வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்: மேலப்பாளையத்தில் 8 இடங்களில் போலீஸ் சோதனை

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக, கைது செய்யப்பட்ட 5 பேரின் வீடுகள் உள்பட 8 இடங்களில் சி.பி.சி.ஐ.டி. சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர்.
வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்: மேலப்பாளையத்தில் 8 இடங்களில் போலீஸ் சோதனை

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக, கைது செய்யப்பட்ட 5 பேரின் வீடுகள் உள்பட 8 இடங்களில் சி.பி.சி.ஐ.டி. சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர்.

மேலப்பாளையத்தில் ஒரு வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 17.5 கிலோ வெடிபொருள்கள் மற்றும் 142 எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்களை சி.பி.சி.ஐ.டி. சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் கடந்த சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முகமது தாசிம் (33), சாகுல் ஹமீது என்ற கட்ட சாகுல் (38), அன்வர் பிஸ்மி (20), முகமது சம்சுதீன் (21), குட்டி என்ற நுருல் ஹமீது (22) ஆகிய 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

இவர்களில் முகமது தாசிம் மற்றும் கட்ட சாகுல் ஆகிய இருவருக்கும் பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பது போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. சேலத்தில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ், வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலர் வெள்ளையப்பன் ஆகியோர் கொலைகளில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக 5 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, அவர்களை போலீஸ் காவலில் எடுப்பதற்கான நடவடிக்கையில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலியில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போலீஸ் காவலில் எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

வீடுகளில் சோதனை: இந்நிலையில், மேலப்பாளையத்தில் 8 இடங்களில் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். சி.பி.சி.ஐ.டி. ஆய்வாளர் பிறைச்சந்திரன், சிறப்புப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நாகராஜன், ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் இந்தச் சோதனையை நடத்தினர்.

இந்த 8 இடங்களிலும் இருந்தவர்களிடம் விசாரணை நடத்திய போலீஸார், அங்கிருந்தவர்கள் வைத்திருந்த அனைத்து செல்போன்களையும் பரிசோதித்து, விவரங்களைப் பதிவு செய்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com