நிலக்கடலை மகசூலுக்கு உதவும் விதைப்பண்ணை!

தருமபுரி மாவட்டத்தில் நிலக்கடலை பயிரில் விதைப்பண்ணை அமைத்தால் அதிக மகசூல் பெறலாம் என விதைச்சான்று உதவி இயக்குநர் வெ.கிருஷ்ணன் தெரிவித்தார்.
நிலக்கடலை மகசூலுக்கு உதவும் விதைப்பண்ணை!
Published on
Updated on
2 min read

தருமபுரி மாவட்டத்தில் நிலக்கடலை பயிரில் விதைப்பண்ணை அமைத்தால் அதிக மகசூல் பெறலாம் என விதைச்சான்று உதவி இயக்குநர் வெ.கிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

தருமபுரி மாவட்டத்தில் பெய்யும் பருவமழையை பயன்படுத்தி மானாவாரியாக ஆனி, ஆடிப் பட்டத்தில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் எண்ணெய் வித்து பயிர்களில் உற்பத்தியை அதிகப்படுத்த பல்வேறு திட்டங்களை வேளாண்துறை மூலம் செயல்படுத்தி வருகிறது.

நிலக்கடலையில் டி.எம்.வி.7, டிஎம்வி 13, ஜேஎல் 24 மற்றும் நீஆர்ஐ ஆகிய உயர் விளைச்சல் ரகங்களை இந்தப் பட்டத்தில் சாகுபடி செய்யலாம்.

ஓர் ஏக்கருக்கு 80 கிலோ விதை தேவைப்படும். நிலக்கடலை விதைகளை 30 செ.மீ. மற்றும் 10 செ.மீ. இடைவெளியில் விதைத்து ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும்.

விரிவாக்க மையங்களில் விதை: ஒரே மாதிரியான பொறுக்கு விதைகளைப் பயன்படுத்தி சரியான இடைவெளியில் விதைத்தால் பயிர் எண்ணிக்கை சீராக காணப்படும்.

இதனால், நல்ல மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. விவசாயிகளுக்கு தேவையான விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அவற்றை மானிய விலையில் பெற்று விதைப்பண்ணை அமைக்கலாம்.

அதிக மகசூலுக்கு...: ஏக்கருக்கு 5.0 மெட்ரிக் டன் மக்கிய தொழு உரம், 4:4:18 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து தரவல்ல 10 கிலோ யூரியா, 25 கிலோ சூப்பர் பாஸ்பேட், 30 கிலோ மூயுரேட் ஆப் பொட்டாஷ் உரத்தை மண்ணில் போதிய ஈரம் இருக்கும் போது அடியுரமாக இட வேண்டும்.

விதைகள் மூலம் பரவும் பூஞ்சான் நோயைத் தடுக்க விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைகோ டெர்மாவிரிடி அல்லது 10 கிராம் சுடோமோனாஸ் புளோரசன்ஸ் அல்லது 4 கிராம் திரம் அல்லது 2 கிராம் கார்பன்டைசிம் கொண்டு பூஞ்சான விதை நேர்த்தியும், காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து விதைப்பதற்கு முன் ஓர் ஏக்கருக்கு தேவையான விதையை ரைசோயியம் 2 பாக்கெட், பாஸ்போபேக்டரியா 2 பாக்கெட்டை ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து உயர் உர விதை நேர்த்திச் செய்து நிழலில் உலர வைத்து விதைக்க வேண்டும்.

நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையைப் போக்க: வேளாண் துறையால் பரிந்துரைக்கப்படும் நிலக்கடலை நுண்ணூட்டச் சத்து 5 கிலோவை 20 கிலோ மண்ணுடன் கலந்து விதைத்தவுடன் மண் பரப்பில் தூவ வேண்டும்.

விதைத்த 40-45ஆவது நாளில் ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சத்தை மண்ணைக் கொத்தி இட்டு மண் அணைக்க வேண்டும்.

ஜிப்சத்தில் உள்ள கால்சியம் மற்றும் கந்தகச் சத்து அதிக எண்ணெய் சத்துக் கொண்ட திரட்சியான காய்கள் அதிகளவில் உருவாக உதவுகிறது.

மேலும், நிலக்கடலைப் பயிரில் சுருள் பூச்சி, சிவப்பு கம்பளி புழு மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தாக்க வாய்ப்புள்ளதால் பயிர் பாதுகாப்பு முறைகளை செய்ய வேண்டும்.

விவசாயிகளுக்கு உள்ளூர் சந்தை விலையுடன் பிரீமியம், உற்பத்தி மானியம் கூடுதலாக கிடைப்பதால் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. 2013-14ஆம் நிகழாண்டில் தருமபுரி மாவட்டத்தில் எண்ணெய் வித்து பயிர்களில் 222 ஹெக்டேரில் விதைப்பண்ணை அமைத்து 189 மெட்ரிக் டன் விதைகள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள உதவி விதை அலுவலரை அணுகி கரு, ஆதார நிலை நிலக்கடலை விதைகளை பெற்று அனைத்து தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இரண்டு மடங்கு மகசூலும், தரமான விதைகளை வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு வழங்கி அதிக விலைப் பெற்று மூன்று மடங்கு வருமானம் பெறலாம் என்றார் வெ.கிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com