காஞ்சிபுரம் - சென்னை இடையே புதிய ரயில் சேவை தொடக்கம்

காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை இடையே புதிய மின்சார ரயில் சேவையை விஸ்வநாதன் எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் - சென்னை இடையே புதிய ரயில் சேவை தொடக்கம்
Updated on
2 min read

காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை இடையே புதிய மின்சார ரயில் சேவையை விஸ்வநாதன் எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதற்கான விழா திங்கள்கிழமை காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் நடைபெற்றது. புதிய ரயிலின் முன்பகுதி மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து விஸ்வநாதன் எம்.பி. கொடி அசைத்து 12 பெட்டிகள் கொண்ட புதிய மின்சார ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இதில் 200க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

பின்னர் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது: மக்களின் கோரிக்கைகளை எப்படியாவது நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் காஞ்சிபுரம்- சென்னை கடற்கரை இடையே புதிய மின்சார ரயில் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்த கோரிக்கையை சோனியாகாந்தியிடம் தெரிவித்தேன். அவர் உடனடியாக ரயில்வே அமைச்சகம், ரயில்வே அதிகாரிகளிடம் தெரிவித்து, திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதன் அடிப்படையில்தான் இத்திட்டம் இப்போது கிடைத்துள்ளது. மேலும் இந்த ரயில் நிலையத்தில் மேலும் ஒரு டிக்கெட் கவுன்ட்டர் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளேன் என்றார் விஸ்வநாதன்.

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு 2 நிமிடங்கள் மெüன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரயில்வே கால அட்டவணை

காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை இடையே இயங்கும் புதிய ரயில் சேவை குறித்த அட்டவணையை தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ளது.

சென்னை - தாம்பரம் வரை ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்த 2 ரயில்கள் காஞ்சிபுரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக காஞ்சிபுரத்தில் இருந்து காலை 8 மணி முதல் காலை 10 மணி வரையிலான 2 மணி நேரத்துக்கு ரயில் சேவை இல்லாமல் இருந்தது.

அதேபோல் மாலை 5.20 மணிக்கு பிறகு இரவு நேரத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக் கடற்கரைக்கு நேரடியாக ரயில் சேவை இல்லாமல் இருந்தது.

இது குறித்து ரயில் பயணிகள் தொடர்ந்து விடுத்த கோரிக்கையை ஏற்று குறிப்பிட்ட நேரத்தில் ரயில் சேவையை இயக்கும் வகையில் சென்னை கடற்கரை - தாம்பரம் வரையிலான ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள புதிய ரயில் சேவை குறித்த விவரம்:

சென்னை கடற்கரை காலை 5.40 மணி, தாம்பரம் காலை 6.35 மணி, செங்கல்பட்டு காலை 7.20 மணி, பாலூர் காலை 7.37 மணி, வாலாஜாபாத் காலை 7.52 மணி, காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் காலை 8 மணி, காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் காலை 8.20 மணி.

மீண்டும் புதிய சேவையாக காலை காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் 9 மணி, காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் 9.02 மணி, வாலாஜாபாத் காலை 9.12 மணி, பாலூர் காலை 9.34 மணி, செங்கல்பட்டு, காலை 9.55 மணி, தாம்பரம் 10.45 மணி, சென்னை கடற்கரை காலை 11.40 மணி.

மாலை ரயில் சேவை: சென்னை கடற்கரை மாலை 3.25 மணி, தாம்பரம் மாலை 4.20 மணி, செங்கல்பட்டு மாலை 5.05, பாலூர் மாலை 5.22 மணி, வாலாஜாபாத் மாலை 5.32 மணி, காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் மாலை 5.12 மணி, காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் மாலை 6.15 மணி.

மீண்டும் புதிய சேவையாக மாலை காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் இரவு 7.10 மணி, காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் இரவு 7.12 மணி, வாலாஜாபாத் இரவு 7.22 மணி, பாலூர் இரவு 7.40 மணி, செங்கல்பட்டு இரவு 8.05 மணி, தாம்பரம் இரவு 8.55 மணி, சென்னை கடற்கரை இரவு 9.50 மணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com