புதுச்சேரி தலைமைச் செயலர் சத்தியவதி இடமாற்றம்

புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமிக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் நடக்கும் பனிப்போரின் உச்சகட்டமாக, புதுச்சேரி தலைமைச் செயலர் எம்.சத்தியவதி மாற்றப்பட்டுள்ளார்.
புதுச்சேரி தலைமைச் செயலர் சத்தியவதி இடமாற்றம்
Updated on
2 min read

புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமிக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் நடக்கும் பனிப்போரின் உச்சகட்டமாக, புதுச்சேரி தலைமைச் செயலர் எம்.சத்தியவதி மாற்றப்பட்டுள்ளார்.

புதுச்சேரி மாநில தலைமைச் செயலராக எம்.சத்தியவதி கடந்த ஆகஸ்ட் 2011-ம் ஆண்டு பொறுப்பேற்றார். 1982-ம் ஆண்டின் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்ற அவர், 1984 முதல் 1987 வரையும், 2000 முதல் 2005-ம் ஆண்டு வரையும் புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர்.

பின்னர், மத்திய பட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலராகவும், இஸ்ரோ நிறுவனத்தின் பெங்களூர் செயற்கைக்கோள் பிரிவின் கட்டுப்பாட்டாளராகவும் இருந்தவர். புதுச்சேரி மாநில தலைமைச் செயலராக ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் அவர் தற்போது மிசோரம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று புதுச்சேரி ராஜ்நிவாஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

காரணம் என்ன? புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி முடிந்ததும், தனிக் கட்சி தொடங்கிய என்.ரங்கசாமி, 2011-ம் ஆண்டு முதல்வரானதும், மத்திய உள்துறைச் செயலர் ப.சிதம்பரத்திடம் பேசி, உடனடியாக தலைமைச் செயலர் எம்.சத்தியவதியை புதுச்சேரி மாநிலத்துக்குக் கேட்டுப் பெற்றார்.

புதுச்சேரியின் நிதித்துறைச் செயலர் ராஜீவ் யதுவன்ஷி இடமாற்றத்தில் கடந்த ஜனவரி 10-ம் தேதி தலைமைச் செயலர் எம்.சத்தியவதி, துணைநிலை ஆளுநர் இக்பால்சிங் ஆகியோர் கையெழுத்திட்டது பிரச்னையானது.

புதுச்சேரி மாநிலத்தின் நிதித்துறைச் செயலரை மாற்றும் அதிகாரம் மாநில அரசுக்குக் கிடையாது எனக்கூறிய மத்திய உள்துறை அமைச்சகம், அவரது பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டுமெனக் கூறியது.

ஆனால், புதுச்சேரி அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. காரணம், நிதிச் செயலரை மாற்றும் அதிகாரம் புதுச்சேரி அரசுக்கு உண்டு என்றே கூறி வருகிறது. அதனாலேயே, புதுச்சேரி அரசைப் பொறுத்தவரை நிதிச் செயலராக டபிள்யு.வி.ஆர்.மூர்த்தி தொடர்கிறார்.

ஆனால், தில்லியில் நடந்த நிதிநிலை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு, நிதிச்செயலர் என்கிற முறையில் ராஜீவ் யதுவன்ஷியை மத்திய உள்துறை அமைச்சகம் அழைத்திருந்தது. இதனால், ராஜீவ் யதுவன்ஷிதான் புதுச்சேரியின் நிதிச் செயலர் என்பதை உள்துறை அமைச்சகம் நேரடியாகவே கூறியது.

இந்த பிரச்னையின் அடுத்தகட்டமாகத்தான், புதுச்சேரி மாநில தலைமைச் செயலர் எம்.சத்தியவதி மாற்றப்பட்டுள்ளார் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். காரணம், உள்துறை அமைச்சராக சிதம்பரம் இருந்தபோது நியமிக்கப்பட்ட அவர், முதல்வர் ரங்கசாமிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்றே உள்துறை அமைச்சகம் கருதியிருக்கிறது. மேலும், நிதித்துறைச் செயலர் இடமாற்றத்தில் அதிகார வரம்பை மீறி செயல்பட்டதாகவும் உள்துறை அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது.

மேலும் உள்துறை அமைச்சர் ஷிண்டே நேரடியாகக் கடிதம் எழுதியும், அதை அரசு புறக்கணித்திருக்கிறது. அதனடிப்படையிலேயே, முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கமான தலைமைச் செயலரை மாற்ற மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. இதில், மத்திய இணையமைச்சர் நாராயணசாமியின் பங்கும் உண்டு என்கின்றனர்.

அதே நேரத்தில், புதுச்சேரி மாநிலத்திலிருந்து சத்தியவதி விடுவிக்கப்பட்டதும், அடுத்த தலைமைச் செயலரை மத்திய அரசு உடனடியாக நியமிக்கப்போவதில்லை. முதல்வர் ரங்கசாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவரால் நீக்கப்பட்ட ராஜீவ் யதுவன்ஷியை பொறுப்பு தலைமைச் செயலராக நியமிக்கவும் மத்திய அரசு திட்டமிடுகிறது என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் முதல்வர் ரங்கசாமிக்கு மத்திய அரசிடம் இருந்து நெருக்கடி முற்றுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com