ஸ்டான்லி மற்றும் சிலர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அம்பேத்கர்வளவனுக்கு செல்போனில் அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது. செல்போனில் பேசிக்கொண்டே அன்னை இந்திரா காந்தி சாலையில், உள்ள சிக்னல் அருகே, காமாட்சியம்மன் கோயிலுக்குச் செல்லும் பாதையில் மறைவிடத்தில் நின்றுப் பேசியுள்ளார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல், அம்பேத்கர் வளவனை அரிவாள்,கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார். அவருடன் நின்று பேசிக் கொண்டிருந்தவர்கள், தேடிப் பார்த்த போது, ரத்த வெள்ளத்தில் துடித்துக் கிடந்தது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி. மனோகரன் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அம்பேத்கர்வளவனை மேல்சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இது குறித்து அம்பேத்கர்வளவனின் மனைவி இந்திரா (38) சிவகாஞ்சி போலீஸில் புகார் செய்தார். அவரது புகார் மனுவில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் மற்றும் பிரபு ஆகியோரின் தூண்டுதலின்பேரில்தான் இந்த சம்பவம் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஸ்ரீதர் அண்மையில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்த பிரபுவை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்: மாவட்டச் செயலர் விடுதலைச் செழியன் தலைமையில் கட்சியினர் மருத்துவமனை முன்பு, ரயில்வே சாலையின் நடுவே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடலை வாங்க மறுத்து வந்தனர். ÷இதைத் தொடர்ந்து எஸ்.பி. மனோகரனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து 2 மணி நேரத்துக்குப் பிறகு உடலைப் பெற்றுக் கொண்டனர்.
கடைகள் அடைப்பு: காஞ்சிபுரத்தில் ரயில்வே சாலை, மார்க்கெட், காந்தி சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன.
பள்ளிகளுக்கு விடுமுறை
காஞ்சிபுரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து திங்கள்கிழமை நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ÷மேலும் சில இடங்களில் திங்கள்கிழமையும் கொலை நடந்ததாக வதந்தி காட்டுத் தீ போல பரவியது.
இதைத் தொடர்ந்து நகரில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கும் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு விடுமுறை அளிக்கப்பட்டது.
திங்கள்கிழமையும் கொலை என புரளி
அம்பேத்கர் வளவன் படுகொலை செய்யப்பட்டது குறித்து அறிந்த கட்சியினர் திங்கள்கிழமை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை முன்பு குவிந்தனர். அங்கு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காஞ்சிபுரத்தில் மடம் தெரு, சேக்குபேட்டை சாலியர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மேலும் ஒரு கொலை என பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் போலீஸார் அப்பகுதிகளுக்கு விரைந்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவை புரளி என தெரியவந்தது.
இறுதி ஊர்வலத்தில் பரபரப்பு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகரின் உடலை அரசு மருத்துவமனையில் இருந்து பெற்றுக் கொண்டு ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம், கொலை நடந்த சம்பவம் அருகே வந்த போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த பா.ம.க. கொடி மரத்தை சாய்த்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள ஒரு விடுதியில் கற்களை வீசினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இருசக்கர வாகனங்கள் எரிப்பு
இக் கொலை தொடர்பாக, ஸ்ரீதர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இறுதி ஊர்வலம் அம்பேத்கர்வளவன் வீடு அருகே வந்த போது, உடன் வந்த தொண்டர்கள் அருகே இருந்த ஸ்ரீதர் வீட்டில் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
மேலும் வீட்டின் வராண்டாவில் நிறுத்தி வைத்திருந்த ஒரு சைக்கிள் மற்றும் இருசக்கர மோட்டார் வாகனத்தை தீயிட்டு கொளுத்தினர்.
ஊர்வலத்தில் பாதுகாப்புக்காக வந்த போலீஸார் தீயை அணைத்தனர். சம்பவத்தின் போது ஸ்ரீதர் வீட்டில் அவரது குடும்பத்தார் யாரும் இல்லை.