தொட்டுவிடும் தூரத்தில் ஆபத்து!

மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலுக்கு செல்லும் பாதையில் சுற்றுலாப் பயணிகள் நடமாட்டம் அதிகமுள்ள
தொட்டுவிடும் தூரத்தில் ஆபத்து!
Updated on
1 min read

மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலுக்கு செல்லும் பாதையில் சுற்றுலாப் பயணிகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் மின் விநியோக ஜங்ஷன் பாக்ஸ் பல மாதங்களாக திறந்த நிலையில் உள்ளது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் கைக்கு எட்டும் தூரத்தில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் இது அமைந்துள்ளது.

  சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கிக் கொண்டிருக்கும் மாமல்லபுரம் கடற்கரைச் சுற்றுலா மையமாக உள்ளது. இங்குள்ள பல்லவர் கால சிற்பங்களைக் காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளே அதிகம்.

குறிப்பாக பொங்கல் விடுமுறையில் மாமல்லபுரத்துக்கு வருவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். பொங்கல் விடுமுறை முடிந்தாலும் குடியரசு தினம் வரை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதேபோல் தமிழகத்தின் இதர பகுதிகளில் பொங்கல் விழாவைக் காணவந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் தற்போது

மாமல்லபுரத்துக்கு வரத் தொடங்கியுள்ளனர். எனவே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும், பள்ளிகள் வாயிலாக குழந்தைகளும் மாமல்லபுரத்துக்கு தினமும் வந்து செல்கின்றனர்.

இவ்வாறு மக்கள் அதிகம் வரும் இப்பகுதியில் கடற்கரைக் கோயிலுக்கு செல்லும் வழியில்தான் மின்சார ஜங்ஷன் பாக்ஸ் நீண்ட நாட்களாக ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கிறது. கைக்கு எட்டும் தூரத்தில் இது அமைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அச்சத்துடன் வந்து செல்ல வேண்டியுள்ளது.

இங்கு வரும் குழந்தைகள் விளையாடும் ஆர்வத்தில் அறியாத நிலையில் இதை தொட்டுவிட்டால் என்ன ஆகும் என்பதை சுற்றுலா மைய அதிகாரிகளும், மின்வாரிய அதிகாரிகளும்தான் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவர். ஒருவேளை இப்பெட்டி செயலற்று இருந்தாலும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இத்தனை நாட்களாக திறந்த நிலையில் உள்ள மின்பெட்டி குறித்து சுற்றுலா மைய அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பது ஏன் என பொதுமக்கள் வினா எழுப்புகின்றனர். அதேசமயம் மின்வாரிய அதிகாரிகளும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு இதை சீர்செய்ய வேண்டும் என்பதே இங்குவரும் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com