அறச்சீற்றத்துடன் கூடிய எழுத்தாளர் கல்கி: திருப்பூர் கிருஷ்ணன்

அறச்சீற்றத்துடன் கூடிய எழுத்தாளர் கல்கி என அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் புகழாரம் சூட்டினார்.
அறச்சீற்றத்துடன் கூடிய எழுத்தாளர் கல்கி: திருப்பூர் கிருஷ்ணன்

அறச்சீற்றத்துடன் கூடிய எழுத்தாளர் கல்கி என அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் புகழாரம் சூட்டினார்.

பொன்னியின் புதல்வர் என்ற தலைப்பில் கல்கியின் வாழ்க்கை வரலாறு எழுதிய சுந்தா (எம்.ஆர்.எம். சுந்தரம்) நூற்றாண்டு விழா சென்னை மயிலாப்பூர் பாரதீய வித்யா பவனில் வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்றது.

 கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவில் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் பேசியது:

கல்கியை நாம் கொண்டாடுகிறோம். எதற்காக அவரைக் கொண்டாடுகிறோம் சரித்திரம், சமூகம், கலை விமர்சனங்கள் என ஏராளமானவற்றை கல்கி எழுதினார். ஆனால், அவை எல்லாவற்றையும் தாண்டி அவருக்கு இருந்த அறச்சீற்றம், அதாவது எல்லா இடங்களிலும் அவருக்கு பொங்கிய தார்மீக ஆவேசம் என்ற ஒரு பண்பால்தான் இன்றளவும் அவரைக் கொண்டாடி வருகிறோம்.

இதுபோன்று பன்முக ஆளுகை கொண்ட கல்கி குறித்த பல்வேறு தகவல்களை சுந்தாவின் "பொன்னியின் புதல்வர்' நூல் நமக்கு விளக்குகிறது. மிகவும் அடக்கமான எழுத்தாளர் சுந்தா. இதற்கு அவருடைய பொன்னியின் புதல்வர் நூலே சிறந்த உதாரணம்.

அதாவது இந்த நூல் சுவாரசியமாக இருப்பதற்கு நானோ, என்னுடைய எழுத்தோ அல்ல, கல்கியின் வாழ்க்கையே மிகவும் சுவாரசியமாக இருப்பதால்தான் இந்த நூலும் சுவரசியமாக இருக்கின்றது என்று அடக்கத்துடன் சுந்தா தெரிவித்திருக்கிறார்.

மேலும், கல்கி குறித்த முழு உண்மையைச் சொல்வதையும் சில இடங்களில் தவிர்த்துள்ளேன் என்று சுந்தா குறிப்பிட்டுள்ளார். ஏனெனில், கல்கி பற்றிய முழு உண்மைகளையும் சொல்வதால், வேறு சிலரின் மனம் அதிகம் புண்படும் என்பதால் தவிர்த்திருப்பதாக மிகவும் நியாயமுடன் தெரிவித்திருக்கிறார்.

கல்கியின் நாத்திக, ஆத்திக கருத்துக்கள், ராஜாஜி நடத்திய மதுவிலக்கு பிரசாரங்கள் தொடர்பான விஷயங்கள் குறித்து கல்கி கூறியிருப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. இப்படிப்பட்ட காவிய நூல், கல்கி ரசிகர்கள் ஒவ்வொருவருடைய வீட்டிலும் இருக்க வேண்டிய நூல் இது என்றார் அவர்.

கல்கியின் பேத்தி கௌரி ராம்நாராயண்: கல்கிக்கு மூன்று உலகம் இருந்தன. ஒன்று பாரத நாடு. மற்றொன்று மண்ணுலகம். மூன்றாவது எல்லையில்லாத கற்பனை உலகம்.

இந்த மூன்று உலகங்களிலும் கல்கி எப்படி சஞ்சரித்தார் என்பதை சுந்தாவைப்போல் நுட்பமாக கவனித்து வேறு யாராலும் எழுதியிருக்க முடியாது.

