
தருமபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் வன்முறைச் சம்பவத்தில் சரிவரச் செயல்படாத காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவர் காதல் திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை நாகராஜ் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்த விசாரணையின் போது, பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் பெருமாள், பெண்ணின் தந்தையை இழிவுபடுத்தியதாகவும், இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் வன்முறை ஏற்பட்டது. அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த காரிமங்கலம் காவல் ஆய்வாளர் ஜெகநாதன், வன்முறையைக் கட்டுப்படுத்த தவறியதாகவும், இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
வன்முறைக்கு காரணமாகக் கூறப்படும் உதவி ஆய்வாளர் பெருமாளை விசாரணை செய்ய வேண்டும் என உயிரிழந்த நாகராஜின் மனைவி தேன்மொழி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, விசாரணை நடத்த காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு வன்முறை பகுதிகளைப் பார்வையிட்ட தலித்துகளுக்கான தேசிய ஆணையக் குழுவினர், இந்தச் சம்பவம் தொடர்பாக 6 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில், வன்முறையின் போது உயர் அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் அளிக்காத காவல் ஆய்வாளர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய சேலம் சரக டிஐஜிக்கு மாவட்ட எஸ்.பி. ஆஸ்ரா கர்க் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, காவல் ஆய்வாளர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்து சரக டிஐஜி சஞ்சய் குமார் உத்தரவிட்டார்.
மேலும், வன்முறைக்கு காரணமாகக் கூறப்படும் கிருஷ்ணாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பெருமாளை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி. ஆஸ்ரா கர்க் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.