
திருப்புவனம் அருகே 300 ஆண்டுகள் பழமையான பிற்கால எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு தொல்லியல் துறையினரால் கண்டெடுத்து படியெடுக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பழையனூர் கிராமத்தில் வசித்து வரும் கல்லூரி மாணவர் யூ.ஆசைமணி கொடுத்த தகவலின் படி பழையனூர் கண்மாய்க் கரையில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான பிற்கால எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு தொல்லியல் துறையினரால் கண்டெடுத்து படியெடுக்கப்பட்டது.
இக்கல்வெட்டு பற்றி மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் ராஜேந்திரன், செயலர் சொ.சாந்தலிங்கம், வரலாற்று ஆய்வாளர் ஆத்மநாதன் ஆகியோர் கூறியது:
300 ஆண்டுகளுக்கு முன்பு பழையனூரில் உள்ள கைலாசநாதர் கோயிலுக்கு சக வருடம் 1717-ஆம் ஆண்டு சேதுபதி காத்த ரெகுநாத சேதுபதிக்காக உடையத்தேவரால் தேவதானமாக நிலம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பகுதியில் உள்ள திருச்சுழி சிவன் கோயில், கல்வி மடை திருநாகேசுவரர் கோயில் உள்ளிட்ட சிவத்தலங்களை சேதுபதி மன்னர்கள் பராமரித்து வந்துள்ளனர்.
அந்த வகையில், சமகாலத்தில் பழையனூரில் கைலாசநாதர் கோயிலை பராமரிக்கும் நோக்கில் தேவதானமாக நிலத்தை தானமாக கொடுத்திருக்கலாம். ஆனால், தற்போது இந்த கல்வெட்டு மட்டுமே கிடைத்துள்ளது. கோயிலும், நிலமும் இயற்கை சீற்றம் அல்லது சரியான பராமரிப்பு இன்மையால் அழிந்து போயிருக்கலாம்.
மேலும், மதுரையிலிருந்து ராமேசுவரம் செல்வதற்கு திருப்புவனம், காளையார்கோவில், திருவாடானை போன்ற வணிக பெருவழிகள் பயன்படுத்தப்பட்டன. அதேபோன்று மதுரை, பழையனூர், மானாமதுரை ஆகிய ஊர்களின் வழியாக ராமேசுவரம் செல்வதற்கு வணிக பெருவழியாக இருந்திருக்கலாம் என்றனர்.
இக்கல்வெட்டு தமிழக தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.