

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலைப் பகுதியில் அரிய வகை சருகு மானை வேட்டையாடிய விவசாயியை வனத் துறையினர் கைது செய்தனர்.
சிறுமலையில் உள்ள குரங்குபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ப.ராமசாமி (48). விவசாயியான இவர், சனிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் வேளாங்கண்ணிபுரம் பகுதியில் உள்ள காப்புக் காட்டில் வனவிலங்கு வேட்டைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சுமார் 2 மணி நேரத்துக்குப் பின்னர் நாட்டுத் துப்பாக்கியால் அரிய வகை சருகு மான் ஒன்றை சுட்டு வீழ்த்திய ராமசாமி, வீட்டுக்குத் திரும்பிச் சென்றுள்ளார். அப்போது, அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சிறுமலை வனச் சரக வனவரும் வனக்காப்பாளர்களும் அதிகாலை நேரத்தில் சாக்குப் பையுடன் வந்த ராமசாமியிடம், சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தியுள்ளனர்.
அதில் சருகு மான் வேட்டையாடியதை ராமசாமி ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் அவரிடமிருந்து ஒற்றைக் குழல் நாட்டுத் துப்பாக்கி, கரிமருந்து, பால்ரஸ் குண்டு, வெடி கேப், ஹெட்லைட் உள்ளிட்ட பொருள்களையும் வனத் துறையினர் கைப்பற்றினர்.
வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ராமசாமியைக் கைது செய்த வனத் துறையினர், அவரை திண்டுக்கல் 1-ஆவது நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.