நிராகரிக்கப்பட்ட தமிழன்...

ஓரு காலத்தில் அந்த அழுக்கேறிய திரைகளுக்குள் வந்து போன உருவங்களில் வெறுமனே ஒளி பிம்பங்கள் மட்டுமா இருந்தன? எவ்வளவு கனவு? எவ்வளவு ஆசை? எவ்வளவு சந்தோஷம்? எவ்வளவு வியப்பு? எவ்வளவு விடுதலை? எத்தனை காதல்? எளிய மனிதர்களின் வாழ்க்கையல்லவா அந்த ஒளி வெள்ளத்தில் சுருள் சுருளாகச் சுற்றிக்கொண்டு இருந்தது.
Updated on
3 min read

ஓரு காலத்தில் அந்த அழுக்கேறிய திரைகளுக்குள் வந்து போன உருவங்களில் வெறுமனே ஒளி பிம்பங்கள் மட்டுமா இருந்தன? எவ்வளவு கனவு? எவ்வளவு ஆசை? எவ்வளவு சந்தோஷம்? எவ்வளவு வியப்பு? எவ்வளவு விடுதலை? எத்தனை காதல்? எளிய மனிதர்களின் வாழ்க்கையல்லவா அந்த ஒளி வெள்ளத்தில் சுருள் சுருளாகச் சுற்றிக்கொண்டு இருந்தது.

இப்போது சிலர் சினிமாவை "வெறும் பொழுதுபோக்கு' என்று சொன்னால் அப்படி பதறுகிறது மனசு. அன்றைய நாள்களில் கொண்டாட்டமாக, கண்ணீராக, அரசியலாக, பக்தியாக, காதலாக, கண்ணீராக, நீந்தும் நினைவின் கடலாக இருந்தது சினிமாவைக் காட்டிய திரையரங்குகள். அந்தத் திரையரங்கத்துக்கான முதல் விதையை தமிழகத்தில் விதைத்தவர் சுவாமிக்கண்ணு வின்சென்ட்.

தமிழர்களுக்குத் தங்கள் சினிமா குறித்து எப்போதுமே ஒரு பெருமிதம் உண்டு. அந்தப் பெருமிதத்துக்கான முதல் விதை சுவாமிக்கண்ணு வின்சென்ட். சினிமா எனும் அற்புதக் கலையைத் தமிழகத்துக்கு அறிமுகம் செய்து வைத்த வின்சென்ட், தான் வாழும் காலம் முழுவதும் அங்கீகாரம் மறுக்கப்பட்டு தன் சினிமாக் கனவுகளை சராசரி வாழ்க்கைக்குத் தின்னக் கொடுத்தவர். மலையாள சினிமாவின் பிதாமகன் என தமிழகத்தைச் சேர்ந்த ஜே.சி.டேனியலை முதலில் அங்கீகரிக்க மறுத்தாலும், அவரை இன்று கேரளம் கொண்டாடுகிறது. ஆனால், துளிகூட வின்சென்ட் பற்றிய நினைவுகளை நாம் கிளறுவதில்லை. அவ்வளவு ஏன்? அறிந்து கொள்ளவேயில்லை.

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வரும் இவ்வேளையில், தென்னிந்தியாவில் முதல் சினிமா விதையை விதைத்த சுவாமிக்கண்ணு வின்சென்ட்டை, ஒரு துளிகூட நாம் நினைத்துப் பார்க்கவில்லை என்பதுதான் வருத்தம்.

1895-ஆம் ஆண்டு லூமியர் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சினிமாவை, அடுத்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் பார்த்தோம் என்றால் நம்ப முடிகிறதா? அந்தக் காலங்களில் திரையரங்குகள் கிடையாது. சினிமா காட்டும் இயந்திரங்களை மாட்டு வண்டிகளில் கட்டிக்கொண்டு ஊர் ஊராகச் சென்று படம் காட்டும் முறைதான் இருந்தது. அதுவும் இரண்டு, மூன்று நிமிஷங்கள் ஓடக்கூடிய மௌனப் படங்கள்தான். இந்தச் சூழலில், திரையிடும் கருவியைத் தனது தோள்களில் சுமந்துகொண்டு தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் கொண்டு சென்று சலனப்படத்தைக் காட்டி தமிழர்களுக்கு முதல் சினிமா சலசலப்பைக் கொடுத்தவர் சுவாமிக்கண்ணு.

இன்று கியூப், யு.எப்.எக்ஸ்., டிஜிட்டல் சினிமா என தொழில்நுட்ப வளர்ச்சியில் சினிமா நாளுக்கு நாளுக்கு வளர்ந்து கொண்டிருந்தாலும், ஆரம்ப காலத்தில் திரையரங்குகளில் பயன்படுத்தப்பட்ட புரொஜக்டர்களுக்கான முதல் தென்னிந்திய டீலர் சுவாமிக்கண்ணு.

