கட்டடம் இல்லாததால் மரத்தடியில் படிப்பு: ஆதிதிராவிட நலப்பள்ளியின் அவலம்

ம.புடையூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் போதிய வகுப்பறை மற்றும் அடிப்படை வசதிகள்
Updated on
2 min read

ம.புடையூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் போதிய வகுப்பறை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற பள்ளியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.  வேப்பூர் அருகே ம.புடையூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியில், ம.புடையூர், எழுத்தூர், நல்லூர், ஆலம்பாடி, ஏந்தல், வெங்கனூர், ஆவட்டி மற்றும் கீழச்செருவாய் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில், சரிபகுதிக்கு மேல் மாணவிகளாவர்.

இந்நிலையில், பள்ளியில் போதுமான வகுப்பறை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

இதேபோல், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளும் இல்லாததால் மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.

இது குறித்து ம.புடையூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெங்கட.ராசா என்பவர் தெரிவித்தது:

"ம.புடையூர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி 2012-13-ஆம் கல்வி ஆண்டில் 82 சதவீதம் தேர்ச்சிப் பெற்று விருத்தாசலம் கல்வி மாவட்டத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது. ஆனால், பள்ளியில் போதுமான அடிப்படை வசதி இல்லை என்பதுதான் வேதனைக்குரியது. 6 மற்றும் 7-ஆம் வகுப்பில் தலா 1 பிரிவும், 8 முதல் 10-ஆம் வகுப்பு வரை முறையே 2 பிரிவுகளும், 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் மூன்று பிரிவுகள் உள்பட மொத்தம் 14 பிரிவுகள் உள்ளன.

ஆனால், தற்போது 8 பிரிவுகளுக்கான வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. இதில், 4 வகுப்பறைகளுக்கு மேல் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும், இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.

இதேபோல், அறிவியல் மாணவர்களுக்கு வேதியியல் மற்றும் இயற்பியல் ஆய்வகம் இல்லாததால் வகுப்பறைகளே ஆய்வகமாக பயன்படுத்தப்படுகிறது.

மேலும், ஊராட்சி நிர்வாகம் மூலம் பள்ளிக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு தண்ணீர் தொட்டியில் தேக்கி அதன்மூலம் மாணவர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது.

தற்போது ஊராட்சி குடிநீர் வராததால் தண்ணீர் தொட்டி காட்சிப்பொருளாக உள்ளது. கழிப்பறை வசதிகளும் இல்லாததால் அருகிலுள்ள காட்டுப் பகுதிகளுக்கு சிறுநீர் கழிக்க செல்லவதால் மாணவிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

கல்வி மாவட்ட அளவில் இந்தப் பள்ளி முதலிடம் பெற்றாலும், தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கு ஆசிரியர் இல்லாததால் குறிப்பிட்ட பாடங்களில் மாணவர்கள் தேர்ச்சிப் பெறுவதற்கு சிரமப்படுகின்றனர்.

அரசு உத்தரவின்படி பள்ளி நிலையைப் பொறுத்து குறிப்பிட்ட இடம், விளையாட்டுத் திடல் போன்றவை கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால், அரசுப் பள்ளியிலேயே அதுவும் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியிலேயே விளையாட்டுத் திடல் என்பது வேதனைக்குரியது. இதனால், மாணவர்கள் உற்சாகத்துடன் படிக்கமுடியாத சூழல் நிலவும். மேலும், அரசு சார்பில் வழங்கப்படும் விலையில்லா பொருள்களில் புத்தகங்களைத் தவிர விலையில்லா புத்தகப்பை, குறிப்பேடுகள் உள்ளிட்ட எந்தப் பொருளும் இதுவரை வழங்கப்படவில்லை' என வேதனையுடன் தெரிவித்தார்.

எனவே, தொடர்புடைய ஆதிதிராவிடர் நலத்துறையும், மாவட்ட நிர்வாகமும் ம.புடையூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் உள்ள குறைபாடுகளை நீக்கி கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com