கார் கண்ணாடிகள் உடைப்பு: தனியரசு எம்எல்ஏ உள்பட 15 பேர் மீது வழக்கு

பள்ளிபாளையம் அருகே கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி நிர்வாகிகளின் கார் கண்ணாடிகள் உடைத்ததாக உ.தனியரசு எம்எல்ஏ உள்பட கொங்கு வேளாள இளைஞர்
Updated on
2 min read

பள்ளிபாளையம் அருகே கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி நிர்வாகிகளின் கார் கண்ணாடிகள் உடைத்ததாக உ.தனியரசு எம்எல்ஏ உள்பட கொங்கு வேளாள இளைஞர் பேரவை நிர்வாகிகள் 15 பேர் மீது போலீஸôர் வழக்குப்பதிவு செய்தனர். தவிர, இப்பிரச்னை தொடர்பாக மறியலில் ஈடுபட்டு போக்குவரத்து இடையூறு செய்ததாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு சேலம், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த கொமதேக நிர்வாகிகள் 10க்கும் மேற்பட்ட கார்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஊர் திரும்பினர். பள்ளிபாளையம் அருகே வெடியசரசம்பாளையம் அருகே சென்ற போது மர்மகும்பல் கல், மதுபான பாட்டில்களைக் கொண்டு அந்த கார்களை தாக்கிவிட்டு தப்பியோடியது. இதில், 6 கார்களின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.

இதுகுறித்து தகவலறிந்தும் போலீஸார் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து கொமதேக கட்சியினர் வெடியசரம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால், ஈரோடு - சேலம் வழித்தடத்தில் ஒரு மணிநேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினார். புகார் அளிக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததை அடுத்து அக்கட்சியினர் மறியலை கைவிட்டு பள்ளிப்பாளையம் காவல்நிலையத்துக்குச் சென்றனர்.

அங்கு கொமதேக கட்சியின் சங்ககிரி ஒன்றிய இளைஞரணி துணைச்செயலர் கௌதமன், கார் கண்ணாடிகளை கற்கள், மதுபாட்டில்கள், இரும்பு கம்பிகளால் உடைத்து தாக்கியதாக சட்டப்பேரவை உறுப்பினர் உ.தனியரசு உள்பட கொங்கு வேளாள இளைஞர் பேரவை நிர்வாகிகள் 15 பேர் மீது புகார் மனு அளித்தார். எனினும், அப்புகார் மீது நீண்ட நேரமாகியும் போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கொமதேக கட்சியினர் இரவு 10 மணி முதல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து நள்ளிரவு 12 மணியளவில் பள்ளிப்பாளையத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், காவல்நிலையத்தை முற்றுகையிட்டிருந்த கொமதேக நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினார். தொடர்ந்து, கொமதேகவினரின் புகார் அடிப்படையில் எம்எல்ஏ உ.தனியரசு உள்பட கொங்கு வேளாள இளைஞர் பேரவை நிர்வாகிகள் 15 பேர் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, நள்ளிரவு 2 மணியளவில் கொமதேக கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே, இப்பிரச்னை தொடர்பாக சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக கொமதேக நிர்வாகிகள் 10 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து, கொங்கு வேளாள இளைஞர் பேரவையைச் சேர்ந்த 9 பேரும், கொமதேகவினர் 9 பேரும் கைது செய்யப்பட்டு திருச்செங்கோடு சார்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்காரணமாக, திருச்செங்கோடு பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com