

விருத்தாசலத்தை அடுத்த தீவளூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். நலத்துறை அதிகாரிகள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்பதே மாணவர்களின் எதிர்பார்ப்பாகும்.
தீவளூர் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில், சரிபாதிக்கு மேல் மாணவிகள் ஆவர். ஆனால், பள்ளியில் கட்டட வசதி, குடிநீர் வசதி போதுமானதாக இல்லை.
கழிப்பறைகளும் பயன்படுத்தாமல் இருப்பதால், சிறுநீர் கழிப்பதற்கு மாணவர்கள் அருகிலுள்ள கருவைக் காடுகளுக்குச் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குடிநீர் வசதியும் போதுமானதாக இல்லாததால், பள்ளிக்கு எதிர்ப்புறம் சுடுகாட்டில் உள்ள மயான கொட்டகையில் அமர்ந்து மதிய உணவு உண்ணும் மாணவர்கள், சுடுகாட்டுக்கு அருகிலுள்ள அடிகுழாயில் தண்ணீர் பிடித்து குடித்து வருகின்றனர்.
இதுகுறித்து பள்ளி மாணவர்கள் தெரிவித்தது: பள்ளிக் கூடத்தில் குடிப்பதற்கு அடிகுழாயிலிருந்து வரும் தண்ணீரில் அதிகளவில் உப்பு கலந்திருப்பதால் அதை குடிக்க முடியாத நிலை உள்ளது. இருப்பினும், வேறு தண்ணீர் வசதி இல்லாததால் அந்த தண்ணீரையே குடித்து வருகிறோம்.
கழிப்பறை வசதியும் இல்லாததால் மாணவிகளுக்கு மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது எனத் தெரிவித்தனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் முரளி தெரிவித்தது: ஆதிதிராவிடர் மாணவர்களை கல்வியில் முன்னேற்றுவதற்காக அவர்களுக்கு பல்வேறு வசதிகளுடன் கூடிய நலப்பள்ளிகளை அரசு தனியாகப் பிரித்து செயல்படுத்தி வருகிறது.
ஆனால், அந்த பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு போதிய வசதி இல்லாத நிலை மிகவும் வருந்தத்தக்கதாகும் எனத் தெரிவித்தார்.
எனவே, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்கள் தீவளூர் பள்ளியில் உள்ள குறைபாடுகளை களைந்து மாணவர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும், எதிர்பார்ப்பும் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.