காற்றாலை மின் உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாக மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை எழுத்துப்பூர்வமாக அவர் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 746-க்கும் அதிகமான காற்றாலை நிலையங்களின் மூலம் மொத்தம் 19,934 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இது நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 8.72 சதவீதம் ஆகும். தமிழகத்தில் 74 காற்றாலை நிலையங்கள் மூலம் 7,245 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுவே நாட்டின் மிக உயர்ந்த காற்றாலை மின் உற்பத்தியாகும்.
காற்றாலை மின் உற்பத்தியில், 140 நிலையங்களுடன் மகராஷ்டிரம், 3,465 மெகாவாட் மின்சாரம் தயாரித்து இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தைவிட இரண்டு மடங்கு அதிகமான கண்காணிப்பு நிலையங்களைக் கொண்டுள்ள மகராஷ்டிர மாநிலத்தால் காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடம் பிடிக்க முடியவில்லை. குஜராத் 3,313 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி செய்து 3வது இடம் வகிக்கிறது. அந்த மாநிலத்தில் 82 காற்றாலை கண்காணிப்பு நிலையங்கள் உள்ளன.
மொத்தம் 86 காற்றாலை கண்காணிப்பு நிலையங்களுடன் எண்ணிக்கையில் நாட்டில் இரண்டாவது இடம் வகிக்கும் ஆந்திரப் பிரதேசத்தில் 587 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
ராஜஸ்தானில் 37 காற்றாலை நிலையங்கள் மூலம் 2,717 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அந்த மாநிலம் தேசிய அளவில் 4வது இடம் வகிக்கிறது. மேலும், 12 வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 15,000 மெகாவாட் காற்றாலை மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஃபரூக் அப்துல்லா அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.