"பொன்னியின் புதல்வர்' நூலில் சுந்தா, தனி மனிதனின் வாழ்க்கை வரலாற்றை மட்டும் அல்லாமல், அந்த தனி மனிதன் வாழ்ந்த காலத்தின் போக்கையும், சரித்திர நிகழ்வுகளையும், அரசியல் ஆர்ப்பாட்டங்களையும், சமூக மாற்றங்களையும், கலைகளின் மறுமலர்ச்சியையும் ஒருங்கே சங்கமிக்க வைத்திருக்கிறார்.

சுந்தாவின் மகள் ரமாமணி சுந்தர்: கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டும் என கல்கி ராஜேந்திரன் அழைத்த போது, எனது தந்தை சுந்தா முதலில் தயங்கினார். அப்போது, அவரை கட்டாயப்படுத்தி இந்த வரலாற்று நூலை எழுத சம்மதிக்க வைத்தேன்.

இந்தப் பணியை அவர் எடுத்துக்கொண்டபின், முதல் பணியாக சார்லி சாப்லின், மாவீரன் நெப்போலியன் என பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்களை வாங்கி படித்து, தனக்கென தனி பாணியை வகுத்துக்கொண்டார். அதுதான் மிகப் பெரிய வெற்றி. திருநெல்வேலியில் வேலங்காத்தான் என்ற கிராமத்தில் பிறந்து வாழ்ந்த எனது தந்தை, ரூ. 13 ஊதியத்தில் தனது வாழ்க்கையத் தொடங்கியவர், லண்டன் சென்று பி.பி.சி.-யில் பணிபுரியும் அளவுக்கு உயர்ந்தார்.

புத்தகம் வாங்க பணம் இல்லாத காரணத்தால், திருநெல்வேலியில் ரயில் நிலையத்தில் உள்ள ஒரு புத்தகக்கடைக்குச் சென்று, அங்கு வருகின்ற புத்தகங்களையெல்லாம் அங்கேயே அமர்ந்து இலவசமாக படித்து பொது அறிவை, இலக்கிய அறிவையும் வளர்த்துக்கொண்டுள்ளார்.

திருநெல்வேலி குற்றாலத்தில் டி.கே.சிதம்பரநாதர் முதலியார் வீட்டில் வட்டத் தொட்டி என்று அவ்வப்போது நடைபெறும் இலக்கியக் கூட்டங்களில் தவறாமல் பங்கேற்றுள்ளார். இதன் மூலம் அவருடைய இலக்கிய ரசனை வளர்ந்ததோடு, கல்கி, ராஜாஜி, ஜஸ்டிஸ் மகராஜன் போன்ற பல அறிஞர்களின் அறிமுகமும் அவருக்கு கிடைத்தது.

அதன் பிறகு, திருச்சி வானொலியில் பணிக்குச் சேர்ந்தார். அந்த கால கட்டத்தில் பல வானொலி நாடங்களை தயாரித்து அளித்திருக்கிறார். பல ஆங்கில சொற்களுக்கு தமிழ்ச் சொற்களை எனது தந்தை உருவாக்கினார். உதாரணமாக, குழந்தைகள் காப்பகம், அடிக்கல் நாட்டுதல் என்பன உள்ளிட்ட பல்வேறு சொற்கள் அவர் உருவாக்கியதுதான். தமிழ் அகராதி ஒன்றையும் உருவாக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு, லண்டன் பி.பி.சி.யில் இரண்டரை ஆண்டுகள் பணியாற்றினார் என்று தந்தையை நினைவுகூர்ந்தார் ரமாமணி சுந்தர்.

விழாவில் "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் பங்கேற்று சுந்தாவின் திருஉருவப் படத்தை திறந்து வைத்தார். வானதி பதிப்பக வெளியீடான "பொன்னியின் புதல்வர்' புதிய பதிப்பை அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் வெளியிட, முதல் பிரதியை ஆனந்த விகடன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் வீயெஸ்வி பெற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய முன்னாள் தலைவர் ஆர். நடராஜ், இந்திரா பார்த்தசாரதி, மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல. கணேசன் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர்.

முன்னதாக, விழாவில் ஆதித்ய பிரகாஷ் இறைவணக்கம் பாடினார். கல்கி பொறுப்பாசிரியர் ஆர். வெங்கடேஷ் வரவேற்புரையாற்றினார். சீதா ரவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com