தமிழகத்தில் சிறைகள், நீதிமன்றங்களில் மேலும் 80 இடங்களில் விடியோ கான்பரன்சிங் வசதியை அமைக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.
இதன் மூலம் சிறைத்துறையின் செலவு பெருமளவு குறைவதோடு, கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்படும்போது ஏற்படும் குற்றங்களும் தடுக்கப்படும் என சிறைத்துறையினர் கருதுகின்றனர்.
தமிழக சிறைத்துறையின் கீழ் 9 மத்திய சிறைகள், 3 பெண்கள் சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 94 துணை சிறைகள், 5 சிறப்பு துணை சிறைகள், 12 சிறுவர் சீர்திருத்தப் பள்ளி, 2 திறந்தவெளி சிறைகள் ஆகியவை உள்ளன. இவற்றில் சுமார் 22 ஆயிரம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வது சிறைத்துறை மற்றும் காவல்துறையின் முக்கியப் பணியாக உள்ளது. இதில் முக்கியக் கைதியாக கருதப்படும் நபர்களை அதிக பாதுகாப்போடு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் காவல்துறைக்கு உண்டு. ஆனால் அதையும் தாண்டி அந்த கைதி கொலை செய்யப்படும் சம்பவங்களும், தாக்கப்படும் சம்பவங்களும் அவ்வப்போது ஏற்படுகின்றன.
இதேபோல நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் கைதிகள் தப்பியோடும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுகின்றன. இதோடு மட்டுமன்றி சிறையில் இருக்கும் கைதியை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வதற்கு பெருமளவில் செலவாகிறது. சிறைத்துறையிலும், காவல்துறையிலும் காவலர்கள் பற்றாக்குறை இருக்கும் நிலையில், கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வதற்கு காவலர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றனர். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 10 கோடி வரை செலவாவதாக கூறப்படுகிறது.
இக் காரணங்களால் கைதிகளை விடியோ கான்பரன்சிங் வசதி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வசதியை ஏற்படுத்த அரசு திட்டமிட்டது. இதன் மூலம் பெருமளவு செலவை குறைப்பதோடு, கைதிகளையும் பாதுகாப்பாக ஆஜர்படுத்த முடியும் என அரசு கருதியது. இதன் விளைவாக கடந்த 2004ம் ஆண்டு சிறைகள், நீதிமன்றங்களில் விடியோ கான்பரன்சிங் வசதி அமைக்கப்பட்டு, தொடங்கி வைக்கப்பட்டது.
இதில் 9 மத்திய சிறைகள், பெண்கள் சிறைகள் ஆகியவற்றோடு 64 நீதிமன்ற வளாகங்களில் உள்ள 276 நீதிமன்றங்கள் இணைப்பட்டன. இதன் மூலம் மொத்த வழக்குகளில் 25 சதவீத வழக்கு விசாரணை இப்போது நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சிறைத்துறையின் செலவு ஓரளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
இதை மேலும் குறைக்கும் விதமாக, விடியோ கான்பரன்சிங் வசதியை விரிவாக்க அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்காக அரசு புதிதாக 80 இடங்களில் இந்த வசதியை சிறைகளிலும், நீதிமன்றங்களிலும் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
இதில் எந்தெந்த நீதிமன்றங்களிலும், எந்தெந்த சிறைகளிலும் இதை அமைப்பது என்பது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
அதேநேரத்தில் இதற்காக ஒப்பந்தப் புள்ளியையும் விரைவில் அரசு கோர உள்ளதாக கூறப்படுகிறது. ஒப்பந்தப்புள்ளி விடப்பட்ட ஓரிரு மாதங்களில் இந்த திட்டத்துக்கான பணி தொடங்கப்படும் என சிறைத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி கூறுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.