1883-ஆம் ஆண்டு கோவையில் எளிமையான குடும்பத்தில் பிறந்து, வளர்ந்த வின்சென்ட்டின் கனவுகள் எல்லாம் அசாத்தியமானவை. 1905-ஆம் ஆண்டில் திருச்சி பொன்மலை ரயில் நிலையத்தில் சுவாமிக்கண்ணுவுக்கு வேலை. அப்போதெல்லாம் தொடர்ச்சியான ரயில் பயணங்கள் கிடையாது. இரண்டு, மூன்று நாள்கள் தங்கியே ரயிலை பிடிக்க வேண்டும். அப்படி பொன்மலை ரயில் நிலையத்துக்கு வந்தார் நாடு விட்டு நாடு சென்று படம் காட்டி வந்த பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த டூபான். இலங்கைக்குச் சென்று படம் காட்டிவிட்டு வந்த டூபான், பொன்மலை ரயில் நிலையத்தில் மூன்று நாள்கள் தங்க நேரிட்டது. அப்போது டூபானுடன் வின்சென்ட்டுக்கு பழக்கம் ஏற்பட்டது. இது என்ன? அது என்ன? என்று வின்சென்ட் கேள்விகள் எழுப்ப, திரைப்படம் காட்டும் வித்தையைச் சொல்லிக் கொடுத்தார் டூபான். வின்சென்ட்டுக்கு இருந்த ஆர்வத்தை பார்த்த டூபான், அந்தக் கருவிகளை வின்சென்ட்டுக்கு விற்பதாகக் கூறினார். அதன் பின்தான் ஆங்கிலேயர்களுக்கு சாத்தியப்பட்ட சினிமாவைத் தமிழர்களுக்கும் காட்ட வேண்டும் என்பதை தன் லட்சியமாக உயர்த்தி பிடித்தார் வின்சென்ட்.

வின்சென்ட்டிடம் அவ்வளவு பணம் இல்லை. தன் சகோதரியின் நகைகளை விற்று ரூ.2,000-க்கு சினிமா காட்டும் உபகரணங்களை வாங்கினார். பின்பு, கோவைக்கு வந்த வின்சென்ட் தன்னிடம் இருந்தவற்றைக் கொண்டு, நண்பர்களின் உதவிபெற்று "எடிசன் சினிமாட்டோகிராப்' என்ற திரைப்படம் காண்பிக்கப்படும் நிறுவனத்தை ஆரம்பித்தார். அங்குதான் தமிழ் சினிமாவுக்கான முதல் விதை ஊன்றப்பட்டது.

தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பம் தெரிந்த கலைஞர்கள் இல்லாமல் பெரிதும் சிரமப்பட்டார். எதிர்பார்த்ததை விட அதிகம் செலவு பிடித்தது. செலவுகளுக்காக மேலும் பலருடைய உதவிகளை நாடினார்.

சினிமா மீது இருந்த காதலால் தன் ரயில்வே வேலையை உதறிவிட்டு, பல ஊர்களுக்குச் சென்று "இயேசுவின் வாழ்க்கை' என்ற படத்தை வெளியிட்டு காண்பித்தார். தொடர்ந்து லூமியர் சகோதர்கள் தயாரித்த "ரயிலின் வருகை' (ரயில் ஒன்று நிலையத்தில் வந்து நிற்பதுதான் மொத்தப் படமே. அதைப் பார்த்த மக்கள் ரயில் தம் மீது மோதி விடும் என்று அலறி அடித்துக் கொண்டு ஓடினராம்). அதைத் தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வரும் துண்டுப் படங்களை தமிழகம் முழுவதும் சுற்றித் திரையிட்டுக் காட்டியிருக்கிறார்.

தொடர்ந்து மௌனப்படங்களாக வந்து கொண்டிருந்ததால், சில நவீனங்களைப் புகுத்தத் தொடங்கினார் வின்சென்ட். கிராமபோன் மூலம் பின்னணி இசையைக் கோர்த்து தமிழ் சினிமாவில் முதல் தொழில்நுட்பத்தைப் புகுத்தினார். தமிழகத்தின் கிராமங்கள்தோறும் சினிமாவை எடுத்துச்சென்ற வின்சென்ட்டின் தொழில் நாளுக்கு நாள் விரிவடைந்தது.

