
நீலகிரி மாவட்டத்தில் ரூ.7 ஆயிரம் கோடியில் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யக் கூடிய புதிய புனல் மின் திட்டம் உருவாக்கப்பட்டு, அந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் நிறைவு பெற சுமார் எட்டு முதல் பத்து ஆண்டுகள் வரை ஆகும் எனவும் அவர் அறிவிப்புச் செய்துள்ளார்.
சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை படித்தளித்த அறிக்கை:
தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டை முற்றிலும் நீக்கும் வகையில், தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. வடசென்னை அனல்மின் திட்டத்தின் அடுத்த அலகு மே மாதம் முதல் தனது உற்பத்தியைத் தொடங்க உள்ளது. வல்லூர் கூட்டு மின் திட்டத்தின் மூன்றாவது அலகு வரும் அக்டோபர் முதல் தனது உற்பத்தியைத் தொடங்க உள்ளது. தூத்துக்குடி கூட்டு மின் திட்டத்தின் 500 மெகாவாட் திறனுடைய இரு அலகுகள் முறையே வரும் டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு மார்ச் முதல் உற்பத்தியைத் தொடங்க உள்ளன.
மின் நிலையப் பணிகள் தீவிரம்: 660 மெகாவாட் திறனுடைய எண்ணூர் விரிவாக்கத் திட்டம் அமைப்பதற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளிகள் பரிசீலனையில் உள்ளன. இரண்டு 660 மெகாவாட் திறனுடைய எண்ணூர் சிறப்புப் பொருளாதார மையத் திட்டம், இரண்டு 660 மெகாவாட் திறனுடைய உடன்குடி அனல்மின் திட்டம் ஆகியவற்றுக்கான ஒப்பந்தப் புள்ளிகளும் கோரப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் இரண்டு 800 மெகாவாட் திறனுடைய மின் நிலையம் அமைக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
சில்லஹல்லா நீரேற்று மின் திட்டம்: நீலகிரி மாவட்டத்தில் ரூ.7 ஆயிரம் கோடியில் 2 ஆயிரம் மெகாவாட் மின் திறனுடைய சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் உருவாக்கப்படும். இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும்.
முதல் கட்டமாக, குந்தா நதியின் துணை நதியான சில்லஹல்லா ஆற்றின் குறுக்கே 90.8 மீட்டர் உயரத்துக்கு 2.25 டி.எம்.சி. அடி கொள்ளளவு கொண்ட சில்லஹல்லா மேல் நீர்த்தேக்கம் நிறுவப்பட்டு இப்போது பயன்பாட்டில் உள்ள 5.5 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அவலாஞ்சி-எமரால்டு நீர்த்தேக்கங்களுடன் இணைக்கப்படும். இதனை இணைப்பதற்காக 2 ஆயிரத்து 750 மீட்டர் நீளமுடைய நீர்வழித் தடம் அமைக்கப்படும்.
இரண்டாவது கட்டமாக, சில்லஹல்லா நீர்த் தேக்கத்துக்கும், பில்லூர் நீர்த் தேக்கத்துக்கும் இடையே உள்ள ஆயிரத்து 500 மீட்டர் உயரத்தைப் பயன்படுத்தி 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய மின் நிலையம் அமைக்கப்படும்.
இந்த மின் நிலையம் நிலத்தடி மின் நிலையமாக அமையும். மின் உற்பத்திக்குப் பின் பயன்படுத்தப்பட்ட நீர், கடைவாயில் சுரங்கம் வழியாக பில்லூர் நீர்த் தேக்கத்தை அடையும். நிலத்தடி மின் நிலையத்தை அடைய அணுகு சுரங்கு வழி அமைக்கப்படும். இந்தத் திட்டம் நிறைவுப் பெற சுமார் 8 முதல் 10 ஆண்டுகள் ஆகும்.
உச்ச மின் தேவை: இந்தப் புதிய திட்டம் அதிகரித்து வரும் காற்றாலை மின் உற்பத்தி, நிறுவப்படவுள்ள சூரியமின் உற்பத்தி மற்றும் இரவு நேரங்களில் அனல் மற்றும் அணுமின் நிலையங்களில் மிகையாகக் கிடைக்கப் பெறும் மின்சாரத்தை சேமித்து வைக்கும் விதமாக, இந்த உபரி மின்சாரத்தைப் பயன்படுத்தி கீழ் நீர்த் தேக்கங்களில் இருந்து மேல் நீர்த்தேக்கத்துக்கு நீர் ஏற்றி வைக்கப்படும்.
அவ்வாறு ஏற்றித் தேக்கப்பட்ட நீரையே பயன்படுத்தி உச்ச மின் தேவை காலங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
15 ஆண்டுகளுக்கு ஆயிரம் மெகாவாட்
தமிழகத்தில் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் இயக்கி வைக்கப்பட்டும், புதிய மின் திட்டங்கள் தொடங்கப்பட்டும் வருகின்றன.
இந்த நிலையில், பற்றாக்குறையை 85 சதவீதம் வரை ஈடு செய்யும் வகையில் நீண்ட கால அடிப்படையிலான ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் மின் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வகையில் முதல் கட்டமாக வரும் அக்டோபர் முதல் நீண்ட கால அடிப்படையில் 15 ஆண்டுகளுக்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் என சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.