இயற்கை அன்னையின் கொடையான குற்றாலத்தைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், சிறந்த சுற்றுலாத் தலமாக்கவும் மிகப்பெரிய திட்டங்களைத் தீட்டி நிறைவேற்ற வேண்டும் என, சுற்றுலாப் பயணிகளும், இயற்கை ஆர்வலர்களும் விரும்புகின்றனர்.
குற்றாலம் என்றாலே மெல்லிய சாரலும், மிதமான வெயிலும், குளிர்ந்த காற்றும், அருவிக் குளியலும்தாம் நினைவுக்கு வரும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக குற்றாலம் பகுதியில் நிலவிய பல்வேறு குறைபாடுகள், சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்பட்ட இடையூறுகளைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குரைஞர் ஒருவர் வழக்குத் தொடர்ந்ததையடுத்து, குற்றாலம் அருவிகளைப் பாதுகாக்கவும், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதியும் பல்வேறு விதிமுறைகளைப் பிறப்பித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் வனப் பகுதிகள், அருவிகளைப் பாதுகாக்க தனி ஆணையம் அமைக்கப்படும் என, தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். குற்றாலத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களையும் முதல்வர் அறிவித்துள்ளார்.
உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து அருவிகளில் எண்ணெய், சோப்பு, ஷாம்பு பயன்படுத்துவது, அருவிப் பகுதிகளில் துணிகளைத் துவைப்பது முற்றிலுமாகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பல மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதிகரிக்கும் பயணிகள்: ஆண்டுதோறும் குற்றாலத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு 37 லட்சம் சுற்றுலாப் பயணிகளும், 2012-ஆம் ஆண்டில் 50 லட்சம் பேரும், கடந்த ஆண்டில் 70 லட்சத்து 70 ஆயிரம் பேரும் இங்கு வந்து சீசனை அனுபவித்துள்ளனர்.
குற்றாலத்துக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டில் 31 ஆயிரம் பேரும், 2012-ஆம் ஆண்டு 34 ஆயிரம் பேரும், கடந்த ஆண்டில் 38 ஆயிரத்து 929 பேரும் வந்து குற்றாலத்தின் அழகைக் கண்டு ரசித்துள்ளனர்.
ஆனால், இங்கு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான பொழுதுபோக்கு அம்சங்களோ, தங்குமிடங்களோ, தரமான உணவுகளோ இல்லை என்பதே உண்மை.
எதிர்காலச் சந்ததியினரும் மூலிகைகள் கலந்த அருவிகளில் குளித்து மகிழவும், இயற்கையை பேணி பாதுகாக்கவும், சிறந்த சுற்றுலாத் தலமாக குற்றாலத்தை மாற்றவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் விரும்புகின்றனர்.
என்னென்ன தேவை? குற்றாலம் பகுதியில் இயற்கை அழகுமிக்க இடங்களில் மரங்களை அழித்து தனியார் விடுதிகள் அமைப்பது பெருகி வருகிறது. இதனால் இயற்கை வனப்பு அழிவதுடன், மழைவளமும் குறைகிறது. இதற்கு கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதுடன், மரங்களை வெட்டவும் தடை விதிக்க வேண்டும். மாறாக, அதிக அளவில் மரங்களை நடுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இப்பகுதியில் புகழ்பெற்ற ஏராளமான கோயில்கள் உள்ளன. குற்றாலம் குற்றாலநாதர் கோயில், சித்திரசபை, புளியரை தெட்சிணாமூர்த்தி, தென்காசி காசிவிசுவநாதர் கோயில், கடையநல்லூர் ஆஞ்சநேயர் கோயில், திருமலைக்கோவில், ஆய்க்குடி பாலசுப்பிரமணியசுவாமி கோயில், இலஞ்சி திருவிலஞ்சிக்குமாரர் கோயில் ஆகிய கோயில்களை இணைத்து ஆன்மிகச் சுற்றுலாவுக்கு நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
இப்பகுதியில் குண்டாறு அணை, அடவிநயினார் அணை, கருப்பாநதி அணை ஆகிய அணைகள் உள்ளன. அணைகள் அமைந்துள்ள பகுதியில் பூங்காக்களும் உள்ளன. இந்தப் பூங்காக்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டால் சுற்றுலாப் பயணிகள் இப்பகுதியில் தங்களுடைய குழந்தைகளுடன் பொழுது போக்குவதற்கு ஏற்ற இடமாக அமையும்.
இப்பகுதிகள் அனைத்தையும் இணைக்கும் வகையில் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தரமான சாலைகள் அமைக்க வேண்டும். குற்றாலம் பேரூராட்சிக்குச் சொந்தமான பாழடைந்த தங்கும் விடுதிகளை முழுமையாக அகற்றிவிட்டு, தரமான தங்கும் விடுதிகளை அமைக்க வேண்டும்.
வெளிநாட்டினரைக் கவரும் வகையில், நட்சத்திர அந்தஸ்து கொண்ட தங்கும் விடுதிகளை அமைக்க வேண்டும். உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளின் தரத்தை அவ்வப்போது சோதனை செய்து தரமான உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சுற்றுச்சூழல் பூங்கா: மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கையை ரசிக்கும் வகையில் விஞ்ச் இயக்கலாம். வாகன நெரிசலைத் தவிர்க்க நகருக்கு வெளியே மல்டிலெவல் வாகன நிறுத்துமிடம் அமைத்து, அங்கேயே வாகனங்களை நிறுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஐந்தருவியில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் பூங்கா பரந்து விரிந்து அமைந்துள்ளதால், சிறுவர்கள், முதியவர்களால் நடந்து சென்று அனைத்துப் பகுதிகளையும் பார்க்க முடிவதில்லை. எனவே, சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் பூங்காவில் பேட்டரியால் இயங்கும் வாகனத்தை இயக்க வேண்டும். சிறுவர், சிறுமிகளைக் கவரும் விளையாட்டு சாதனங்கள், சிறுவர் ரயில் ஆகியவற்றை நிறுவ வேண்டும். பறவைகள் பூங்கா, மீன்காட்சியகம், இசை நீரூற்று போன்றவற்றை பூங்காக்களில் அமைப்பதன் மூலம் கூடுதலாக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும். மேலும், சில இடங்களில் இ-டாய்லெட் போன்ற கழிவறைகளை அமைத்தால் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதியாக அமையும்.
அம்மா உணவகம் அமைக்கப்படுமா? குற்றாலத்துக்கு மற்றொரு பெயர் "ஏழைகளின் ஊட்டி'. இங்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலோனோர் அதிகாலையில் இங்கு வந்து குளித்து மகிழ்ந்துவிட்டு இரவில் திரும்பிவிடுவர் அல்லது மறுநாளே சென்றுவிடுவர். எனவே, இங்கு அம்மா உணவகம், அரசு மருத்துவமனை, அம்மா மருந்தகம் போன்றவை அமைக்க வேண்டும் என்பது அனைவருடைய விருப்பமாகும்.
குற்றால மேம்பாடு குறித்து தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினர் வசந்தி முருகேசன் எம்.பி. கூறுகையில், குற்றாலத்தை இந்திய சுற்றுலா வரைபடத்தில் இடம்பெறச் செய்வதற்கு மக்களவைக் கூட்டத்தில் பேசியுள்ளேன். அவ்வாறு இடம்பெறும்பட்சத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு திட்டங்களை அமல்படுத்த முடியும் என்றார்.
தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.சரத்குமார் கூறுகையில், குற்றாலத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது குறித்து தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளேன். தற்போது பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் சில திட்டங்களை முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.