நிரந்தரத் திரையரங்குகள் உருவான பின்னர் மும்பையில் தயாரான "ஹரிச்சந்திரா' போன்ற புராணப் படங்கள் சென்னையில் திரையிடப்பட்டன. இத்திரைப்படங்களுக்கு கிடைத்த வரவேற்பையடுத்து ஆர்.நடராஜ முதலியார் இந்தியா ஃபிலிம் கம்பெனி எனும் நிறுவனத்தை நிறுவி 1916-ஆம் ஆண்டில் "கீசகவதம்' என்ற படத்தைத் தயாரித்தார். தமிழர் நடராஜ முதலியார் தயாரித்த இப்படத்தை ஒரு தமிழராக முதலில் தன் திரையரங்கில் திரையிட்டார் சுவாமிக்கண்ணு வின்சென்ட்.

கோவையில் பெரும் பண வசதி படைத்தவராக வளர்ந்துவிட்ட வின்சென்ட், தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட டூரிங் டாக்கீஸýகளை அமைத்தார். மின் வசதி கொண்ட முதல் டெண்ட் கொட்டகையை அமைத்த பெருமையும் வின்சென்ட்டையே சாரும்.

சென்னையில் "எடிசன் சினி கிராண்ட்' என்ற மின் வசதி கொண்ட டெண்ட் கொட்டகையைத் தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக "வெரைட்டி ஹால்' என்ற பெயரில் கோவையில் முதல் திரையரங்கை உருவாக்கினார். 1914-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இத்திரையரங்கம் உரிமையாளர் மாறினாலும் இன்றைக்கும் "டிலைட்' என்ற பெயரில் இயங்கி வருகிறது.

இதையடுத்து "பதே' எனும் சினிமா புரொஜக்டர்களை நாடு முழுவதும் விற்பனை செய்யத் தொடங்கினார். பின்னர் சினிமா தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார். சினிமா உலகத்தைத் தாண்டியும் பல துறைகளில் முத்திரை பதித்தார் வின்சென்ட்.

சினிமாவை தென்னிந்தியாவில் வெற்றிகரமான தொழிலாக முன்னெடுத்து வந்த வின்சென்ட், கோவைக்கு முதன்முதலாக மின்சாரத்தைக் கொண்டு வந்தார். திரைப்பட விளம்பர போஸ்டர்களை அடிக்க மின் அச்சகத்தை உருவாக்கினார்.

ஆலைகளுக்கு மின்சாரம்போக மீதம் உள்ள மின்சாரத்தை மக்கள் பயன்படுத்தவும் உதவினார். ஏழை மாணவர்களின் கல்வி, எளியவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு, தொழிலாளர்களுக்கு பக்க பலம் என மனிதாபிமானத்தோடு வாழ்ந்தார். 1942-ஆம் ஆண்டு வின்சென்ட் மரணம் அடைந்தார்.

அதன் பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அவரது குடும்பம் நலிவுற்றது. அவரது மறைவுக்குப் பிறகு அடமானம் வைக்கப்பட்ட அவரது சொத்துகள் அனைத்தும் பறிபோயின. வின்சென்ட்டின் மகன் வழி பேத்தி ஷீலா, பேரன் வின்பிரட் ஆகியோர் இன்றைக்கும் கோவையில் சராசரி வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

இழந்த உறவுகள், சிதைந்த மனங்கள், மீளாத கனவுகள் என ஒவ்வொரு தருணத்திலும் இன்று நாமெல்லாம் கொண்டாடிக் குதூகலிக்கிற சினிமாவை முன்னெடுத்து வந்த சுவாமிக்கண்ணு வின்சென்ட்டுக்கு வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி பிறந்த நாள். ஆனால், அவரைப் பற்றிய சிறு குறிப்புகூட நம் மக்களிடம் இல்லை. குறைந்தபட்சம் வருடத்துக்கு ஒருமுறையாவது அவரை ஞாபகப்படுத்தும் தினத்தைக்கூட நாம் அனுசரிக்கத் தயாராக இல்லை.

டி.டி.யில் இருந்து டி.வி.டி. வரை வந்து இப்போது டி.டி.ஹெச்-இல் வீட்டுக்குள் ரிலீஸ் ஆகப் போகிறது சினிமா.

முதல்வர்களை உருவாக்கிய கவர்ச்சிகர சினிமா, நாம் கனவே காண முடியாத இடத்தில் இருந்த சினிமா, இன்று எல்லோருக்கும் சாத்தியப்பட்டுவிட்டது. கட்டபொம்மன், வாஞ்சிநாதன் தொடங்கி பலரையும் நினைவுபடுத்தி வைத்திருக்கும் சினிமா, தமிழர்களின் நிரந்த அடையாளமான சினிமாவைத் தொடக்கி வைத்த சுவாமிக்கண்ணு வின்சென்ட்டை நினைவுகூராமல் போனதுதான் சோகம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com