சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு: முக்கிய எதிரி "போலீஸ்' பக்ருதீன் பிடிபட்டார்

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய எதிரியான "போலீஸ்' பக்ருதீன் என்று அழைக்கப்படும் பக்ருதீன் வெள்ளிக்கிழமை பிடிபட்டார்.
சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு: முக்கிய எதிரி "போலீஸ்' பக்ருதீன் பிடிபட்டார்

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய எதிரியான "போலீஸ்' பக்ருதீன் என்று அழைக்கப்படும் பக்ருதீன் வெள்ளிக்கிழமை பிடிபட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ரமேஷ், சேலத்தில் கடந்த ஜூலை 19-ஆம் தேதி இரவு அவரது அலுவலகத்தின் முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை குறித்து சேலம் மாநகர போலீஸார் விசாரணை செய்தனர். வழக்கின் முக்கியத்துவம் கருதி, விசாரணை சி.பி.சி.ஐ.டி. சிறப்புப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் தனிப்படை போலீஸார் வழக்கை விசாரித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகவும், பெங்களுரில் பாஜக அலுவலகம் அருகே வெடிகுண்டு வைத்த வழக்கு, மதுரையில் அத்வானி செல்லவிருந்த பாதையில் வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவம் ஆகியவை தொடர்பாகவும் மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த போலீஸ் பக்ருதீன் (35), பிலால் மாலிக் (25), திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த பன்னா இஸ்மாயில் (38), நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் (45) ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர்.

மேலும் தேடப்படும் 4 பேரையும் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ. 20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் டி.ஜி.பி. அலுவலகம் அறிவித்தது.

துப்பாக்கி முனையில் பிடிப்பட்டார்:

இந்நிலையில் சென்னை பெரியமேடு பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருப்பதி திருக்குடை ஊர்வலத்துக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதற்காக முக்கியமான பகுதிகளில் மாநில உளவுப்பிரிவு போலீஸார், மதவாத தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார், க்யூ பிரிவு போலீஸார், ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வுப் பிரிவு போலீஸார் ஆகியோர் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சூளையில் ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வுப்பிரிவு போலீஸார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நிற்பதை பார்த்தனராம்.

உடனே அந்த நபரை அப் பிரிவின் இன்ஸ்பெக்டர் பிடிக்க முயன்றதாகத் தெரிகிறது.

ஆனால் அந்த நபர், இன்ஸ்பெக்டரை தள்ளிவிட்டு ஓட முயன்றாராம்.

இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த இன்னொரு இன்ஸ்பெக்டர் துப்பாக்கி முனையில், அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தார்.

அவரிடம் விசாரணை செய்ததில், அவர் போலீஸாரால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தேடப்படும் போலீஸ் பக்ருதீன் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸார் அவரை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பக்ருதீனின் கூட்டாளிகள் யாரேனும் சென்னையில் இருக்கின்றனரா என போலீஸார் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com