சித்தேரி மலைவாழ் மக்களை கலங்கடிக்கும் "தலசீமியா'!

தருமபுரி: மருத்துவ உலகுக்கு சவால் விடும் நோய்களில் ஒன்றான தலசீமியா  (Thalassemia)  எனும் ரத்த அழிவுச் சோகையானது, சித்தேரி மலைவாழ் மக்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.  5 ஆண்டு
சித்தேரி மலைவாழ் மக்களை கலங்கடிக்கும் "தலசீமியா'!

தருமபுரி: மருத்துவ உலகுக்கு சவால் விடும் நோய்களில் ஒன்றான தலசீமியா  (Thalassemia)  எனும் ரத்த அழிவுச் சோகையானது, சித்தேரி மலைவாழ் மக்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

 5 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிப்பாரின்றி தவிக்கும் இந்தக் குழந்தைகளுக்குள்ள பாதிப்பு தொடர்பாகவும், மருத்துவ உதவி மற்றும் இந்தப் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ ஆய்வுகள் தொடர்பாகவும், மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

 கல்வி, பொருளாதாரம், சமூகச் சூழல் என அனைத்திலும் பின்தங்கிய மாவட்டமாகக் கருதப்படும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள சித்தேரி மலைப் பகுதியில் இந்த நோயின் தாக்கம் இருப்பதால் யாருமே கண்டு கொள்ளாத நிலையே உள்ளது.

 கடல் மட்டத்திலிருந்து 3,850 அடி உயரத்தில் உள்ள இந்த மலையில் 63 கிராமங்கள் உள்ளன. சித்தேரி ஊராட்சிக்குள் வரும் இந்தக் கிராமங்கள் மற்றும் மலைப் பகுதி 400 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டவை. இதில், சித்தேரி, சூரிக்கடை, மாங்கடை, எஸ். அம்மாபாளையம், குள்ளம்பட்டி ஆகியவை முக்கிய வருவாய்க் கிராமங்களாகும். சுமார், 10 ஆயிரம் மக்கள்தொகையுடன் 2,400 வீடுகள் உள்ளன. 95 சதவீதத்துக்கு மேலாக பழங்குடியினத்தவர்களே வசித்து வருகின்றனர்.

 எழுத்தறிவு பெறாத இந்த மக்களின் பேச்சில்கூட வராமல் உள்ள "தலசீமியா' என்ற சொல் இந்தப் பகுதி குழந்தைகளின் உடலில் நோயாக உருவெடுத்து உதிரத்தை உறிஞ்சி வருகிறது.

 தலசீமியா: தலசீமியா என்பது பின்னடையும் தன்மையுள்ள மரபு சார்ந்த ரத்த நோயாகும். தாய், தந்தை வழியாகப் பெறப்படும் குறைபாடுடைய மரபணுக்களால் இந்த நோய் உருவாகிறது. அசாதாரண ஹீமோகுளோபின் உற்பத்தியால் ஏற்படும் ரத்தம் தொடர்பான நோய்களின் தொகுப்பாகும். ஹீமோகுளோபினைச் சேர்ந்த குளோபின் சங்கிலியின் குறைந்த சேர்க்கை வீதத்தால் ஏற்படுகிறது. இது மத்திய தரைக் கடலில் வசிக்கும் மக்களிடையே காணப்படுகிறது. மத்திய ஆப்பிரிக்கா, ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த குழந்தைகளிடம் இந்தப் பாதிப்பு உள்ளது. ஆல்ஃபா, பீட்டா, டெல்டா என்ற வகைகளில் நோய்த் தாக்கம் உள்ளது.

 ஆல்ஃபா எனப்படும் அதிகப்படியான ரத்த அழிவுச் சோகை உள்ளவர்கள் குழந்தைப் பருவத்திலேயே இறக்க நேரிடும். பீட்டா வகை பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அவர்களது நோயின் தன்மைக்கேற்ப 10 நாள், 15 நாள் அல்லது ஒரு மாதத்துக்கு ஒருமுறை ரத்தமேற்றுதல் தேவைப்படும். இதர வகை ரத்த அழிவுச் சோகைகள் கடுமையானவை அல்ல.

 நோய் அறிகுறிகள்: வெளிரிய தோல், சோர்வு, பலவீனமடைதல், விரைவான சுவாசம் காணப்படும். எரிச்சலடைதல், தோல் மஞ்சள் வண்ணமாக மாறுதல், மந்தமான வளர்ச்சி, அடி வயிறு வெளித் தள்ளிக் கொண்டிருத்தல், முக எலும்பு உருக்குலைதல், அடர்நிற சிறுநீர் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

 உலகளவிலேயே இந்த நோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை என ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் மரபு பரிசோதனை மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதால் தலசீமியா பாதிப்பு அதிகளவில் உறுதி செய்யப்படுகிறது. வரும் காலங்களில் இந்த நோய் பெரிதும் கவலை தரக் கூடியதாக அமையும். உலக ரத்த வங்கி மற்றும் குழந்தைகளின் உடலை பாதிக்கும் பூதாகர பிரச்னையாக உருவெடுக்கும் எனவும் மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

 உலகுக்கே சரிவரப் புலப்படாத இந்த நோய் சித்தேரி மலையில் உள்ள குக் கிராம மக்களுக்கு எப்படி புலப்படும். இப்போது இங்கு வெளிச்சத்துக்கு வந்திருப்பது சொற்பக் குழந்தைகள் மட்டுமே.

 சித்தேரி, பேரேரி, தெக்கல்பட்டி ஆகிய 3 கிராமங்களில் மட்டும் 8 குழந்தைகளுக்கு இந்த நோய் பாதிப்பு உள்ளது. 63 கிராமங்களிலும் முழுமையான மருத்துவ ஆய்வுகள் மேற்கொண்டால் இந்த எண்ணிக்கை உயரக் கூடும்.

 இந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் அனைவருமே கூலித் தொழிலாளர்கள். அன்றாட விவசாயக் கூலி, கட்டடப் பணி மற்றும் இதர கூலி வேலைகளுக்குச் சென்றால் மட்டுமே குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்ற நிலையில் உள்ளனர்.

 கிடைக்கின்ற சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தவே திண்டாடும் இவர்களால், சாதாரண நோய்களுக்கே சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியவில்லை.

 மலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை நம்பியே தங்களது மருத்துவத் தேவையை நிறைவு செய்து வருகின்றனர். இதில், புரியாத, புலப்படாத நோய் பாதிப்பு என்பது இந்தப் பகுதி மக்களை பெரிதும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

 நோய் பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் உயிர்காக்க கூலித் தொழிலாளர்கள் குடும்பங்கள் அலைந்து திரியும் சூழல் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com