நெல்லை அருகே வெடிபொருள்கள் பறிமுதல்; 5 பேர் கைது

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17.5 கிலோ வெடிபொருள்கள், 142 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17.5 கிலோ வெடிபொருள்கள், 142 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கும் பாஜக மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ், இந்து முன்னணி மாநிலச் செயலர் வெள்ளையப்பன் ஆகியோர் கொலைகளுக்கும் தொடர்புள்ளதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்து முன்னணி மாநிலச் செயலரான வெள்ளையப்பன் வேலூரில் கடந்த 1-ம் தேதியும், பாஜக மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ், சேலத்தில் கடந்த 19-ம் தேதியும் மர்ம நபர்களால் கொல்லப்பட்டனர்.

இவ்வழக்குகளை விசாரிக்க மாநில குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் தலைமையில் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்பேரில் ஐ.ஜி. மஞ்சுநாதா தலைமையில் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

இக்கொலைகள் தொடர்பாக அபுபக்கர் சித்திக், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகிய 4 பேரின் புகைப்படங்களை போலீஸார் வெளியிட்டனர். அவர்களைப் பற்றி துப்புக் கொடுத்தால் தலா ரூ.5 லட்சம் என ரூ. 20 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருநெல்வேலி மேலப்பாளையத்தில் வெடிபொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறப்பு புலனாய்வுப் பிரிவு டிஎஸ்பி கார்த்திகேயன், ஆய்வாளர்கள் சிவகுமார், நாகராஜன், சாகுல்ஹமீது உள்ளிட்டோர் திருநெல்வேலி மாநகர போலீஸார் உதவியுடன் சனிக்கிழமை இரவு மேலப்பாளையத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது பங்களாப்பா தெருவில் உள்ள வீட்டிலிருந்து 17.5 கிலோ வெடிபொருள்கள் (ஜெலட்டின் குச்சிகள்), 142 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வெடிபொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது வீட்டின் உரிமையாளரான பெண்ணுக்குத் தெரியாது எனக் கூறப்படுகிறது.

அவரது உறவினரான அதே தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அன்வர் பிஸ்மி (20) என்பவர் அந்த பார்சலை கொண்டுவந்து, வெளிநாட்டில் உள்ள நண்பருக்கு அனுப்ப வேண்டும் என்றும், சில நாள்கள் இங்கேயே இருக்கட்டும் என்றும் கூறி பார்சலை அந்த வீட்டில் வைத்தாராம்.

இதையடுத்து அன்வர் பிஸ்மியை போலீஸார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் மேலப்பாளையம் ஆமீன்புரம் 5-வது தெருவைச் சேர்ந்த கெü. முகமது தாசிம் (33), தைக்கா தெருவைச் சேர்ந்த ம. சாகுல் ஹமீது என்ற கட்டை சாகுல் (38), வீரா தெருவைச் சேர்ந்த முகமது சம்சுதீன் (21), குட்டி என்ற நூருல் ஹமீது (22) ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

அவர்களில் முகமது தாசிம், சிறப்பு புலனாய்வுப் பிரிவினரால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பன்னா இஸ்மாயிலின் உறவினர்.

முகமது தாசிம், சாகுல் ஹமீது ஆகிய இருவர் மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 5 பேரையும் பெருமாள்புரம் காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.

வேலூரில் வெள்ளையப்பன் கொலையுண்ட இடத்திலிருந்து பைப் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த வெடிகுண்டுகளுக்கும், மேலப்பாளையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருள்களுக்கும் தொடர்புள்ளதா எனவும், ஆடிட்டர் ரமேஷ், வெள்ளையப்பன் கொலைகளுக்கும், இங்கு கைது செய்யப்பட்டோருக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.

பின்னர், 5 பேரையும் மாலை 6 மணியளவில் திருநெல்வேலி முதலாவது நீதித்துறை நடுவர் ராமலிங்கம் இல்லத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com